கதிர் மகாதேவன் :kathir mahadevan

மேனாள் துணைவேந்தர் அறிஞர் கதிர்.மகாதேவன் இயற்கை எய்தினார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கதிர்.மகாதேவன் (80) மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (சித்திரை 09, 2047 / ஏப்.22) காலை இயற்கை எய்தினார்.

  இவர் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுள் ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்கக் காலம்’ என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. இந்நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. ஆங்கிலத்திலும் தமிழ் இலக்கியம் தொடர்பான நூல்களை எழுதித் தமிழ்த்தொண்டாற்றினார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம், அகரமுதல மின்னிதழ் சார்பில் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள : 95006-66455.

சில நினைவுகள்

என் ஆசிரியர் என்ற வகையில் அவர் மீது மதிப்பும் அன்பும் எனக்கு உண்டு. தம்முடைய ஆசிரியரான பேரா.சி.இலக்குவனார் மீதும்அவருக்கு அளவுகடந்த அன்பும் மதிப்பும் உண்டு.

 பேரா.சி.இலக்குவனார் தமிழ்க்காப்புக்கழகம் சார்பில் மாலை நேரங்களிலும் விடுமுறை நாள்களிலும் நடத்திய தமிழ் வகுப்புகளில் பங்கேற்று வகுப்பு நடத்தினார்.

  தேசியப்பயிற்சிப்படையாசானாகத்தான்சேர்ந்தது தனக்கு வாழ்வில் உயர உதவி புரிந்ததாகவும் அதற்குக் காரணம் பேராசிரியர் இலக்குவனாரே என்றும் பலமுறை கூறியுள்ளார்.

  ஒருநாள் 10 கல் தொலைவிலிருந்து திருநகருக்கு மிதிவண்டியில் வந்து பேராசிரியர் இலக்குவனாரைச் சந்தித்தார். தே.ப.ப.(என்.சி.சி) ஆசானாகத் தனக்குத் தகுதியிருந்தும் தமிழ்த்துறை என்பதால், தேர்ந்தெடுக்கவில்லை என்றார். “தமிழ்த்துறை என்பதைத் தகுதிக் குறைபாடாக எண்ணினால் இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம். அதில் சேர்ந்ததாகவே எண்ணி வீட்டிற்குப்போ. நாளை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பேராசிரியர்.

 அதேபோல், உரியவர்களிடம் பேசித் “தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ்க்கல்வியைத் தகுதிக்குறைபாடாக எண்ணும் துணிவு எப்படி வந்தது” என்று கேட்டார். போசிரியரின் அறிவுறுத்தலுக்குப் பின்னர் அவர் தேசியப்பயிற்சிப்படை ஆசானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அவர் தன் தகுதியால் மீநாயகர்(Major) உயர்வு வரை பெற்றார். தே.ப.படையில் சேர்ந்தது பிற துறையினருடனான தொடர்பிற்கும் அவர்கள் தமிழ் பற்றிய கருத்தை மதிப்பதற்கும் துணை புரிந்தன என்பார். ஙஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில்’ பேராசிரியர் இலக்குவனார் நினைவு நாள் ஒன்றின் பொழுது நினைவுரை ஆற்றுகையில் இதனையும் குறிப்பிட்டார். தமிழ்த்தாய்ப் படத்தைக் காட்ட வேண்டும் என்றால் பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத்தான் காட்ட வேண்டும் என்றும் அப்பொழுது குறிப்பிட்டார்.

  இதற்கு முன்னர், அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபொழுது ஏற்பட்ட மறக்கமுடியாத நினைவு ஒன்று. தமிழ் முதுகலை மாணாக்கர்களுக்குக் கணிணியியலையும் சொல்லித்தர வேண்டும் எனக் கூறியிருந்தேன்.  இதுகுறித்துப் பின்னர் வினவியபொழுது, தனக்கும் எண்ணம் இருந்ததால் “பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டேன். ஆனால், ஆசிரியர்களுக்கும் தெளிவில்லை. மாணவர்களுக்கும் ஆர்வமில்லை. ஒரு நாள் வகுப்பு எடுக்க முடியுமா” எனக் கேட்டார். நான் இசைந்து ‘வியாழன் வட்டம்’ என்னும் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஒரு பொழுது கணிணியியல் குறித்து உரையாற்றினேன். உரை முடிந்ததும் கணிணியில் குறித்த அறிமுகமும் கலைச்சொற்கள் விளக்கமும் மிக அருமையாக இருந்ததாகவும் இதனை அப்படியே எழுதிக் கொடுத்து விட்டால் முனைவர் பட்டம் அளித்து விடுவேன் என்றும் பாராட்டினார். பிறகும் சிலமுறை அன்றைய உரையால் மாணவர்களுக்கு ஆர்வமும் உற்சாகமும் ஏற்பட்டு வகுப்புகள் சிறப்பாக நடக்கின்றன என்றார்.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் ஒழிவாக இருந்தபொழுது கதிர்.மகாதேவன் ஐயாவிடம் அதற்கு விண்ணப்பிக்கலாமே என்று கேட்டேன். தான் அமைச்சரைச் சந்தித்ததாகவும் வாய்ப்பு இல்லை என்று மறுத்துவிட்டதாகவும் கூறினார். பின்னர் அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம், “ஐயா, தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு யாரையும் முடிவெடுத்து உள்ளீர்களா” என்று கேட்டேன். “தகுதியானவர் கிடைக்காமல் குழப்பத்தில் உள்ளோம். பணியாளர் சிக்கல்கள் மிகுதியாக உள்ளன. எனவே, பரிந்துரைக்கு இடம் கொடுக்காமல் தக்கவரை அமர்த்தவேண்டும் எனத் தலைவரும்(முதல்வர் கலைஞர்) நானும் முடிவெடுத்துள்ளோம்” என்றார். அப்பொழுது அவரிடம் கதிர் மகாதேவன் எந்தெந்த வகையில் பொருத்தமானவர் என விளக்கித் தமிழ்த்துறையினருக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். தன்னைச் சந்தித்த பொழுது தான் மறுத்து அனுப்பியதைக்கூறித் “தலைவரிடம் நல்ல தெரிவு எனக் கூறுகிறேன்” என்றார். பின் கதிர் மகாதேவன் ஐயாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரைப்பற்றிய முழு விவரங்களையும் தமிழ்வளர்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகனுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டினேன். அவர் அஞ்சலில் அனுப்புவதை விட யார் மூலமாவது நேரில் அளித்தால் சிறப்பு என அமைச்சருக்கு அறிமுகமான உறவினர் ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார்.

