புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறையும் அரங்கேற்றமும்
புதுச்சேரியில் பறையிசை ஆட்ட பயிற்சிப்
பட்டறையும் அரங்கேற்றமும்!
புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவியருக்கான இரண்டு நாள் பறை இசைப் பயிற்சி முகாம், மார்கழி 18, 2051 / 02.01.2021 அன்று அரங்கேற்றத்துடன் நிறைவு பெற்றது.
பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு, புதுச்சேரி திருக்குறள் மன்றம் ஆகிய இரு அமைப்புகளின் சார்பில். தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் திரு. இரா.வேல்சாமி தலைமையில் புதுச்சேரி வேலுராம்பட்டு அறிவர் பள்ளியில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாமை பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி நடத்தி வைத்தனர்.
திருவள்ளுவர் கலைக்குழு தலைவர் தோழர் தே. இளநிலா தலைமையில் கடந்த 01.01.2020 அன்று காலை தொடங்கிய பயிற்சியைத் திருவாட்டி தெய்சி, திருவாட்டி செல்வி காமராசு ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து நேற்று (02.01.2020) இரண்டாம் நாளாகப் பயிற்சி தொடர்ந்து நிலையில், மாலையில் அரங்கேற்ற விழாவுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது.
அரங்கேற்ற விழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தொழில் முனைவர் ப. தமிழ்முத்து பராங்குசம், இலட்சுமி உணவளிப்புப் பணியக உரிமையாளர் திரு. முத்துராமன், “குரலற்றவர்களின் குரல்” நிருவாகி திரு. அசோக்குராசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, பறை இசைப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினர்.
இரு நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்களின் அரங்கேற்றப் பறையிசை ஆட்டத்தைக் கண்டு சிறப்பு விருந்தினர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் வியந்து பாராட்டினார்கள். சிறப்பான பயிற்சி அளித்த திருவள்ளுவர் கலைக்குழுவின் தலைவர் தே.இளநிலா, செயலாளர் தி.சின்னமணி, பொருளாளர் சி. பிரபாகரன், செ. செந்தமிழ், எ. ஆதித்தியன் முதலான கலைக்குழு உறுப்பினர்களுக்குச் சிறப்பு விருந்தினர்கள் நூலாடைப் போர்த்திப் பாராட்டினர்.
பயிற்சிக்கு இடமளித்து உதவிய அறிவர் பள்ளி முதல்வர் சரோ சா பாபு அவர்களுக்கு நூலாடைப் போர்த்தியும், திருவள்ளுவர் படம் பதித்த நினைவுப்பரிசு வழங்கியும் திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் பாராட்டினர். நிறைவில், திருவள்ளுவர் கலைக்குழுவின் செயலாளர் திரு. தி. சின்னமணி நன்றி கூறினார்.
இப்பயிற்சி தொடக்கம்தான் என்றும், தொடர்ந்து புதுச்சேரியில் வாரம் ஒருமுறை பறை இசைப் பயிற்சி வழங்கும் வகையில் தொடர் பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்படும் எனறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு. இரா. வேல்சாமி தெரிவித்துள்ளார்
(பேச – 93454 85214).
திருவள்ளுவர் கலைக்குழு=
தொடர்புக்கு : 9629206998 புலனம் : 7639573579
முகநூல் : www.fb.com/Thiruvalluvarkalaikuzhu
காணொலிகள் : youtube.com/ Thiruvalluvarkalaikuzhu
Leave a Reply