செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் – ங

(2013 -14, 2014-15, 2015 – 16)

  2013-14, 2014-15, 2015 – 16 ஆம் ஆண்டுகளுக்கான (மூன்று ஆண்டுகள்)  செம்மொழி விருதுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் சித்திரை 26, 2048 / 09.05.2017 செவ்வாய்க் கிழமை அன்று குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட உள்ளன.  இந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் பெறுவோரது  விவரம் வருமாறு:

  தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞருக்கு ஒவ்வோராண்டும் சான்றிதழும், நினைவுப் பரிசும் உரூ.5 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய தொல்காப்பியர் விருது வழங்கப்படுகின்றது.

தொல்காப்பியர் விருது :  2013-14

முனைவர் சோ.. கந்தசாமி

முனைவர் சோ.. கந்தசாமி 1936இல் அரியலூர் மாவட்டம் இலையூர் என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று இலக்கியத்திலும் மொழியியலிலும் தத்துவவியலிலும் பட்டங்களைப் பெற்றவர்.

 முனைவர் ஆர்.கே. சண்முகம்(செட்டியார்) தமிழ் ஆராய்ச்சிப் பரிசு, மகாவித்துவான் இரா.இராகவ(ஐயங்கார்) தமிழ் ஆராய்ச்சிப் பரிசு  முதலான பல சிறப்புகளைப் பெற்றவர். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகிய பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர். இந்தியத் தத்துவவியல், மொழியியல், காப்பியங்கள், திறனாய்வுச் சிந்தனைகள், ஆங்கில மொழிபெயர்ப்பு, தமிழ் வரலாற்று ஆய்வுகள் எனப் பன்னோக்குப் பார்வையில் நாடறியும் வகையில் ஆய்வு மேற்கொண்டு இலக்கிய உலகில் இடம் பெற்றவர்.

 திருக்குறள் கூறும் உறுதிப்பொருள் (1977),  பரிபாடலின் காலம் (1978), உலகத் தமிழ் இலக்கிய வரலாறு (2004), உலகச் செம்மொழிகள் இலக்கியம் (2010) ஆகிய இவரது நூல்கள் தமிழ் மொழியின் சிறந்த ஆராய்ச்சிப் பனுவல்களாகவும் இக்கால ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டிகளாகவும் அமைந்துள்ளன.

 தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, அருட்செல்வர் முனைவர் என். மகாலிங்கம் திருமந்திரம் மொழிபெயர்ப்பு விருது, முனைவர் இராசா வ-ர் அண்ணாமலை(ச் செட்டியார்) தமிழ் இலக்கிய விருது, சித்தாந்தச் செம்மணி விருது, சித்தாந்தக் கலாநிதி விருது ஆகியவை இவர் பெற்ற குறிப்பிடத்தக்க விருதுகள்.

   தமிழ்ப் பல்கலைக்கழக உலகச் செவ்வியல் மொழிகளின் இயக்குநராகவும், மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும், ஆய்வுத்திட்டக்குழு அறிவுரைஞராகவும், நடுவண் அரசு இந்திய மொழிகளின் ஆய்வு அறிஞராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.

  இவருடைய தொல்காப்பியம் தொடர்பான தொல்காப்பியத் தெளிவு, தெய்வச் சிலையார் உரைத்திறம், தொல்காப்பியரின் மொழி ஆளுமை, தொல்காப்பியத்தின் அமைப்பும் சிறப்பும், தமிழ் இலக்கணச் செல்வம், புறத்திணை வாழ்வியல், தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் இலக்கண நூல்களைப் பாராட்டியும், தொல்காப்பிய மரபுகள், தொல்காப்பியக் கவிதையியலில் உள்ளுறைக் கருத்துகள் முதலிய தொல்காப்பியம் சார்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளின் சிறப்பினைப் பாராட்டியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இவருக்குத் தொல்காப்பியர் விருதினை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.


தொல்காப்பியர் விருது – 2014 -15

முனைவர் . தட்சிணாமூர்த்தி

  முனைவர் . தட்சிணாமூர்த்தி 1938இல் திருவாரூர் நெடுவாக்கோட்டை என்னும் ஊரில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை (சிறப்பு)ப்பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். திருவாரூர், வடபாதி மங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதனிலைத் தமிழ் ஆசானாக மூன்று ஆண்டுகளும், தஞ்சாவூர் பூண்டி வீரையா வாண்டையார் நினைவு திரு. புட்பம் கல்லூரியில் விரிவுரையாளராக இருபத்து நான்கு ஆண்டுகளும், மதுரைத் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கலைக் கல்லூரியில் முதல்வராக ஐந்து ஆண்டுகளும் பணிபுரிந்துள்ளார்.

