தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடி
தேவதானப்பட்டி பகுதியில் புதுவகை மோசடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளின் கடன் அட்டை முதலான பணப்பொறி அட்டைகளின் எண்களைத் தெரிந்து கொண்டு தொடர்புடையவர்களிடம் மேலாளர் பேசுகிறேன் எனக்கூறி இரண்டாண்டுக்கு மேலானதால் பணப்பொறியட்டை செயலிழந்து விட்டது என்றும் கடவுச்சொல்லை மாற்றினால் அதை நீக்கிச் செயல்பட வைக்கலாம் என்றும் கூறி கடவுச்சொல்லைப் பெற்றுப் பணத்தை எடுத்துவிடுகின்றனர்.
இதற்காக 9600367557 என்ற எண்ணில் இருந்து அழைக்கின்றனர்.அதன்பின்னர் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் இந்தி மற்றும் மலையாளம் கலந்த மொழியில் பேசுகின்றனர். கடவுச்சொல்லைக் கொடுத்தவுடன் பணத்தை எடுத்துவிடுகின்றனர். இதில் அலைபேசி இணைப்பு உள்ளவர்களுக்கு, பணம் எடுக்கப்பட்டதும் குறுந்தகவல் வந்துவிடுகிறது. அவ்வாறு அலைபேசிஎண் இணைப்பு இல்லாதவர்களுக்குப் பணம் எடுக்கும்போதுதா் தங்களுடைய கணக்கில் இருப்பு குறைந்து உள்ளது என அறியமுடிந்து வங்கிகளில் புகார் அளிக்கின்றனர். ஆனால் இதுவரை பல புகார்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காவல்நிலையத்தில் புகார் கூறினால் இது கணிப்பொறிசார் குற்றம்(Cyber Crime) தொடர்பானது எனக்கூறி விடுகின்றனர். இதன் தொடர்பாகக் காவல்துறை உயர்அதிகாரியிடம் கேட்டபோது இதுமாதிரி யாராவது கேட்டால் உரிய வங்கி மேலாளர்களை உடனே அணுகவேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் கடவுச்சொல் கொடுக்ககூடாது. தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அந்த எண் குறித்துக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றார்.
எனவே பணஅட்டையில் புதுவகை மோசடி செய்பவர்களைக் கண்டறிந்து கைது செய்யவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழந்த பணத்தை மீட்டுத்தரவேண்டும் என்றும் பாதிக்கபட்டவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
காவல்துறை இனியாவது உற்ற நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாமா?
Leave a Reply