தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் தொற்று நோய் பரவும் கண்டம்
தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில்
தொற்று நோய் பரவும் கண்டம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி.
இந்த ஊராட்சி அருகில் கிறித்தவர்களின் தூய இடமாகக் கருதப்படும் வேளாங்கண்ணி உள்ளது. தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சியில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் அடிப்படைச் சிக்கல்களான குடிநீர், சாக்கடை வசதி, மின்விளக்கு என்ற எதுவும் செய்து தரப்படவில்லை.
இங்கு ஊராட்சித்தலைவராக இருப்பவர் திருவளர்செல்வி. இவருடைய கணவர்தான் ஊராட்சிமன்றத் தலைவராக செயல்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பொதுப்பணி, வருவாய்த்துறைகளுக்குச் சொந்தமாகப் பல குளங்கள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலான குளங்கள் தனியரால் கைப்பற்றப்பட்டுள்ளன; ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் அன்பழகன் அந்த இடங்களில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பாதிக்கப்படுவதுடன் இப்பகுதியில் நடைபெற்று வரும் மாங்காய், பனங்கிழங்கு, காய்கறிகள் முதலான பல வேளாண் உற்பத்திப்பொருட்கள் அழியும் நிலையில் உள்ளன.
மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவான கடல்கோளால் – சுனாமியால- தாக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. கடல்கோளால் சேதமடைந்த வீடுகளைத் தனியார் தொண்டுநிறுவனங்களும், அரசும் கட்டிக்கொடுத்துள்ளன. அதன்பின்னர் அந்த வீடுகளை ஊராட்சிநிருவாகம் சார்பாகச் சரிசெய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கனமழை பொழிவதால் இப்பகுதியில் ஆங்காங்கே கழிவுநீர் குட்டைகள், வாய்க்கால், சாக்கடைகளில் தண்ணீர் தேங்கித் தொற்றுநொய்களான வயிற்குப்போக்கு, எலும்புமுறிவு(டெங்கு) காய்ச்சல் போன்றவை பரவி வருகின்றன. எனவே தெற்குப்பொய்கை நல்லூர் ஊராட்சி மக்களை நோய்களிலிருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply