பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்
பேரிடர்ச் சாலைகள் – அவதிப்படும் பொதுமக்கள்
கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் சாலைகள் பேரிடரில் உள்ளன. இது குறித்துக் கருத்து செலுத்தவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகமோ கவலைக்கிடமாக உள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்காலில் துறைமுகம் உள்ளது. மேலும், எண்ணெய் இயற்கை எரிவளி நிறுவனம்(ONGC),தென்கன்னெய் வேதிய நிறுவனம் (SPIC), முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் கும்பகோணம் வழியாகவும், நன்னிலம் வழியாகவும் தூத்துக்குடி, சென்னை முதலான பகுதிகளுக்கு அனுப்பப் படுகின்றன. எடுத்துக்காட்டாக 4 பாரம்(டன்) ஏற்றிச்செல்லக்கூடிய சுமையூர்திகளில் 8 பாரம் எடையுள்ள பொருட்களை ஏற்றிச்செல்கிறார்கள்.
இவற்றைத்தவிர வடிநில மாவட்டங்களில் விளையக்கூடிய நெல், அரிசி போன்ற பொருட்கள் இந்தச்சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் காரைக்கால், புறாகிராமம், ஏனங்குடி, நன்னிலம், கும்பகோணம் வரையும், நன்னிலம் வரையாக உள்ள சாலைகள் அதிகமாகப் பழுதடைந்துள்ளன. இதனால் பள்ளிமாணவ, மாணவிகள், நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
இவற்றைத்தவிர நாகூர், திருநாகேசுவரம், கும்பகோணம், திருக்களாஞ்சேரி, திருவிடைமருதூர், திருநள்ளாறு, வேளாங்கண்ணி முதலான வழிபாட்டுத் தலங்களைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகைபுரிகின்றனர். நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்; வருகை புரிவதால் இந்தச்சாலை எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர் முதல் இந்நாள் அமைச்சர் வரை பங்குதாரர்களாக உள்ளனர். இதன் தொடர்பாக இப்பகுதி மக்கள் புகார் கூறினால் அடுத்த நிமிடமே அடியாட்கள் கொண்டு மிரட்டப்படுகிறார்கள்.
இதன் தொடர்பாக நன்னிலத்தைச்சேர்ந்த சேத்த மரைக்காயர் கூறுகையில், “காரைக்கால் பகுதியில் கெயில் நிறுவனம், சென்னை பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் எரிவளி நிறுவனம் முதலான பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும் காரைக்கால் பகுதியில் உள்ள துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்போது நிலக்கரி மீது தண்ணீர் இறைத்து அதன்பின்னர்தான் இறக்கிவைக்க வேண்டும். ஆனால் அதனைப் பின்பற்றாமல் நிலக்கரியை இறக்குகின்றனர். இதனால் வாஞ்சுர், பனங்குடி, நாகூர், போலகம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு நுரையீரல் தொடர்பான நோய்கள் அதிகம் உள்ளன. இவற்றைத்தவிர மரைக்கான்சாவடியில் ரெடிமிக்சு நிறுவனத்தின் கழிவுகள் நெல்வயல்களில் பட்டு வயல்கள் வேளாண்மைக்குப் பயன்படாமல் தரிசுநிலமாக மாறிவருகின்றன. மேலும் கெயில் நிறுவனத்தின் வழியாக தீவளி(மீத்தேன்) குழாய்கள் அரசிடம் எந்தவித இசைவும் பெறாமல் செல்கிறது. இதனால் எந்த நேரத்திலும் ‘போபாலாக’ மாறிவரும் கண்டம்(அபாயம்) உள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். இதனைக்கண்டு கொள்ளவேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் மயக்கநிலையில் உள்ளது” என்றார்.
எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இந்தச்சாலையை சரிசெய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
Leave a Reply