நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 5.

(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 4. தொடர்ச்சி)
  1. வெள்ளி வீதியார்


இவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை யுடையார் என்பதும் நச்சினார்க்கினியர், ‘மக்க ணுதலிய வகனைந் திணையுஞ், சுட்டி யொருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என்னுந் தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரவுரையில்,
கன்று முண்ணாது கலத்தினும் படாஅது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇய வேண்டுந்
திதலை யல்குலென் மாமைக் கவினே.‘ (குறுந்தொகை – 27)

[ கன்றும் உண்ணாது கலத்தினும் படாது

நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமை கவினே ]

இது வெள்ளி வீதியார் பாட்டு. ‘மள்ளர் குழீஇய…மகனே இது காதலற்கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினார்’ எனக் கூறியவாற்றான் நண்குணரலாகும். தம்பெயர் கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய இச்செய்யுள், பெண்பாற் கூற்றாதலுங் கண்டுகொள்க. ஔவையார் பாடியருளிய, ‘ஒங்குமலைச் சிலம்பின்’ என்னும் அகப்பாட்டில்,
‘நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்ளி வீதியைப் போல நன்றுஞ்
செலவயர்ந் திசினால் யானே‘ (அகநானூறு. 147)

என்பதனால், செலவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் நிரம்பா நீளிடையில் யானும் வெள்ளிவீதியைப்போலச் செல்லத் துணிந்தேன் எனக் கூறியவாற்றானும், நச்சினார்க்கினியர்,

‘இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லத் துணிந்து
யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்னும்
பிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச்
சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென
மிகவும் இரங்கியவாறு மெய்ப்பாடு பற்றியுணர்க’
(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை-15)

எனக் கூறியவாற்றானும், இவர் தம் அருமைத்தலைவனைப் பிரிய நேர்ந்துழித் தமித்துயிர்வாழ்த லாற்றாது, அவனுடனுறை வேட்கை மீதூர்ந்து அவன் சென்றுழிச் செல்லவேண்டிக் காடும் பிறவுங் கடந்து சென்றனரென்பது உய்த்துணரப்படுவது. ‘முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை'(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை-34) என்னும் புலனெறி வழக்கிற்கு மாறாய்த் தலைவனைப் பிரிந்துறையலாற்றா உழுவலன்பால் அறிவிற் சிறந்த பெருந்தகைமகளார் ஒருவர் நிகழ்த்திய அருஞ்செயலாதலின், ஔவையார் என்னும் அருந்தமிழ்ச் செல்வியார், கற்பின்பாற் றலைவி, பிரிந்த தலைவன்பாற் செல்லத் துணிந்தமைக்கு எடுத்துக்காட்டினா ராவர்.


இவ் வெள்ளி வீதியார் புலனெறி வழக்கெலா முணர்ந்த நல்லிசைப்புலமை மெல்லியலாரா யிருந்தும் தம் தலைவன்மாட்டு வைத்த அன்புமிகுதியான் அவற்றையிகந்து அவன்பாற் செல்லத்துணிந்தமையானே இஃதெடுத்தாளப் பட்டதாகும். இவர் பாடல்களுட் பெரும்பான்மையாகப் பிரிவுபற்றி வருவனவெல்லாம் இவர் தம் தலைவனைப் பிரிந்த காலத்துப் பாடியனவே யாம். புலனெறி வழக்கினாற் பிரிவுடன்பட்டும், ஆற்றலாகாப் பிரிவுத் துயரான் அறிவு மயங்கி அவனைக் காண்டல் வேட்கையே மீதூர்ந்து பெரும் பாலை நிலமெல்லஞ் செல்லத் துணிந்த இவரது அரிய பெரிய அன்பின்றகைமை யாவரானும் அறியலாவது.

அன்பென்ப தொன்றின் றன்மை யமரரூ மறிந்த தன்றால்‘ என்றார் கம்பநாடரும். அயோத்தியரிறை பின்னே வைதேகி என்றுரைக்கும் அன்ன நடை அணங்கு காடெலாம் நடந்ததும், இத்தமிழ்நாட்டுக் கண்ணகி என்னும் கற்புடையாட்டி கோவலன் பின் சென்றதும் இப்புலனெறி வழக்கிற்கு மாறாயினும் அன்பின்றகைமையான் ஆன்றோரெல்லாரானும் புகழ்ந்து பாராட்டப்படுதல்போல, இதனையுங்கொள்க. இதனோடொட்டியாராய்வுழி, மேல் தம்பெயர்கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய, ‘கன்று முண்ணாது’ என்னுஞ் செய்யுள், இவர், தம் தலைவன் பிரியலுற்றபோது தம்மையும் உடன்கொண்டு செல்லாமைக்குக் கவன்று பாடியதாக உய்த்துணரப்படும். இனித் தலைவி, கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது, முற்குறித்த ‘முந்நீர் வழக்கம்’ என்பதற்கு நச்சினார்க்கினியருரை நோக்கி யறிக.

‘என்னீ ரறியாதீர் போல விவைகூறி
னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு
மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு
துன்பந் துணையாக நாடி னதுவல்ல
தின்பமு முண்டோ வெமக்கு’
(கலித்தொகை, பாலை 5)

[என் நீர் அறியாதீர் போல இவை கூறல்

நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும்

அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு

துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது     

இன்பமும் உண்டோ எமக்கு]

என்று தலைவி கூறுமாற்றான் உணர்க. இவ்வாறு தலைவி கூறுவன தலைவன் செலவழுங்குதற்குக் காரணமாவனவல்லது உடன்கொண்டு சேறற்காவன வில்லை என்பர். இவர் அவ்வாறன்றித் தலைவன்பாற் செல்லவேண்டி நெறிபடு கவலைய நிரம்பா நீளிடையினுஞ் சென்றமையானே அருமைபற்றி இவர் பெருஞ்செயல் எடுத்தாளப்பட்டதாகும் என்பது தெள்ளிது. இனி, இவர் தலைவனுடன் செல்லவேண்டினரல்லது, அவன் பிரிந்த பின்பு அவன்பாற் செல்லத் துணிந்தனரில்லையெனின், அஃது எல்லா மகளிர்க்கும் ஒத்தலான் இவரது செயலொன்றையே சிறப்பித்து, ‘வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே’ எனக் கூறார் என்க.

(தொடரும்)