51_bus

  தேவதானப்பட்டி அருகே உள்ள டம்டம்பாறை பகுதியில் 16க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

   இந்நிலையில் சித்தரரேவு, தாண்டிக்குடி வழியாக ஒரு வழியும், பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் பாதை மற்றொரு பாதையாகவும் செயல்பட்டு வருகிறது. இதனைப்பயன்படுத்தித் தனியார் பேருந்துகள், தாண்டிக்குடி வழியாகச் செல்கின்ற பேருந்துகள், கொடைக்கானலுக்கு 100 உரூபாயும் பழனி வழியாகச் சுற்றி வருகின்ற வாகனங்கள் 150உரூபாயும் கட்டணம் பெறுகின்றனர். ஏற்கெனவே சரக்குச்சிற்றுந்துகள், சிற்றுந்துகள் கொடைக்கானலுக்கு 50உரூபாய் கட்டணம் பெற்றன. தற்பொழுது 300உரூபாய் முதல் 500உரூபாய் வரை பெறுகின்றனர். இதனால் கொடைக்கானல் செல்லும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

  இவை தவிர பூலத்தூர் முதலான சிற்றூர் மக்கள் போக்குவரத்து இன்றிக் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டம்டம்பாறை பகுதியில் மீட்புப் பணிகள் மந்தமாக உள்ளமையால் பாதை சீரமைப்புப் பணிகள் முடிய ஒரு மாதம் காலம் வரை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவை தவிர சில இடங்களில் கீழே இருந்து மண்மூட்டைகளை அடுக்கி சாலையைச் சரிசெய்யவேண்டும். அதற்கான போதிய பட்டறிவு ஆட்களும் இல்லை.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிநவீன இயந்திரங்களைக்கொண்டு போக்குவரத்து செல்லும் பாதையைச் சரிசெய்யவேண்டும் எனக் கொடைக்கானல் செல்லும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

51_vaigaianeesu