Indian-Overseas-Bank.muthirai0168IOB, thittacheri

திட்டச்சேரி இந்தியன் ஓவர்சீசு வங்கிப் பணியால் பொதுமக்கள் அவதி

நாகப்பட்டினம் மாவட்டம், திட்டச்சேரியில் இந்தியன் ஓவர்சீசு வங்கி உள்ளது. இந்த வங்கியில் நாள்தோறும் பல கோடி மதிப்பில் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், குவைத்து, அமெரிக்கா, ஆங்காங் போன்ற நாடுகளில் வணிகத்திற்காகவும் பணிக்காகவும் செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் இந்த வங்கியை நாடித் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்தல், காசோலை மாற்றுதல், வரைவோலை எடுத்தல் எனப் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் ஓவர்சீசு வங்கியில் அவ்வப்பொழுது கணிணி வேலை செய்யவில்லை என்று கூறி வங்கியை மூடிவிட்டு வங்கி முன்பு விளம்பரப் பலகையும் வைத்து விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ளவர்கள் 10 புதுக்கல்(கிலோ மீட்டர்) அல்லது 15 புதுக்கல் தொலைவில் உள்ள காரைக்கால், நாகூர் போன்ற பகுதிகளில் இயங்கும் வங்கியை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் குறைவு. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பணம் எடுக்கமுடியாமல் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர். இதன் தொடர்பாகப் பலமுறை இப்பகுதியில் உள்ளவர்கள் வங்கிக் கிளை மேலாளரிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். எனவே திட்டச்சேரி பகுதியில் இதற்கு மாற்று வழி ஒன்றை வங்கி நிருவாகம் கையாளம் வேண்டும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியான கனராவங்கி, இந்திய அரசு வங்கி போன்ற வங்கிகள் தங்கள் கிளையைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

(தகவலைக் கூடச் சரியாக எழுதத்தெரியா நிலையில்தான் வங்கி ஊழியர்கள் உள்ளனர் என்பதற்குப் படமே சான்று.)