vijakanthmeeting04

  தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார்.

 

வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம்  சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர்  சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின் பல பகுதியில் இருந்து  இறையன்பர்கள் வருகின்றனர். அங்கு அடிப்படை வசதிகளான குடி நீர், கழிப்பிட வசதிகள் இல்லை.

மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை : தமிழகத்தில் முதல்வருக்கு மட்டுமே  காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். 10 கி.மீ.,  தொலைவிற்குக் காவல்துறையால், 5 கி.மீ., தொலைவிற்குத்  தடைமுத்திரை வைக்கப்படுகிறது. இவர்களுக்குச் சம்பளம் முதல்வர் பையில் இருந்தா கொடுக்கிறார். மக்களின் வரிப்பணத்தில்தான்  காவல்துறையினருக்குச் சம்பளம் கொடுக்கிறார். அவருக்கு மட்டுமே பாதுகாப்பு. பொது மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து கிடக்கிறது.

செய்வீர்களா, செய்வீர்களா: இரு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்கு வந்தார். மக்களைப் பார்த்து.  செய்வீர்களா, செய்வீர்களா, எனக் கேள்வி எழுப்பினார். நீங்களும் இன்று கேள்வி எழுப்புங்கள் குடி நீர் கொடுப்பீர்களா, மின்சாரம் கொடுப்பீர்களா,எனக் கேளுங்கள். நான் உங்களிடம் கேட்கிறேன். செயலலிதாவை வீட்டுக்கு அனுப்புவீர்களா.

ஏழையைப் பணக்காரர் ஆக்க வேண்டும்: மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள், வெளி நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் செல்கின்றனர். ஆடு மாடு மேயப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற கூடாதா? மக்களே சிந்தித்து மாற்றி  வாக்களிக்க வேண்டும். பணக்காரர்களுக்குச் சாதகமான ஆட்சி நடந்து வருகிறது. பணக்காரர்களுக்கு நான் எதிரியில்லை. ஏழைகள் பணக்காரர்கள் ஆக்க வேண்டும், என்பதே என் ஆசை. தங்கத் தட்டில் வைத்தால் நான் ஏன் கட்சிக்கு வருகிறேன்: தமிழக மக்களுக்குத் தங்க தட்டில் வைத்து பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால்  நான் ஏன் கட்சி  தொடங்கியிருப்பேன்? நான் நடித்துக்கொண்டே இருந்திருப்பேன். தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளுமே ஊழல் கட்சிதான். இருவரும் கல்லாவில் போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

 

 அரசின் மதுக்கடைகளால் பெண்களுக்கு  இன்னல்: இன்று தமிழகத்தில் எங்கு பார்த்தாலும்  அரசின் மது(டாசுமாக்) கடைகள்.  மதுக்கடை மட்டுமே இலக்கு. மக்கள் வாழக்கைத் தரத்திற்கு  இலக்கு வைக்க வேண்டியதுதானே! பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் தெய்வங்கள். பிறந்த வீடு, புகுந்த வீட்டிலும் பாதுகாக்குகின்ற சக்திகள். சக்தியும், சிவனும் சேர்ந்து சிவசக்தியாக திகழ்கின்றனர்.

சின்ன கட்சியார்?: எங்களைப் பார்த்து,  சின்னக் கட்சிகள் என்கின்றனர். சின்னக் கட்சிகளுக்கு வாக்கு போடாதீர்கள் என்கின்றனர். 2004 நிலை மீண்டும் வரும். அன்று அ.தி.மு.க., ஒரு இடத்தில் கூட  வெல்லவில்லை. அப்போது சின்னக் கட்சி யார்? அந்த நிலை மீண்டும் திரும்பும். வட்டத்தில் இருந்து அமைச்சர் வரை  மின்னம்மி, மின்னுரல், ஆடு, மாடு வழங்க விலை வைத்து வாங்குகின்றனர். கொட்டோ கொட்டு என்று நன்மைகள் கொட்டுமாம். கட்டோ கட்டு என்று கட்டுங்கள். இரவு வீட்டில் படுத்தால் 12 மணிக்கு உடம்பெல்லாம் வியர்வை எழுந்து பார்த்தால் டொக், டொக் என  விசிறி நின்று விடுகிறது. காலை ஆறு மணிக்கு லொட, லொட வென மீண்டும் வருகிறது. இரவு திருடர்கள் போல் இரவு மின்சாரத்தைத் திருடி விடுகின்றனர்.

இரு ஆண்டுகள் பொறுத்து கொள்ளுங்கள்: தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், என இராசுநாத்சிங்கிடம் கேட்டேன், அதற்கு அவர் உறுதியளித்துள்ளார். முதலில் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். விசயகாந்த் முதல்வராவது இரண்டாம் பட்சம் தான், மக்களே நமது கூட்டணியில் உள்ள  பா.ச.க. தாமரை சின்னம், பாட்டாளி மக்கள் கட்சி, மாம்பழம் சின்னம், அண்ணன் வைகோவின் பம்பரம் சின்னம்,கொங்கு நாடு, ஐ.ச.க.., கட்சி இணைந்த சனநாயகக் கூட்டணிக்கு  வாக்களியுங்கள். இங்கு  சோயலுக்கு,  பம்பரம் சின்னத்தில்  வாக்களியுங்கள்.” என அவர் பேசினார்.

படம் : நன்றி : தினமலர்