தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக அளவில் குளம், கண்மாய் முதலானவற்றிற்குச் செல்லாமல் வீணாக வெளியேறியது.
இந்நிலையில் குளங்களைச் சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாவட்டப் பணியகம் உத்தரவின் பேரில் ஒவ்வோர் ஊராட்சியிலும் கருவேல மரங்களை அகற்ற ஊராட்சிகளுக்கு உத்தவிடப்பட்டு அவ்வுத்தரவு ஒவ்வோர் ஊரவை கூட்டத்திலும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் வெறும் காகித வடிவில் மட்டும் உள்ளது. அதனை எந்த ஓர் உள்ளாட்சி அமைப்பும் செயல்படுத்தவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரியத்தொடங்கியுள்ளது.
இதனால் பருவகாலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடும், வேளாண்மையும் பாதிப்படையும் நிலை உருவாக உள்ளது. எனவே கவர்வு(ஆக்கிரமிப்பு)களையும், கருவேல மரங்களையும் அழிக்கவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Leave a Reply