மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை 
சிலை அமைப்பதை 
எதிர்த்துப் போராட்டம்! 
பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!

போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை நீக்கு!”, “தமிழன்னை சிலையா சமற்கிருத மாதா சிலையா?” என்பன முதலான ஆவேச முழக்கங்களை எழுப்பிய தோழர்கள், அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர்.

நாம் தமிழர் கட்சி தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு. வெற்றிக்குமரன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்தோழர் கி. வெங்கட்ராமன், மருது மக்கள் இயக்கப் பொதுச் செயலாளர் திரு இராசுகுமார், தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் திரு.சி. பேரறிவாளன், தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழில் வழக்காட உரிமைகோரும் இயக்கஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங்கு, ஏழு தமிழர் விடுதலைக் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. காந்தி, வீரகுலஅமரன் இயக்கம் நிறுவனர் திரு. இரா. முருகன், மக்கள் சட்ட உரிமை இயக்க மாநிலத் தலைவர் திரு. அண்ணாதுரை, புரட்சிகரஇளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் குமரன், மனித உரிமைக்கானகுடிமக்கள் இயக்க மாநிலஒருங்கிணைப்பாளர் திரு. ஆசிர்வாதம், மதுரை ஃச்டார் தொழிலாளர் ஒன்றியப் பொதுச் செயலாளர் பழ. இராசேந்திரன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணித் தோழியர் பாண்டியம்மாள், இரேவதி முதலான பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் தோழர்களும் என 200 பேர் கைது செய்யப்பட்டனர். பெண்களும் ஆண்களும் தத்தம் கைக்குழந்தையோடு போராட்டத்தில் பங்கெடுத்து கைதாகினர்.

இச்சூழலில் தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் சிலை அமைக்கக் கோரும் ஏல ஒப்பந்தத்தை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது என்றும், இது போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்றும் பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஒப்பந்தத்தை நீக்கியதோடு நிற்காமல் தமிழ்நாடு அரசு தமிழறிஞர்களையும், தமிழ்நாட்டு வல்லுநர்களையும் கொண்ட புதிய குழு அமைத்து கல்லிலோ வெங்கலத்திலோ, தமிழர் மரபுப்படி தமிழன்னை சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் பெ. மணியரசன் அவர்கள் வலியுறுத்தினார்.

 

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================