அமைச்சர் கூறினால் முதலமைச்சர் ஏற்கும் காலமாக – அமைச்சரும்   நடுநிலையான செய்தியை யார் கூறினாலும் ஏற்கும் காலமாக – இருந்த காலம் அது. எனவே, முனைவர் கதிர்.மகாதேவன் துணைவேந்தருக்குப் பரிந்துரைக்கப்பட்டு ஆளுநர் ஒப்பத்திற்குக் கோப்பு சென்றது.

அப்பொழுது நான் மதுரைக்குக் கணிணிஓவியக்காட்சிக்குச் சென்றேன். கதிர்.மகாதேவன் ஐயாவும் ஓவியக்காட்சியைப் பார்க்க வந்திருந்தார்.(அவர் பார்வையிட்டவாறான படம் இந்து நாளிதழில் வந்திருந்தது.) விரைவில் அவருக்கான ஆணை வரும் எனவும் நேரில் வாங்கலாம் எனவும் எனவே, சென்னைக்கு வந்து தங்கியிருக்குமாறும் கூறினேன்.

அடுத்த சில நாளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்இணைய மாநாட்டிற்கு முனைவர் கதிர்.மகாதேவன் ஐயா வந்திருந்தார். தொடக்க நிகழ்விற்குப்பின் அவரைச் சந்தித்த நான், அவர் தொடக்க நிகழ்சிக்கும் நிறைவு நிகழ்ச்சிக்கும்தான் இசைவு உண்டென்று கூறித் தன்னை உள்ளே விட மறுத்துவிட்டதாகவும், பின்னர் ஏன் அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டார்.

உடன் நான் அவரை அழைத்துக்கொண்டு, முனைவர் அனந்தகிருட்டிணர் அவர்களிடம் சென்றேன். “மதுரைகாமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவருக்கு மாநாட்டில் இடமில்லை என்பது தமிழைப் புறக்கணிப்பதுபோலாகும். இவர், இன்றோ நாளையோ புதிய பொறுப்பு ஒன்று ஏற்க உள்ளார். இந்த மாநாட்டில் அவர் பங்கேற்பது தமிழ் இணைய வளர்ச்சிக்கு உதவியாக அமையும்” என்று கூறினேன். உடனே அவர், “தடையின்றிப்பங்கேற்கலாம்; உரியவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்” என இசைவு தந்தார். அதேபோல் பின்னர்த் துணைவேந்தர் ஆணை பெற்றுப் பொறுப்பும் ஏற்றார்.

துணைவேந்தர் பொறுப்பேற்றதும் நான் வாழ்த்து கூறும் முன்னர் அவராகவே என்னிடம் பேசினார். பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பேச வேண்டும் என்றும் கூறினார். துணைவேந்தர் பொறுப்பேற்றதும். அவராகப் பேசிய எளிமையும் அன்பும் மறக்கமுடியாதனவாகும்.

  அன்பிற்குரிய ஆசான் மறைவு வருத்தத்தைத் தருகின்றது. அவரது ஒப்பிலக்கிய அறிவும் தமிழ் குறித்த ஆங்கிலப் புலமையும் பிற தமிழ்த்துறையினர் பின்பற்ற வேண்டியனவாகும்.

அவர் மாணாக்கர்கள் அவர் வழியில் செயல்பட்டுத் தமிழ் வளர்ச்சியில் ஈடுபடுவார்களாக!

துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

முகப்பு-கருத்துகள்வலைப்பூ, முத்திரை :muthirai_mukappu_karuthukal_views