வழக்குரைஞர் பீட்டர் இரமேசுகுமார்01 - lawyer peter ramish kumar01Thiruma01

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ் வழக்குமன்ற மொழியாகப் போராடி வரும் வழக்குரைஞர் பீட்டர் இரமேசு குமாருக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். இராமசுப்பிரமணியன், கே.இரவிசந்திரபாபு ஆகியோர்,  6 மாதச்சிறைத்தண்டனையும் நீதிமன்ற அவமதிப்புச்சட்டத்தின்கீழ்த் தண்டனை பெற்றவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்குரைஞராகச் செயல்படமுடியாது என்பதன் அடிப்படையில்  வழக்குரை உரிமைப் பறிப்பும் விதித்துள்ளனர். எனினும் மேல் முறையீட்டிற்காக இத் தண்டனையை 15 நாள் நிறுத்தி வதை்துள்ளனர். இது குறித்து, விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நெடுங்காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.

  இந்தியாவின் பிற மாநிலங்களில், குறிப்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் முதலான இந்தி மொழி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஆங்கிலமும் வழக்காடு மொழியாக நடைமுறையில் இருந்து வருகின்றன.

அதேபோல் தமிழகத்தில் தமிழிலும் வழக்காடும் உரிமை வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளும், பிற கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. அக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவை தொடர்பாக நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 14.9.2015 அன்றும் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் பகத்சிங்கு தலைமையில் பல்வேறு வழக்கறிஞர்கள் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அறவழியில் வலியுறுத்தினர். அவ்வாறு வழக்கறிஞர்கள் தமிழுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்ததால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டனர். அதனைக் கண்டித்து 16.9.2015 அன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை  வழக்குரைஞர்மன்றதத் தலைவர் பீட்டர்  இரமேசுகுமார் தலைமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன. தாய் மொழியில் வழக்காடும் உரிமையைப் பெற வேண்டுமென்பதற்காகவும், அவ்வுரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் அறவழியில் போராடிய பீட்டர்  இரமேசுகுமார்மீது நீதிமன்றம் வழக்கு தொடுத்தது. அவ்வழக்கின் அடிப்படையில் தற்போது அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனையும்  தண்டத்தொகையும்(அபராதமும்) விதிக்கப்பட்டுள்ளன.

தாய்மொழியில் வழக்கு நடத்தும் உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குபோடுவதும், அவர்களைச் சிறைப்படுத்துவதும் வேறெந்த மாநிலத்திலும் நடக்காத கேலிக்கூத்தாகும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு எதிரானவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவே இதன்மூலம் உணர முடிகிறது. ஒரே அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் இந்திய நீதித்துறையில் மொழிஉரிமையில் மாநிலத்திற்கு மாநிலம் ஒவ்வொரு நடைமுறையைக் கடைப்பிடிப்பது என்பது வருந்தத்தக்கது. இவை ஏற்புடையது அல்ல. ஆகவே, வழக்குரைஞர்கள் மீது தொடுத்துள்ள வழக்குகளை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

  கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் மைய அரசில் அங்கம் வகித்திருந்த போதிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீவிர முயற்சிகளில் ஈடுபடவில்லை. தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சியமைக்கும்போது அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.