train_app

விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!

 தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத்

தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!

  தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்.

எனவே, தனியாகப் பயணிக்கும் பெண்கள், விரும்பினால் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் புதிய வசதியைத் தெற்கு இருப்பூர்தித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி பெண் பயணிகளுக்கு உதவும் வகையில் பெண் அலுவலர் ஒருவர் பணியமர்த்தப்படுவார். தனியாகப் பயணிக்கும் பெண்கள் 9003160980 என்கிற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உதவி கோரினால், அவர்களுக்கு வேறு இடத்தில் இருக்கை அல்லது படுக்கை வசதி அளிக்கப்படும்.

தனியாகப் பயணிக்கும் பெண்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதவி பெற விரும்பும் பெண்கள் தங்கள் பெயர், கைப்பேசி எண்ணை அளிக்க வேண்டும். இருப்பூர்தித்துறை அலுவலர்களின் உரிய ஆய்வுக்குப் பின்னர், உண்மையாகவே அவர்களுக்கு வேறு இடம் தேவைப்படுமானால், உதவி செய்யப்படும்.

இது தவிர பெண்களின் பாதுகாப்புக்காக இருப்பூர்தித் துறையில் 182 என்னும் உதவி எண்ணும் செயல்பட்டு வருகிறது.

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan