செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி
அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: செயலலிதா தலைமையாளராகும் கனவு பலிக்காது: அன்புமணி இராமதாசு பேச்சு
தேசிய சனநாயகக் கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க. சார்பில் மரு. அன்புமணிஇராமதாசு போட்டியிடுகிறார். இதனையொட்டி தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய சனநாயக் கூட்டணிச் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி இராமதாசு பேசியதாவது:-
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு வெற்றிக்கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்தத் தேசியசனநாயகக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். அவர்களின் முயற்சி பலிக்காது. இந்தியாவின் தலைமையாளருக்கான ஒரே வேட்பாளர் நரேந்திரமோடிதான். மற்ற கட்சிகளின் தலைவர்கள் யார் தலைமையாளருக்கான வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கவில்லை. தமிழக முதல்-அமைச்சர் செயலலிதா தலைமையாளராகும் – பிரதமராகும் – கனவு பலிக்காது. தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். தமிழக மக்கள் அனைவரும் தேசிய சனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளிக்க ஆயத்தமாகி விட்டார்கள்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் இதுவரை 6 ஆயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளன. அந்த அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கல்வி,நலவாழ்வு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் செயல் இழந்து விட்டது. நான் மத்திய மந்திரியாக இருந்த போது, தேசிய ஊர்ப்புற நலவாழ்வுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதே போன்று 108 மருத்துவஊர்தித் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம். இதுபோன்ற திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்திய பா.ம.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் கல்வித்துறையில் 28-ஆவது இடத்திலும், நலவாழ்வுத்துறையில் 26- ஆவது இடத்திலும், வேலைவாய்ப்பில் 30- ஆவது இடத்திலும் உள்ளது. ஆனால் அரசின் மது விற்பனையில் 2- ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அனைத்துத் துறைகளையும் முன்னேற்ற நாம் அனைவரும் ஒன்றுபடுவோம். இந்தத் தேர்தலில் தேசிய சனநாயகக் கூட்டணியை வெற்றி பெற செய்து, நரேந்திரமோடியைத் தலைமையாளராக்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply