யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் – வைகோ
விருதுநகர் தொகுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டுக் கிடந்தாலும் ஓடிச்சென்று காப்பாற்றுவேன் என்று தேர்தல் கூட்டத்தில் வைகோ பேசினார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ச.க. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் வைகோ, திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
குசராத்து மாநிலத்திற்கு நான் சென்றிருந்த போது, இன்றைய தலைமையாளர் -பிரதமர்- வேட்பாளர் நரேந்திரமோடி என்னை வரவேற்றார். அங்கு நடைபெற்ற அமைதிப்பேரணியில் அவருடன் நானும் நடந்துவர ஏற்பாடு செய்தார். அனைவரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கக்கூடிய வதோரா என்ற ஊருக்குச் சென்றோம்.
‘வதோரா’ என்றால் ஆலமரங்களின் கூட்டம் என்று பொருள். பேரணியில் சென்ற நாங்கள் பகல் 12 மணிக்கு, வெயிலான வேளையில் ஆலமரங்களின் நிழலில் போய்ச்சேர்ந்தோம். அந்த இடத்தில் தலைவர்கள் வரிசையாகப் பேசிவிட்டு, என்னைப் பேசச் சொன்னபோது, நான் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினேன். அப்போது முன்னாள் மத்திய மந்திரி முரளிமனோகர் சோசி என்னுடைய பேச்சை இந்தியிலும், குசராத்து முதல்–மந்திரி நரேந்திரமோடி என்னுடைய பேச்சை குஜராத்தி மொழியிலும் மொழி பெயர்த்தனர்.
மதங்கள் அரவணைப்பு
அப்போது நான் சொன்னேன். ஆலமரங்களின் கூட்டத்துக்குக் கீழே நாம் உட்கார்ந்திருக்கிறோம். இந்த ஆலமரங்களில் எண்ணற்ற வகைவகையான வண்ணப்பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன. அந்தப் பறவைகளுக்குப் பசியைப்போக்க ஆலமரம் கனிகளைத் தருகிறது. எப்படி ஆலமரத்தில் பல்வேறு வகையான பறவைகள் இருக்கின்றனவோ, அதைப்போல இந்தியாவில் இருக்கின்ற அனைத்துச் சமயங்களையும் அரவணைக்கின்ற வகையில் அரசும் நாடும் இருக்க வேண்டும் என்று நான் பேசினேன். எளிமையான ஒருவர் பேசியதை ஒரு முதல்–அமைச்சர் மொழிபெயர்த்ததை இதுவரை நான் கண்டது இல்லை. நான் ஒரு சாதாரணமானவன். எனக்கு அவ்வளவு பெரிய பெருமையைத் தந்தார். இந்த ஊருக்கு வந்தவுடன் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வந்தது.
வேப்பம் பூ மாலை
நான் மனிதாபிமானம் மிக்கவன். விருதுநகர் தொகுதியில் என்னைத் தேர்ந்தெடுத்தால், யார் காயப்பட்டுக் கிடந்தாலும், சாதி, சமயம் பார்க்காமல் போய்க்காப்பாற்றுவேன். மது குடிக்க வேண்டா என்று வெயிலிலும், மழையிலும் நடைப்பயணம் சென்றேன். மது குடித்தால் குடும்பம் சீரழியும் என்று செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வருகிறேன்.
ஆனால் அ.தி.மு.க.வினர் மது வாங்கிக்கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்துச்செல்கிறார்கள். தாய்மார்கள் இதையெல்லாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இந்த ஊரில் எனக்கு வேப்பம் பூ மாலை அணிவிக்கப்பட்டது. இது பாண்டிய மன்னர்கள் அணிந்த மாலை.
இவ்வாறு அவர் பேசினார்
Leave a Reply