maha tamilpirabaharan04இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய  மடலில் அவர் கூறியிருப்பதாவது:

“சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால்  தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண  அவை உறுப்பினர் பசுபதி (பிள்ளை) ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற  சிற்றூருக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு  என்னும்  சிற்றூருக்குச் சென்று,  தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப் படைத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். vaiko01

மூவரையும் கைது செய்த  படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரனையும், பசுபதி (பிள்ளை)யையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர்.

செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால், இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை; உயிரிழப்பு இடரை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும்.

சண்டே டைம்சு ஏட்டின் ஆசிரியர் இலசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து  தலைமையாளர்  தாவீது கேமரூன், இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கைப் படை,  காவல்துறை ஆகியவற்றால் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன்.

தாங்கள் உடனடியாக நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று அந்த மடலில் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்  இதழாளர் மகா தமிழ் பிரபாகரன்  தளைியிடப்பட்டதற்கு பாமக நிறுவனர்  மரு.இராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Thiruma01Ramadoss02