  தமிழக அரசின் பாரதிதாசன் விருது, பாரதிதாசன் நூலாசிரியர் சான்றிதழ் விருது, வள்ளல் பாண்டித்துரைத் தேவர் விருது, சிறந்த தமிழறிஞர் விருது, மூத்தக்குடிமகன் விருது,          திரு.வி.க. விருது, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, சாதனைத் தமிழ் விருது, மொழிபெயர்ப்புச் செம்மல் விருது, சி.யு.போப்பு மொழிபெயர்ப்பு விருது ஆகிய சிறப்பான விருதுகளை இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை நானூறு, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகம் என்னும் மொழிபெயர்ப்பு நூல்களும், தமிழர் நாகரிகமும் பண்பாடும், சங்க இலக்கியங்கள் உணர்த்தும் மனித உறவுகள், தமிழியற் சிந்தனைகள், சங்க இலக்கியம்ஐங்குறுநூறு (இரண்டு தொகுதிகள்), சங்க இலக்கியம் பரிபாடல் என்னும் திறனாய்வு நூல்களும் இவரது ஆழ்ந்த புலமையையும், தமிழ் இலக்கிய அறிவாற்றலையும் புலப்படுத்துவனவாகும்.

   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் இலக்கியத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார். சங்க இலக்கியங்களிலும் மொழிபெயர்ப்புத் துறையிலும் ஆழங்கால் பட்டவர். தமிழ் மூலத்திற்கு ஊறு செய்யாமல் இனிய, எளிய ஆங்கிலத்தில் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளமை இவரது சாதனையாகும். இவருடைய தொல்காப்பியத்தில் ஓரெழுத்து ஒருமொழிகளின் புணர்ச்சி விதிகள், தொல்காப்பியம்மொழியியல் பார்வையும் மரபுப் பார்வையும், மொழியியல் நோக்கில் தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரை ஆசிரியர்கள் முதலான ஆய்வுப் பணிகளைப் பாராட்டி இவருக்குச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் விருதினை அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

தொல்காப்பியர் விருது – 2015-16

முனைவர் இரா. கலைக்கோவன்

முனைவர் இரா. கலைக்கோவன் 1948இல் சென்னையில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் 1970இல் (எம்.பி.பி.எசு.) பட்டம் பெற்றுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை(தமிழ்), முதுகலை (வரலாறு), ஆகிய பட்டங்களும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். முனைவர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தை நிறுவி, அதில் 1982 – முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசின் கலை வளர்த்த திருக்கோயில்கள் பரிசு, சுவடழிந்த கோயில்கள் பரிசு, சோழர் கால ஆடற்கலைப் பரிசு, தென்னிந்திய வரலாற்றுக் கழகம் வழங்கிய வரலாற்று மாமணி விருது, சிறந்த தொல்லியல் அறிஞர் விருது, சிறந்த கோயில் கட்டடக்கலை அறிஞர் விருது, சிறந்த கல்வெட்டறிஞர் விருது, கல்வெட்டாய்வுச் செம்மல் விருது, பல்துறைப் பேரறிஞர் விருது, தமிழாய்வு மணி விருது, தொல்லியல் தோன்றலார் விருது, முனைவர் எம்ஞ்சியார் மருத்துவப் பல்கலைக்கழகம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது, கவின்கலை விருது எனப் பல்வேறு விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். பழுவூர்ப் புதையல்கள், சோழர் கால ஆடற்கலை, மகேந்திரர் குடைவரைகள், பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும், புதுக்கோட்டை மாவட்டக் குடைவரைகள், பல்லவர் பாண்டியர் அதியர் குடைவரைகள், மலைக்க வைக்கும் மாடக் கோயில்கள், சங்கச் சாரல் ஆகிய இவரின் நூல்கள் சிறப்பான பங்களிப்புகளாகும். இவரது வரலாற்று ஆய்வுப் புலமையினையும் கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் நிலையினையும் இந்நூல்கள் புலப்படுத்தும்.

  இவரது மொழிப் புலமையினையும் தொல்லியல், கல்வெட்டாய்வினையும் பாராட்டிச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறது.

   குறள்பீடம் விருது

  தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை  வழங்கியுள்ள  அயல்நாடு வாழ் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் ஒவ்வோராண்டும் சான்றிதழும், நினைவுப்பரிசும், உரூ.5 இலக்கம் பரிசுத்தொகையும் அடங்கிய குறள்பீடம் விருது வழங்கப்படுகின்றது.

வழக்கம்போல் இம்மூன்று ஆண்டுக்காலக்கட்டத்தில் இவ்விருது வழங்கப்படவில்லை. தேர்வுக்குழுவினருக்குத் தமிழறிஞர் யாரும் கண்ணில் தெரியவில்லை போலும்! தமிழறிஞர்கள் உறங்குகின்றனர். என் செய்வது?


[செம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙா :  காண்க]