மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்:
மாநில அரசின் அதிகாரத்தை
மத்திய அரசு பறிக்கக் கூடாது!
தாலின் அறிக்கை
“தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினர்கள் “தெரிவுக்குழுவிற்குச் சட்டவரைவை அனுப்புமாறு” கோரிக்கை வைத்திருப்பதில் ஆழமான பொருளும், நியாயமும் இருக்கிறது.
மண்டல் ஆணையம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் “தேசியப்பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம்” 14.8.1993 அன்று அமைக்கப்பட்டது.
தலைவர் கலைஞரின் நீண்டநாள் கோரிக்கை ஏற்புக்கு வரவேற்பு!
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி திரு. இரத்தினவேல் பாண்டியன் இந்த ஆணையத்தின் தலைவராக இருந்து செயல்பட்டிருக்கிறார். மண்டல் ஆணையம் தீர்ப்பின் படியே ஒவ்வொரு மாநிலத்திலும் ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்’ உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்குச் சமூகநீதி வழங்க அரசியல் சட்ட அதிகாரம் தேவை” என்ற கோரிக்கை பல வருடங்களாக எழுப்பப்பட்டு வருகிறது. “அரசியல் சட்டத்தகுதி வழங்கப்பட வேண்டும்” என்று தேசியப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையமே கடந்த 5.12.2003இல் தொடங்கி இதுவரை எட்டுமுறை தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
தி.மு.க.வும் பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2012-13ஆம் வருடத்திலேயே “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” என்று ‘இதர பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்றக் குழு’ பரிந்துரை செய்து இன்றைக்கு 123-ஆவதுஅரசியல் சட்டத் திருத்தமாக மக்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கப்படவேண்டும் என்பது சமூக நீதிக்காக தன்வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞரின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கை இப்போது ஏற்கப்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது. ஆனால் அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதையும், மாநிலங்களில் உள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ச் செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை அறிவிக்கும் பொறுப்போ, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியை அந்தப் பட்டியலில் சேர்க்கும் பொறுப்போ மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. மண்டல் ஆணைய வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதி மன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பிலேயே இதைஉறுதி செய்திருக்கிறது.
மாநில அரசுக்கே பொறுப்பு
உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு!
“பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்” என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்போது கொண்டு வந்துள்ள அரசியல்சட்டத் திருத்தத்தில் 342.அ என்ற புதிய பிரிவைஉருவாக்கி, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைக் குடியரசுத் தலைவர் உருவாக்குவார் என்று கூறுவது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக்கொள்ளும் செயலாகும்.
மத்திய அரசின் போக்கு உள்நோக்கம் கொண்டதாகும்!
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதியைச் சேர்ப்பது, இருக்கின்ற சாதியை நீக்குவது போன்ற அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள விரும்புவது உள்நோக்கம் கொண்டதாகவும், இதுவரை இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பா.ச.க. தலைவர்கள் பேசிவந்ததை எதிரொலிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. ஆகவே ‘கூட்டுறவு, கூட்டாட்சி’என்று கூறிக் கொண்டே மாநில அரசுகளை ஒரு நகராட்சித் தகுதிக்குத் தரம் தாழ்த்தும் செயலில் பா.ச.க. தலைமையிலான மத்தியஅரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைவரையும் கவலை கொள்ள வைக்கிறது.
‘பிற்படுத்தப்பட்டோருக்கு’ப் புதிதாக மத்தியஅரசு ஒரு பட்டியலை உருவாக்கப் போகிறது என்றால் இப்போது மாநிலங்களில் உள்ள – குறிப்பாகத் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களின் கதி என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
ஏற்கெனவே மாநிலங்களில் உள்ள பட்டியல்கள் தொடரும் என்று அரசியல் சட்டத் திருத்தத்தில் இடம் பெறவில்லை. இன்னும் சொல்லப் போனால், மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் பட்டியலும், மத்தியில் தற்போது உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலும் ஏறக்குறைய ஒரேமாதிரியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பட்டியல் மாறுபடுகிறது.
தற்போதைய பட்டியல்களின் நிலை குறித்து விளக்குமா?
ஆகவே மத்திய அரசு பணிகளில் வேலைவாய்ப்பு, மத்தியக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, மத்திய அரசின் மற்ற நலத் திட்டங்கள் போன்றவை தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசில் எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்து மத்திய அரசு உருவாக்கப் போகும் புதிய பட்டியலால் ஏற்படும் அபாயம் உருவாகியிருக்கிறது. ஆகவே இப்போதுள்ள மாநில அரசுகளின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களின் நிலை குறித்த விளக்கத்தை மத்திய அரசு தெரிவிக்க முன்வர வேண்டும். பாராளுமன்றம் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஒரு சாதியைச் சேர்க்கவோ, நீக்கவோமுடியும் என்று 123-ஆவது அரசியல்சட்டத் திருத்தத்தில் சேர்த்திருப்பது மாநிலச் சட்டமன்றங்களின் அதிகாரத்தைக் கவரும்(ஆக்கிரமிக்கும்) போக்கு ஆகும். மாநிலங்கள் தொடர்பானவற்றில் ஆளுநர் மூலம் மாநில சட்டமன்றத்தின் கருத்து பெறப்படும் என்றாலும், கடந்த காலங்களில்- குறிப்பாக பா.ச.க. ஆட்சியினர், மாநிலச் சட்டமன்றங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் எந்த அளவிற்கு மதிப்பளித்து வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது இந்த ‘கருத்துக் கேட்கும்’ படலத்தில் ஐயம் எழவே செய்கிறது.
சட்டத் திருத்தத்தின் மூலம்
அதிகாரத்தைப் பிடுங்குவதா?
ஆகவே “மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவு ‘தெரிவுக்குழுவிற்கு’ அனுப்பப்பட வேண்டும்” என்ற கோரிக்கை வரவேற்கத்தக்கது. தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கிறோம் என்ற நோக்கம் உன்னதமானது. நீண்ட நாள் கோரிக்கை இப்போதாவது நிறை வேறுவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் மாநில அரசுகள், மாநிலச் சட்டமன்றங்கள், மாநில அளவில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் அனைத்தின் அதிகாரத்தையும் ஒரே அரசியல் சட்டத் திருத்தம் மூலம் பிடுங்கிக் கொள்ளும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ச.க. அரசு ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். 69 % இட ஒதுக்கீடு அளித்து, இந்தியாவிற்கே சமூக நீதியின் தொட்டிலாகத் திகழும் தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா ஆகியோரின் மாநிலம் தமிழகம் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கும் பொறுப்பை மாநில அரசிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும், இதன் தொடர்பில் மண்டல் ஆணைய வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு மாறாக மத்தியில் உள்ள பா.ச.க. அரசு எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன். நிலைக்குழுவிற்கு இந்தச் சட்ட வரைவு வரும் போது நிலைக்குழு உறுப்பினர்களும் “பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் தயாரிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் பரிந்துரைகளை வழங்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு செயல் தலைவர் மு.க. தாலின் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நன்றி : முரசொலி
Leave a Reply