தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சியா? – பெ.மணியரசன்
தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள்
நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை :
தமிழ்நாட்டில் மீண்டும்
விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா?
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், ‘உலகத் தெலுங்கு மாநாட்டில்’ பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்றுமொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது.
உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017இலிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடந்தது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா(நாயுடு) குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத்து கோவிந்த்து 19.12.2017 அன்று நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.. இம்மாநாட்டை, தெலங்கானா அரசு நடத்தியது.
இம்மாநாட்டில் பேசியவர்களில் பலர் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு தெலுங்கை அழித்துத் தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது; சட்டம் போட்டுள்ளது, அந்த சட்டத்தைக் கைவிட வேண்டும், தெலுங்கைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார்கள்.
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பல நூறாயிரம் தமிழர்கள் மரபு வழிப்பட்ட குடிமக்களாக நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, ஏராளமான தமிழர் நகரங்களும் கிராமங்களும் சூழ்ச்சியாக ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்பட்டன.. இன்றைக்கும் அங்குத் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சிறுபான்மைத்தேசிய இனமாக உள்ள தமிழர்கள் பயிலத் தமிழைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வைத்திருக்கிறார்களா? இல்லை! தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் தங்களுடைய தாயகமான ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் தமிழர்கள் தமிழ்படிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தொடர வேண்டும் என்று ஆவேசத்தோடு பேசுவதன் பொருள் என்ன?
தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக மட்டும் இல்லை, தெலுங்கர்களின் தாயகமாகவும் இருக்கிறது என்று கருதுகிறார்கள். இது ஒரு சனநாயக மனப்பாங்கு என்று கருதினால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவைத் தெலுங்கர்களுக்கும், தமிழர்களுக்கும் உரிய மாநிலங்களாகக் கருத வேண்டும்.
மேற்படி தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் மட்டுமல்ல, ஆந்திர – தெலங்கானா அரசுகளும் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தமிழ்நாட்டில் வைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பதையும் அம்மாநாட்டில் எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார்கள். தெலங்கானா அமைச்சர்களும் பேசியுள்ளார்கள். ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் உள்ள தமிழர்கள் தமிழ் வழியில் படிக்க வசதியளிக்குமாறு, அம்மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருக்கிறதா?
நமக்குத் தெரிந்த வரை அவ்வாறான செய்தியில்லை!
தெலுங்கு வழியில் படித்திட போதிய மாணவர்கள் சேரவில்லை என்று போலிக் காரணம்கூறி, நூற்றுக்கணக்கான தெலுங்குப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடிவிட்டதாக அம்மாநாட்டில் பேசியோர் குற்றம்சாட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக் கூடங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் மூடப்பட்டு வருகின்றன.காரணம் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லை என்பதுதான்! பெற்றோர்கள் எதிர்கால வேலை வாய்ப்பு கருதி, தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இதுதான் உண்மையான காரணம்!
ஆனால், தெலுங்கு மொழிப் பள்ளிக் கூடங்களை மூடி, தமிழ்வழிப் பள்ளிகளுக்குத் தெலுங்கு மாணவர்களைத் தமிழ்நாடு அரசு விரட்டுகிறது என்று பொய்க் குற்றச்சாட்டைத் தெலுங்கு மாநாட்டில் பேசுவது, அறிஞர்களுக்கு அழகா?
ஏற்கெனவே வெங்கையா(நாயுடு) தொடங்கி வைத்த தெலுங்கு மாநாடுகள் சென்னையில் நடந்துள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் தெலுங்கைத் துணை ஆட்சி மொழியாக,கல்வி மொழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து தீர்மானம் போட்டார்கள். பதவிக்காக, இனத்துரோகம் செய்யும் தமிழிசை சௌந்திரராசன், பொன். இராதாகிருட்டிணன் போன்றவர்கள் அம்மாநாடுகளில் பங்கேற்றார்கள். இப்பொழுது, தெலுங்கை வளர்ப்பதற்காகத் தெலங்கானாவில் மாநாடு போட்டவர்கள், தமிழ்நாட்டில் தமிழை அழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்..
இந்தத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது? ஆந்திரா, தெலுங்கானாவில் இல்லாத திராவிட அரசியல், தமிழ்நாட்டில் கோலோச்சுவதால் வந்த துணிச்சல் இது!
திராவிடம் என்பதே ஒன்று தமிழின மறுப்பாக இருக்கும், அல்லது தமிழின மறைப்பாக இருக்கும். தெலுங்கு ஆண்டுப் பிறப்பிற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை உண்டு! ஆந்திராவிலோ, தெலங்கானாவிலோ தமிழ் ஆண்டு பிறப்பிற்கு விடுமுறை கிடையாது!
தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஞ்சியார் ஆகியோர் இறந்தபோது, ஆந்திரப்பிரதேசத்தில் விடுமுறை விடவில்லை! ஆனால், ஆந்திரப்பிரதேச முதல்வர்இராசசேகர(ரெட்டி) இறந்தபோது, கலைஞர் கருணாநிதி தலைமையிலிருந்த தமிழ்நாடு அரசு விடுமுறை விட்டது. இவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் ஆந்திரப்பிரதேச தெலுங்கர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்ததால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாக (Language) பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தைத் தெலுங்கு அழிப்பு சட்டமாக தெலுங்கு நாட்டில் சித்திரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் எல்லையோரங்களில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள சிறுபான்மை மக்கள் தங்கள் தாய் மொழியைக் கற்க உறுதியளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! அவர்கள் அதை ஒரு மொழிப்பாடமாகக் கற்கட்டும்! ஆனால், அவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகத், தமிழ்நாட்டின் கல்விமொழியாக உள்ள தமிழை மொழிப்பாடமாகவும், பயிற்று மொழியாகவும் கற்க வேண்டும்.
நமது இந்த சனநாயக மொழித் திட்டத்தை ஆந்திர, கருநாடக, கேரள அரசுகள் முறைப்படி செயல்படுத்துவதில்லை.. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்சியாளர்கள் கோருவதுமில்லை. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியில்,தமிழினம் அரசியல் பாதுகாப்பற்ற அனாதை இனமாகத்தான் இருக்கிறது!
நமது இந்த ‘அனாதை’த்தன்மையை அண்டை இனங்கள் பயன்படுத்தித், தமிழ் – தமிழர் என்ற அடையாளங்களை – மொழிவழித் தாயகத்தை சீர்குலைக்கத் தொடர்ந்து முயல்கின்றன. தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர(நாயக்க) மன்னர்களின் ஆட்சியைக் கொண்டுவர, ஆந்திரப்பிரதேச – தெலங்கானா தெலுங்கர்கள் விடா முயற்சி செய்கிறார்கள் என்பதைத்தான் தெலுங்கு மாநாட்டில் பேசியோரின் தமிழ் எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கின்றன.
எனவே, தமிழர்கள் மிகவும் சனநாயகத்தன்மையுள்ள, அதேவேளை தமிழ் – தமிழர் தற்காப்புக் கவசமாக உள்ள தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்து, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் தமிழ் மொழியை முழு ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்த வலியுறுத்த வேண்டும். அதேவேளை, தமிழர்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாக காலங்காலமாக வாழ்ந்து வரும் ஆந்திரம், தெலங்கானா, கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழை மொழிப் பாடமாகப் படிக்க முழு உறுதி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படவும் வலியுறுத்த வேண்டும்.
Leave a Reply