தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் – 2045 (2014)
கடந்த 25 ஆண்டுகளாகத், தமிழ் – தமிழர் உரிமைச் சிக்கல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் “தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” மாதமிருமுறை இதழ் சார்பில் வழக்கம்போல் ‘பொங்கல் சிறப்பு மலர்’ வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்களுக்காகப் போராடும் பல்வேறு கட்சி, இயக்கத் தலைவர்களும், தமிழறிஞர்களும், குமுகாயச் செயற்பாட்டாளர்களும் இயற்றியப் படைப்புகள் முந்தைய ஆண்டுகள்போல், இம்மலரிலும் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னையில் நடைபெற்று வரும் 37ஆவது புத்தகக் காட்சியின், 234ஆவது அரங்கில் அமைந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அரங்கில், இதழ் ஆசிரியரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன், பொங்கல் மலரை வெளியிட்டார்; தமிழின உணர்வாளரும் தமிழிய ஆய்வாளருமான முனைவர் த.செயராமன் பெற்றுக் கொண்டார்.
இவ்வாண்டு மலரில், இயற்கை வேளாண் அறிவியலாளர் திரு. கோ.நம்மாழ்வார் அவர்கள் இறப்பதற்கு முன் எழுதிய இறுதிக் கட்டுரை, சூழலியல் குறித்து மார்க்சியத்திலுள்ள போதாமைகள் தொடர்பில் தமிழர் கண்ணோட்டம் இணையாசிரியர் தோழர் கி.வெங்கட்ராமன் எழுதிய ”பசுமை மார்க்சியம்” கட்டுரை, ‘கலைமாமணி’ திரு. புட்பவனம் குப்புசாமி எழுதியுள்ள “மக்களிசை” கட்டுரை, தமிழீழத்தின் இன்றைய நிலை குறித்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதியுள்ள கட்டுரை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பன்னாட்டு நிலைமைகள் குறித்து மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி எழுதியுள்ள கட்டுரை எனப் பல்வேறு கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
மேலும், மொழி – வரலாற்று – இலக்கிய ஆய்வுகள், தமிழர் உணவுமுறை, மாற்றுத் திறனாளிகள் நிலை, ஊடகவியல் முதலான பல்வேறு தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் இம்மலரில் வெளியாகியுள்ளன. கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், இன்குலாப், பா.செயப்பிரகாசம் முதலானோர் எழுதிய கவிதைகளும், மலரின் பக்கங்களை அணிசெய்கின்றன. தமிழ்க் குமுகாயம் சார்ந்து இயங்கும் தமிழின உணர்வாளர்களும், வணிகர்களும் மலருக்கு விளம்பரங்கள் தந்து உதவியுள்ளனர்.
ரூ. 250 மதிப்புள்ள இப் பொங்கல் சிறப்பு மலர், சென்னை புத்தகக் கண்காட்சியை முன்வைத்து, ரூ. 200க்குக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றது. சென்னை புத்தகக் காட்சி அரங்கு எண் 234-இல் அமைந்துள்ள தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் அரங்கில் மலரைப் பெற்றுக் கொள்ளலாம். மலரை அனுப்பி வைக்க வேண்டுபவர்கள் 9047162164 என்ற கைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாக் காலத்தில், செங்கரும்பு போல ஒவ்வொரு தமிழர் இல்லங்களையும் அணிசெய்ய வேண்டிய சிறப்புடன் வெளிவந்துள்ள அம்மலரை, அனைத்துத் தமிழர்களும் வாங்கி ஆதரிக்க அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்!
விற்பனைப் பிரிவு,
தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்
Leave a Reply