கவிஞர் மு.முருகேசு எழுதிய ’தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ எனும் சிறுவர் கதை நூலுக்கு, ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது.

சென்னையிலிருந்து கடந்த 47 ஆண்டுகளாக வெளிவரும் ’கவிதை உறவு’ இதழின் சார்பில் சிறந்த நூல்களுக்குப் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆண்டுதோறும் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

  2018- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை (மே.18) அன்று நடைபெற்றது.

  இவ்விழாவிற்கு,  மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார்.

கவிஞர் தமிழியலன் அனைவரையும் வரவேற்றார்.

 2018-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் சிறுவர் இலக்கியப் பிரிவில் சிறந்த நூலாக கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக்குருவியும் தங்கராசு மாமாவும்’  எனும் நூல் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையைத் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் வழங்கினார்.

  சிறுவர் கதை நூலுக்கான முதல் பரிசினைப் பெற்றுள்ள கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச்  சங்கத்தின் அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, கலை இலக்கியப் பணிகளைத்  தொடர்ந்து செய்து வருகிறார். இதுவரை 43-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர்  இலக்கியம், திறனாய்வு நூல்களைப் படைத்துள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கிய பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.