சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது
சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்!
இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர், கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும் நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவரே அந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பேருந்து மோதி இறந்ததாகச் செய்தித்தாள்களில் வந்திருந்தாலும், அவரது முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர் இறப்பு குடும்பத்தினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் நண்பர்கள் சொல்லுகின்றனர்.
சிற்றிந்தியாப் பகுதி (Little India) தென்னாசியர்களும் குறிப்பாகத் தென்னிந்தியர்களும் மிகுதியாக வாழும் பகுதி. இளைஞர் இறப்பின் தொடர்ச்சியாக இந்தியநாட்டினரும் வங்கத் தேசத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அது கலவரமாக மாறியுள்ளது. ஏறத்தாழ 400க்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்து, கைகளில் தீப்பந்தத்துடன் தெருவில் களமிறங்கி உள்ளனர்.
காவல்துறை ஊர்திகளும் அவசர ஊர்தி உதவிகளும் பொதுமக்கள் ஊர்திகளும் கொளுத்தப்பட்டுள்ளன. காவல் நிலையமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த காவலர்கள் ஏறத்தாழ 20 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.
“இது சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கும் முறையல்ல. இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாது” எனச் சிங்கப்பூர் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். 400 பேர் இக்கலவரத்தில் ஈடுபட்டனர் என்றும், 10 காவல்துறையினர், 4 அரசு அதிகாரிகள், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உட்பட 18 பேர் காயமுற்றனர் என்றும் இது தொடர்பாக 27 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தளையிடப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை அறிக்கை கூறுகிறது. இவர்களில் பெரும்பான்மையர் தமிழர்கள். கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுச்சிறைத் தண்டனையும் பிரம்படித் தண்டனையும் வழங்கப்படும்.
இது குறித்து சிங்கப்பூர் தலைமையாளர் இலீ சியான் உலூங்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கலவரம் உருவாக எந்த ஒரு சூழல் காரணமாக இருந்தாலும் அதற்கு மன்னிப்பு கிடையாது. அஃது ஒரு வன்முறை, கட்டுப்பாடு மீறல், குற்றம் சார்ந்த நடத்தை. இந்நிகழ்வில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்தியர்களைப் பணிக்கு அமர்த்துவது பெருமளவு குறையும் எனச் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply