தலைப்பு-கொலையாளி துரையப்பா பெயரில் திடல் திறப்பு : thalaippu_Duraiappahname_nedumaaran_kandanam

வஞ்சகன்(துரோகியின்) பெயரைச் சூட்டத்

தலைமையாளர் துணை போவதா?

பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை

  யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுத் திடலுக்கு ஆல்பர்ட்டு துரையப்பா என்பவரின் பெயரைச் சிங்கள அரசு சூட்டி, இந்தியத் தலைமையளார நரேந்திரர்(மோடி)யைக் கொண்டு அந்தப் பெயர் பலகையைக் காணொளிக் காட்சியின் மூலம் திறக்க வைத்துள்ளது. சிங்கள அரசின் சூழ்ச்சிக்கு இந்தியத் தலைமையாளர் இரையானது வருந்தத்தக்கதாகும்.

 1975ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இதே திடலில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது, அதைத் தடுக்க யாழ்ப்பாண  மாநகரத்தலைவராக இருந்த ஆல்பர்ட்டு துரையப்பா தீவிர முயற்சி செய்தார். அம்மாநாட்டில் கலந்துகொண்ட மக்கள் மீது சிங்களக் காவல்படையை ஏவி 9 தமிழர்கள் படுகொலையானதற்கும் அவரே காரணம்.

  பஞ்சாப்  சாலியன் வாலாபாக்கு படுகொலைக்குக் காரணமான  படைத்தலைவர் தயரின்(Colonel Reginald Edward Harry Dyer)  பெயரை அந்தத் திடலுக்குச் சூட்டினால் அது எத்தகைய மன்னிக்க முடியாத செயலோ, அதைப் போன்ற செயல்தான் யாழ்த் திடலுக்குத் துரையப்பாவின் பெயரைச் சூட்டியதாகும்.

  இதே திடலில் படுகொலையான 9 தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் இடித்துத் தகர்த்துவிட்டது. அதே இடத்தில் மீண்டும் அந்த நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு  மாற்றாக அவர்கள் கொலைசெய்யப்படுவதற்குத் துணையாக நின்ற ஒருவரின் பெயரைத் திடலுக்குச் சூட்டுவது வெந்தப்புண்ணில் வேலைச் செருகுவது போலாகும். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அன்புடன்

பழ.நெடுமாறன்

தலைவர், தமிழர் தேசிய முன்னணி

 தகவல் : ஆவல்.கணேசன்-

செய்தித்தொடர்பாளர்

தமிழர் தேசிய முன்னணி

தரவு : தமிழ் இராசேந்திரன்