சங்கக்கால நாணயம்01 :naanayam01 சங்கக்கால நாணயம்01 - விவரம் :naanayam02_vivaram

கி.மு நான்காம் நூற்றாண்டுச்

சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்!

– நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருட்டிணமூர்த்தி

 

“கி.மு நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்கக் காலப் பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தென்னிந்திய நாணயவியல் ஆய்வு அமைப்பின் தலைவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

சங்கக் காலப் பாண்டியர் நாணயங்களை அண்மையில் ஆய்வு செய்தபொழுது பல அரிய தகவல்கள் கிடைத்தன. நாணயத்தின் முன்புறப் பகுதியின் கீழ்ப் பகுதியில் யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி நிற்கிறது. யானையின் மேல் இடப்பக்கத்தில் ‘மா’ எனும் எழுத்து உள்ளது. அந்த எழுத்து, மௌரிய பிராமி வகையாக உள்ளது. அதைத் தொடர்ந்து, ‘ற’ எனும் எழுத்து தமிழ் பிராமி வகையைச் சேர்ந்ததாக உள்ளது. அடுத்ததாக ‘ன்’ எனும் எழுத்தும் தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தது. இந்த மூன்று எழுத்துகளையும் சேர்த்து, ‘மாறன்’ எனப் படிக்க முடிகிறது. பின்புறம், நாணயத்தின் நடுவில், வேலியிட்ட மரம் போன்ற சின்னம் உள்ளது. அதன் வலப் பக்கத்தில், இரண்டு மரக்கிளைகளைக் காண முடிகிறது. அதோடு, வலப் பக்கத்தின் அடி மூலையில், ஆறு முகடுகளைக் கொண்ட மலைச்சின்னம் உள்ளது. ஆறு முகடுகளில், இரண்டு முகடுகள் உள்ள பகுதி உடைந்துவிட்டதால், நான்கு முகடுகள் மட்டும்தாம் தெரிகின்றன. இந்த ஆறு வளைவு முகட்டின் மேல், ஓர் இலச்சினை மேல் நோக்கிச் சென்று, மரத்தின் உச்சிப் பகுதியைத் தொட்டு நிற்கிறது.

நாணயத்தின் தலையாய பகுதி: மரத்தின் இடப்பகுதி ஆய்விற்கு முதன்மையான பகுதியாக உள்ளது. அந்தப் பகுதியில், ஒரு முக்கோண எல்லைக்கோடு உள்ளது. அந்த எல்லைக் கோட்டின் தலைப்பகுதி சிதைந்துள்ளது. அதோடு, இந்த எல்லைக் கோட்டுக்கு உள்ளே, மூன்று எழுத்துகள் மிகத் தெளிவாக உள்ளன. அந்த மூன்று எழுத்துக்களும், இங்கு கொடுக்கப்பட்ட முறையில் அச்சாகியுள்ளன. மேலும், முக்கோணத்தைத் திருப்பிப் போட்டுப் பார்த்தால், அந்த எழுத்துகளை மிக எளிதாகப் படிக்க முடிகிறது.

தனித்தன்மை உடைய ‘மா’ எழுத்து: இந்த நாணயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘மா’ எனும் எழுத்து தனித்தன்மை கொண்டதாக உள்ளது. இது போன்ற எழுத்து வகை, ஈரோடு மாவட்டம், கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பல பானைஓடுகளில் காண முடிகிறது. இதன் காலம், கி.மு ஐந்தாம் நூற்றாண்டு என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த நாணயம் உருவாக்கப்பட்ட முறை மிகத் தொன்மையானது. இரண்டு தகடுகளில், தனித்தனியாக அச்சிட்டு, அச்சிடப்படாத பின் பகுதியில் ஈயத்தை உருக்கிவிட்டு, அத்தகடுகளை இணைத்துள்ளது நன்கு காண முடிகிறது. இது போன்ற முறைகள் வளர்ச்சியடைந்த பின்பு, புதிய அச்சுமுறைகள் உருவாகின.

எந்தப் பாண்டிய வேந்தனின் நாணயம்?: இந்தச் சங்கக் கால நாணயத்தை ஆய்வு மேற்கொண்டதில், கி.மு நான்காம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த கொற்கைப் பாண்டியன் அதை வெளியிட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமலர்

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar