கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குக்
கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு

கம்பம். ஆக.19. கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறுவர் கதை நூலுக்கு, கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான சிறப்புப் பரிசினை வழங்கியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வரும் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 14 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி வருகிறது.

2018-ஆம் ஆண்டு வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகளை வழங்கும் விழா, கம்பம் காந்தி பூங்காத் திடலில் கடந்த ஆடி 30 / ஆகத்து 15 மாலை நடைபெற்றது.

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் சோம.பாரதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘இந்து தமிழ் திசை’யின் நடுப்பக்க ஆசிரியர் சமசு, பதிப்பாளர் இரவி தமிழ்வாணன், ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.

பரிசு பெற்ற படைப்பாளிகளையும் சிறப்பு விருந்தினர்களையும் நகரின் முதன்மை வீதிகள் வழியாக, வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வந்து, விழா மேடையில் பரிசு வென்ற படைப்பாளிகளை அமர வைத்து, அவர்களுக்குப் பாரதி தலைப்பாகை சூடி, பின்னர் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. இந்தப் புதுமையான விழா,
படைப்பாளர்கள் எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான முன் எடுத்துக்காட்டு விழாவாக அமைந்தது.

இந்த விழாவில், 2018-ஆம் ஆண்டு வெளியான சிறுவர் இலக்கிய நூல்களில் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சிறப்புப் பரிசினை ‘கிழக்கு வாசல் உதயம்’ ஆசிரியர், எழுத்தாளர் உத்தமசோழன் வழங்கினார்.

விழாவில், ‘இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன், ‘சிகரம்’ ஆசிரியர் பழ.அன்புநேசன், ‘புதுகைத் தென்றல்’ ஆசிரியர் புதுகை மு.தருமராசன், எழுத்தாளர்கள் வே.முத்துக்குமார், அண்டனூர் சுரா, ப.திருமலை ஆகியோரும் பாராட்டப் பெற்றனர்.