பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு நாவலர் விருது வழங்கப்படுகிறது.
பேரா.மறைமலை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோருக்கு
நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது வழங்கப்படுகிறது.
கனடா நாட்டின் மிக உயரிய பல்கலைக்கழகமான தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தமிழ் மொழிக்கு இருக்கை சார்பில் விருதுவழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தங்கள் வாழ்நாளில் குறிப்பிடத்தக்கத் தொண்டு செய்தவர்களுக்கும் செய்து வருபவர்களுக்கும் உலகளாவிய வகையில் ஆண்டுதோறும் ஒருவருக்கு விருது வழங்கும் நோக்கில் நிதி ஒன்று நிறுவப்பட்டது.
இந்த விருது நாவலர் நெடுஞ்செழியன் பெயரில் வழங்கப்படும்.‘நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது’ என்று அழைக்கப்படும் இந்த விருது, கேடயமும், உரூபாய் இரண்டு லட்சம் பணமுடிப்பும் கொண்டது. அவையின் நடுவில் விருதாளரை வர வழைத்து அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றுச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த விருதுக்கு நடுவர்களாக தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை பேராசிரியரும், கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் பங்காற்றுகிறார்கள்.
2020ஆம் ஆண்டுக்கான ‘நாவலர் நெடுஞ்செழியன் தகைசால் தமிழ் இலக்கிய விருது’
பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும்,
2021ஆம் ஆண்டுக்கான விருது
கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கும் வழங்கப்படும்.
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவையொட்டி கடந்த சூலை 11-ஆம் நாள், 2020 அன்று முதல் விருது வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. மகுடைத் தொற்றுப்பரவலால் அது தள்ளிப் போடப்பட்டது. இரண்டாவது வருட விருது 11 சூலை 2021 அன்று வழங்குவதாக இருந்தது. அதுவும் இப்போது தள்ளிப் போடப்பட்டுவிட்டது. இந்த இரண்டு விருதுகளும் இவ்வருடம் ஆகட்டு அல்லது செட்டம்பர் மாதத்தில் நிலைமை சீரடைந்ததும் வழங்கப்படும்.
வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (விஐடி) நிறுவனரும், வேந்தருமான தமிழன்பர் கோ.விசுவநாதனின் வழிகாட்டலில் இந்த விருது விழா மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
Leave a Reply