92vaikaianeesu-thaayaar-mumthaj02

  ‘அகரமுதல இதழின் சிறப்புச் செய்தியாளரும் கட்டுரையாளரும், தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை உடையவருமான தமிழ்நாடு இதழ்கள் ஊடகச் செய்தியாளர்கள் ஒன்றியத்தின் தேனி மாவட்டச் செயலாளரும், இதழ்கள், தொலைக்காட்சிகளின் செய்தியாளரும், வரலாற்றுக் கட்டுரையாளரும் கல்வெட்டு ஆய்வாளரும் தொல்லியல் சார் படைப்பாளருமான வைகை அனிசு அவர்களின் தயாரும் காலஞ்சென்ற ஆசிரியர் அப்துல்வகாப்பின் மனைவியுமான ஓய்வு பெற்ற ஆசிரியர் மும்தாசு பேகம் அவர்கள் இன்று (ஆடி 31, 2046 / ஆகத்து 16, 2015) காலை 8.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவருடைய உடல் நல்லடக்கம் தேவதானப்பட்டி பள்ளிவாசல் மையவாடியில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

 

 மறைந்த மும்தாசு பேகம் : தேனி மாவட்டத்தில் இசுலாமியப் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க கூடாது என்ற உத்தரவை மீறித் தன்னுடைய பாட்டனாரும் விடுதலைப் போராட்ட ஈகையருமான கம்பம் ஃகாசி.மீ.முகமது நைனார் அவர்களின் அறிவுரைப்படியும் தன்தந்தை அப்துல் அக்கு அசுரத்து அவர்களின் வழிகாட்டுதலின்படியும் பெரியகுளம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்விப்படிப்பை முடித்தார். அதன்பின்னர் திருமங்கலத்தில் ஆசிரியர் பயிற்சிக்கல்வியைப் படித்தார். கரூர் மாவட்டத்தில் உள்ள உசுவத்துன் அசனா கீழ்த்திசைப்பள்ளியில் பணிபுரிந்தார். பணிபுரிந்த காலத்தில் கெங்குவார்பட்டியில் ஆசிரியராகப் பணிபுரிந்த அப்துல் நவாப் அவர்களுடன் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் பணிமாறுதல் பெற்று தேவதானப்பட்டி இந்து நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இவருக்கு வைகை அனிசுடன் சேர்த்து மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர்.

 

அவரது குடும்பத்தினர், சுற்றத்தினர் அனைவருக்கும் ‘அகரமுதல’ இதழின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

92vaikaianeesu-thaayaar-mumthaj03