72mangoflower

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.

     சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப் புழு, இலை பிணைக்கும் புழு, பழ ஈ, மா தண்டுப்புழு, சாம்பல்நோய், பறவைக்கண்நோய், கரும்பூஞ்சாண் நோய் எனப் பல வகை நோய்கள் மாம்பழவேளாண்மையைப் பாதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் குறைவாக இருக்கும் என உழவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  பலவகையான நோய்கள் தாக்கிய நிலையில் இதனைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறையினர் ஆர்வம் கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த ஆண்டு மருந்து அடித்த கூலியாவது கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள். எனவே தோட்டக்கலைத்துறையினர் மாந்தோப்பு உழவர்களை அணுகி நோயிலிருந்து தாக்கிய மாம்பூக்களைக் காப்பாற்றுவது எப்படி என விளக்க வேண்டும் என்றும், இனிமேல் வருகின்ற பூக்களை நோய்கள் தாக்காவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் வேளாண்மக்கள் எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.

72vaikaianeesu