ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: மத்திய அரசுக்கு செயலலிதா வற்புறுத்தல்
இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத்தண்டிக்க, ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் செயலலிதா வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில், ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாதுரைக்கு மறுமொழி அளித்து முதல்வர் செயலலிதா பேசியது:
“இலங்கைத் தமிழர்கள் சிக்கல் பற்றி உறுப்பினர்கள் இங்கே பேசினார்கள். எங்களைப் பொருத்த வரையில், இலங்கை உள்நாட்டுப் போரில் பன்னாட்டுப் போர் நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டவர்களைப் போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்.
இனப் படுகொலையை நடத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; தமிழ் ஈழம் குறித்து இலங்கையிலும் வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை நாட்டில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும்; இலங்கை வீரர்கள் எவருக்கும் படைப் பயிற்சியை இந்தியாவில் அளிக்கக் கூடாது; இலங்கை நாட்டுடனான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்பனவற்றில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவை தொடர்பில் பல்வேறு காலக் கட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. எந்த ஒரு தீர்மானத்தின் மீதும் மத்திய அரசு இது நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு அப்போது ஆதரவு அளித்த தி.மு.க.வும் வாய் மூடி அமைதிதான் காத்தது. பொதுவள ஆயமாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும், மத்திய அரசு வெளியுறவுத் துறை அமைச்சரை அந்த மாநாட்டிற்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளது என்பதை அறிந்து;
கடைசி முயற்சியாக, மாநாடு கூடுவதற்கு இரு நாட்கள் முன்பு இந்த மாமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, பொதுவள மாநாட்டில் இந்தியா சார்பாக எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தினை நிறைவேற்றினோம்.
இந்தத் தீர்மானத்தினை, தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வினை முற்றிலும் புறக்கணிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கையில் நடைபெற்ற பொதுவள மாநாட்டில் கலந்து கொண்டார். மத்திய அரசின் இந்தச் செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த ஆண்டு மார்ச்சு ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக நான்கு நாடுகள் தீர்மானம் கொண்டு வரப்போவதாகச் செய்திகள் வந்துள்ளன.
எங்களைப் பொருத்த வரையில், இனப் படுகொலையை நிகழ்த்தியவர்களைத் தண்டிக்க, இந்தியாவே,தனித்
தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக கொண்டு வந்து அதற்கு ஆதரவாக மற்ற நாடுகளை வாக்களிக்க வைத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய காங்கிரசுக் கூட்டணி அரசு இதனை உறுதியாக நிறைவேற்றாது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அப்போது ஆட்சி மாறும். காட்சிகளும் மாறும். மத்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கக் கூடிய நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும். அப்போது, ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து, அதனை வெற்றி பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் முதல்வர் செயலலிதா
Leave a Reply