jayalalitha-meeting01

ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல்  பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர்  செயலலிதா பேசியதாவது: பாச கவின்

“ஆ” அணிதான் அதிமுக என்றும், பாசகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. . எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் “ஆ” அணி இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி.

காங்கிரசு, பாசக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் இலட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த இலட்சியம் நிறைவேற 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றே தீர வேண்டும். எனவேதான், இத் தேர்தலில் 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.

தேர்தல்  பரப்புரைக் கூட்டங்களில் மத்திய காங்கிரசு கூட்டணி அரசையும், அந்தக் கூட்டணியில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்து தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு உறுதுணையாக இருந்த திமுகவையும்தான் எங்களால் கடுமையாக விமர்சிக்க முடியும். ஏனெனில் இத்தேர்தலே காங்கிரசின் மோசமான ஆட்சிக்கு எதிராக நடைபெறும் தேர்தல்தான்.

 தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று, மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து, கடந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் தமிழக மக்களை வஞ்சித்த கட்சி திமுக. எனவே, திமுகவின் பொய் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும் என்பதற்காகவே திமுக தேர்தல் அறிக்கையை நான் விமர்சித்து வருகிறேன்.

அதிமுக மகத்தான வெற்றி பெறும்போது என்னென்ன செயல் திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்பதைத்தான் நான் விளக்கமாகச் சொல்லி வருகிறேன். திமுகவும் இதர கட்சிகளும் தாங்கள் என்ன செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை எடுத்துச் சொல்லவில்லை. அவர்கள் சொல்வதெல்லாம் இரண்டே இரண்டுதாம்.  ஒன்று  செயலலிதா

பிரதமர் ஆகிவிடக் கூடாது; மற்றொன்று, தாங்கள் சுட்டிக் காட்டுபவர்தான் பிரதமர் ஆக வேண்டும்.

தமிழக நலனில் பாசகவுக்கு அக்கறை இல்லை: பாசகவின் தேர்தல் அறிக்கையில் காவிரி நதி நீர்ச்சிக்கல், முல்லைப் பெரியாறு அணை  சிக்கல், இலங்கைத் தமிழர்  சிக்கல், தமிழக மீனவர்கள் சிக்கல், கச்சத்தீவு சிக்கல் ஆகியவை குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழகத்தின் முக்கியமான சிக்கல்களில் பாசகவுக்கு அக்கறை இல்லை என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்.

1996 முதல் மத்தியில் காங்கிரசு, பாசக தலைமையிலான கூட்டணி ஆட்சிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், இப்போதைய மக்களவைத் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முடிவுகளை அளிக்கக் கூடியது. இப்போதுள்ள சூழ்நிலையில் மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலைதான் உள்ளது. மத்தியில் காங்கிரசு, பாசக அல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் அதிமுகவின்  இலட்சியம்.

இதுபோன்ற ஆட்சியில் அதிமுக முக்கியப் பங்கு வகிக்க வேண்டுமெனில் 40 இடங்களிலும் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். அதுபோன்றதொரு சூழ்நிலையை வாக்காளர்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் குரல் மத்தியில் ஓங்கி ஒலிக்கும். தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழினம் பாதுகாக்கப்படும். சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்யப்படும்.

எனக்குத் தன்னலம் கிடையாது: மத்திய அரசின் கொள்கைகளைத் தீர்மானிக்கும் வலிமையை மக்கள் அதிமுகவுக்கு வழங்கினால் இப்போது நிகழ்த்தி வரும் சாதனைகளை விட மிக அதிகமான சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவோம். எனக்குத் தன்னலம் கிடையாது. தமிழக மக்கள்தான் என் மக்கள். வரும் மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல, இந்தியாவின் தலையெழுத்தை, உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கப்போகும் தேர்தல்.

மத்திய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது.

இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டுக்கு எதையுமே செய்யவில்லை.

சிக்கல்களுக்குத் தீர்வு: மக்களின் ஆதரவோடு அதிமுக ஆட்சி மத்தியில் அமையப்பெறும்போது இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். தேவைக்கேற்ப இறக்குமதி செய்யப்படும். விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

காவிரி, முல்லைப் பெரியாறு சிக்கல்களில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும். தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்  செயலலிதா.