‘காலத்தின் குறள் பெரியார்’ 

நூல் வெளியீட்டு விழா

மார்கழி 07, 2048 வெள்ளி

திசம்பர் 22,2017 மாலை 6.00

தே.ப.ச. (இக்சா) மையம், சென்னை 600008

நூல் வெளியீட்டுச் சிறப்புரை:  பேரா.சுப.வீரபாண்டியன்

 

அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும்,

வணக்கம்.

தமிழரசன் (எ) வேலரசு ஆகிய நான் கடந்த 24.12.2015 (பெரியார் 42 ஆம் நினைவுநாள்) தொடங்கி 2016 சூன் திங்கள் வரை ‘அய்யாமொழி பொய்யாமொழி’ என்கிற தலைப்பில் குறள் வெண்பா இலக்கணத்தில் 440 புதுக்குறள்கள் என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வந்தேன். பதிவிட்ட காலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது என் குறட்பாக்கள். அதன் பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குறட்பாக்களில் தளைபிழைகள் இருப்பின் அதைத் திருத்திட வேண்டும் – வெண்பா என்றால் இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகியவை மட்டுமே இருக்க வேண்டும்; வேறு தளைகள் விரவி வரலாகாது – என்கிற அச்ச உணர்வோடு சென்ற ஆண்டு மென்மையும் மேன்மையும் ஒருங்கே பெற்ற செந்தமிழ் வேந்தர் (என்னை அவருடைய மகனாகவும் மாணவனும் ஆகவே உணர்கிறேன்) மின்னூர் தந்த மேதைமை முனைவர் மின்னூர் சீனிவாசன் அவர்களால் அறிமுகம் ஆன பாசுரப் பாவலர், பைந்தமிழ்ப் பற்றாளர் ஐயா வேணு.குணசேகரன் (என் இன்னோர் ஆசான்) அவர்கள் துணையுடன் சென்ற சனவரித் திங்கள் அன்று தொடங்கிய பணியும், காலத் தட்டுப்பாடும், வாழ்வியல் முட்டுப்பாடுகளும், பொருளியல் கட்டுப்பாடுகளும் இணைந்து ‘அய்யாமொழி பொய்யாமொழி’ எனத் தொடங்கப்பட்ட நூல் காலங்கடந்து இப்போது “காலத்தின் குறள் பெரியார்“ என்று பொலிவு பெற்றுத் தமிழுலகில் தவழ இருக்கின்றது.

  ஐயா மின்னூர் சீனிவாசன் அவர்களும் குறிஞ்சி தந்த கோமான் பாச்சலூர் மாணிக்கம் அவர்களும் நூலில் வாழ்த்துப்பாக்கள் வழங்கியுள்ளனர்.

 பொன்னுரையைப் பேரா.சுப.வீ அவர்களும் பண்புரையை யாசுமின் அவர்களும் அன்புரையைத் தோழர் ஓவியா அவர்களும் குணவுரையைப் பாசுரப்பாவலர் வேணு.குணசேகரன் அவர்களும்
மனவுரையைத் திருக்குறள் மாமணி குறள் பா.தாமோதரன் அவர்களும் இனவுரையை அண்ணன் பா.பொன்னுராசன் அவர்களும் மணியுரையை அரிமா சு.மணிவண்ணன் அவர்களும் முத்துரையை முயற்சி க.முருகேசன் அவர்களும் அளித்துள்ளனர்.

முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை காலக்கட்டுப்பாட்டினால்…பின்னுரையாய் என்னுரை எழுதி இணைக்கப்பட்டு உள்ளது.
அன்பர்கள் அனைவரும் 22.12.2017 வெள்ளியன்று மாலை 6 மணியவில் எழும்பூர் இக்சா (ICSA) மையத்தில் முனைவர் மின்னூர் சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் வருகை தந்து நூலையும் இந்த வேலையும் வெற்றிபெறச் செய்யும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.

என்றென்றும் தங்களுடன் தங்களுக்காய்
ச.ச.வேலரசு (எ) தமிழரசன்