பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை
நல்லூரில் அகற்றம்:
மரு.இராமதாசு கண்டனம்!
போராட்டம் வெடிக்கும் எனத்
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:–
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.
அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை இருந்த இடத்தின் மீது வெள்ளை வண்ணம் பூசி அங்கே சிலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் அழித்துள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது.
தனியாருக்குச் சொந்தமான நிலத்தில்தான் பிரபாகரன் சிலை அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் இனத்தைக் காத்தவர் என்ற அடிப்படையில், மற்ற குலசாமிகளுக்கு எப்படிச் சிலை அமைக்கப்பட்டதோ, அதேபோல் பிரபாகரனுக்கு ஊர் மக்கள் சிலை அமைத்துள்ளனர். இது முழுக்க முழுக்க ஊர்மக்களின் நம்பிக்கை சார்ந்த முடிவாகும். இதில் தமிழக அரசோ, காவல் துறையோ தலையிட எந்த உரிமையும் இல்லை.
தமிழ் இனத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் இந்தப் போக்கை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். தெற்குப் பொய்கை நல்லூரில் அகற்றப்பட்ட பிரபாகரனின் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும்.
இதோபோல், தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளது:-
தெற்குப் பொய்கை நல்லூரில் சேவூதராய அய்யனார் கோவில் அந்த ஊர் மக்களுக்குச் சொந்தமான தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாகத் தமிழர் மரபில் கோவிலின் வளாகத்தில் ஊரையும், இனத்தையும் காத்த முன்னோரின் உருவச்சிலைகள் வைக்கப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, அக்கோவிலின் வளாகத்தின் ஒரு புறத்தில் கருப்பன்சாமி சிலையையும், மறுபுறத்தில் குதிரையுடன் தமிழ்தேசிய இனத்தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்கும் சிலையையும் அமைத்த மக்கள் அக்கோவிலுக்கு நேற்று முன்நாள் குடமுழுக்கு நடத்தினர்.
இந்த நிலையில் 06/06 நள்ளிரவு 12 மணிக்கு நாகை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ் குமார் தலைமையில் தெற்குப் பொய்கை நல்லூர் சென்ற காவல்துறையினர், அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுத் தலைவர் பிரபாகரன் அவர்களின் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர்.
குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்கள் சிலை இருந்த இடத்தின் மீது வெள்ளை வண்ணம் பூசி அங்கு சிலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் அழித்துள்ளனர்.
அதுமட்டுமின்றிக், கோவில் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர், கோவில் குடமுழுக்கு குழுவினர், பொதுமக்கள் அனைவரையும் அழைத்த காவல்துறையினர், ‘பிரபாகரன் சிலை இங்கு இருப்பது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நாங்களே அகற்றி விட்டோம்’ என்று எழுதித் தர வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் அனைவர் மீதும் பொய்வழக்கு பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பொதுமக்களும் மிரட்டலுக்குப் பணிந்து அவ்வாறே எழுதிக் கொடுத்துள்ளனர்.
காவல்துறையின் இந்த அத்துமீறல் கடும் கண்டனத்துக்குரியது.
தெற்குப் பொய்கை நல்லூரில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிலை அமைக்கப் பட்டிருந்தது. தமிழ் இனத்தைக் காத்தவர் என்ற அடிப்படையில், மற்ற குலசாமிகளுக்கு எப்படி சிலை அமைக்கப்பட்டதோ, அதேபோல் பிரபாகரனுக்கு ஊர் மக்கள் சிலை அமைத்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க ஊர்மக்களின் நம்பிக்கை சார்ந்தசெயலாகும். இதில் தமிழக அரசோ, காவல்துறையோ தலையிட எந்த உரிமையும் இல்லை. கோவில் வளாகத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிலை அமைக்கப்படுவதால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அவ்வாறு இருக்கும்போது தமிழகக் காவல்துறையினர் ஏன் சட்டப்பகைவர்களைப் போல நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டுச் சென்று சிலையை அகற்றினார்கள் என்பது தெரியவில்லை.
தங்களது இனத்தைக் காத்ததாகத் தங்களின் சொந்தமாகக் கருதுபவர்களின் சிலைகளைத் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் அமைத்து வழிபட மக்களுக்கு உரிமை உண்டு. இதை மதிக்காமல் காவல்துறை நடந்தது வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் செயல்.
முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் இதேபோன்ற அணுகுமுறைகள்தான் கடைபிடிக்கப்பட்டன.
இலங்கை இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்கள் திட்டமிட்டு நசுக்கப்பட்டன. உடல் நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவத்திற்காகச் சென்னை வந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களைத் தரையிறங்கவிடாமல் வந்த விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பித் தமிழக அரசு அவமதித்தது.
தமிழினத்தையும், தமிழர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் இந்தப் போக்கை மாநில அரசின் மீது அழுத்தம் தரும் இந்திய அரசும் அதன் சொற்படி ஆடும் அடிமை கங்காணி அரசான தமிழக அரசும் உடனடியாக கைவிட வேண்டும். தெற்குப் பொய்கைநல்லூரில் அகற்றப்பட்ட தலைவர் பிரபாகரன் சிலையை அகற்றப்பட்ட இடத்தில் தனது சொந்த செலவில் மீண்டும் அமைத்துத் தர அரசு முன்வர வேண்டும்.
இல்லையேல், மத்திய மாநில அரசுக்கெதிரான மாணவர் போராட்டம் வெடிக்கும்.
இவ்வாறு தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சிலையை மீளவும் அரசு வைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளது.
தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்பதே பலரின் நம்பிக்கை. உயிருடன் உள்ளவர்க்குச் சிலை எழுப்புவதுபோல் உயிருடன் இருந்தாலும் காவல் தெய்வமாக மக்கள் மதிக்கையில் அதற்கு எதிராக அரசு அடக்குமுறையைக் கையாள்வது முறையல்ல. தமிழின உணர்வில் இரட்டை அளவுகோலைக் கையாளாமல், தமிழ்நலம் காக்கும் தமிழின உணர்வு காக்கும் அரசாகத் தமிழக அரசு திகழ வேண்டுகின்றோம்.
Leave a Reply