300 திருக்குறள்களை ஒரே நாளில் பயிலப் பொள்ளாச்சி நசன் வழிகாட்டுகிறார்!
ஒரே நாளில் 300 திருக்குறள் படிக்க…
300 குறளையும் இசையோடு கேட்டு நெஞ்சில் பதிக்க…
கடந்த இரண்டு திங்களாக திருக்குறளை மாணவர்கள் நெஞ்சில் பதிய வைக்கிற ஒரு பயிற்சிக் கட்டகம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து இயங்கினேன். திரு பழனிச்சாமி சேரிபாளையம் தமிழாசிரியர், திரு.கல்லை அருட்செல்வன், திரு பல்லடம் முத்துக்குமரன், திரு. ஐயாசாமி, திரு கணேசன் போன்ற நண்பர்களின் உதவியோடு, 1330 திருக்குறளையும் ஆய்வு செய்துமாணவர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடிய திருக்குறளை வரிசைப்படுத்தி, அதிலுள்ள கடினச் சொற்களுக்கு உரிய பொருளை அருகில் இணைத்து, படவடிவக்கோப்புகள் உருவாக்கி, மாணவர்களுக்குக் கொடுத்து ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 300 குறள்களுக்கான இசை வடிவை வெட்டி ஒட்டி இணைத்து அதனை இணையப் பக்கமாக உருவாக்கித் திரு கார்த்திக் உதவியுடன் தமிழம் இணையத்தளத்தில் இணைத்து, மாணவர்கள் கற்க உதவுகிற கட்டகத்தை இணையத்தில் இணைத்துள்ளேன்.
http://win.tamilnool.net/tkl300/index.html
இந்தப் பயிற்சிக் கட்டகத்தைப் பயன்படுத்துவது எப்படி ?
1) பொது மக்கள் நாள் ஒரு பக்கமாக படித்து உள்வாங்கலாம்.
2) மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பக்கங்கள் எனக் காட்டி அவர்களையே உரை எழுத ஊக்குவிக்கலாம்.
3) ஒரு முழுநாளை இதற்காக ஒதுக்கி விருப்பம் உடைய நண்பர்களை இணைத்து 21 பக்கங்களையும் இசைத்துக் காட்டி, பக்கங்களைக் கொடுத்து, அவர்களையே உரை கூற வைத்து, திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தலாம்.
இணையத்தில் பார்த்து இது தொடர்பாக இயங்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்ய அணியமாக உள்ளேன்.
நம் மக்களும், மழலையர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் வரலாற்றைச் சொல்லுகிற திருக்குறளைப் படித்து உணர்ந்து உள்வாங்கித் தம் வாழ்முறையைச் செப்பமுற அமைத்துக் கொள்ள வழி வகுப்போம்.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – தமிழம்.வலை – தமிழம்.பண்பலை
http://win.tamilnool.net/tkl300/index.html
http://www.thamizham.net/thamizhamfm.htm
pollachinasan@gmail.com –
கணிக்காண்பேசி : Skype ID : pollachinasan1951
பேச. 9788552061 (ஆன்டிராய்டு கைபேசியிலும் கேட்கலாம்)
ஐயா! நேற்று இதை நம் இதழில் படித்தபொழுதே கருத்துரையில் ஒரு விதயம் சொல்ல நினைத்தேன், மறந்து விட்டேன் வழக்கம் போல.
குறிப்பிட்ட அந்தத் ‘திருக்குறள் கட்டக’த்தைப் பார்க்கக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அந்தச் சுட்டி தவறானது. அதைச் சொடுக்கினால் ‘௪௦௪’ பிழை – அதாவது, பக்கம் காணப்படவில்லை எனும் பிழை – காட்டுகிறது. இதை நான் நேற்றே கருத்துரையில் சொல்ல நினைத்து மறந்து விட்டேன். ஆனால் பின்னர், நேற்றிரவு நசன் ஐயா அவர்களே என்னை ஜிமெயில் அரட்டைப் பெட்டி வழியே தொடர்பு கொண்டு, தனது இந்தப் புதுச் சேவை பற்றித் தெரிவித்து, அதைப் பார்க்கச் சுட்டியும் அளித்தார். அதைச் சொடுக்கியபொழுது சரியாகக் குறிப்பிட்ட பக்கத்தைக் காட்டியது. அந்தச் சுட்டி இதோ –
http://win.tamilnool.net/tkl300/index.html.
எனவே, மேற்படி கட்டுரையில் அந்தச் சுட்டியை மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா!
நன்றி! வணக்கம்!
இ.பு.ஞானப்பிரகாசன்
குறளுக்கான பாடல்களை இரண்டு வகையாகப் பதிவு செய்து புதிய இறுவட்டில் இணைத்துள்ளேன். மாணவர்களுக்கு, மக்களுக்குப் பயிற்சி தர விரும்பும் குறள் ஆர்வலர்கள் எனக்கு மின்அஞ்சல் அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும். இதன் வழி மாணவர்களே குறளுக்கான விளக்கத்தைச் செர்ல்லுவார்கள். நாம் சொல்லித்தரவேண்டியதில்லை.
அன்புடன்
பொள்ளாச்சி நசன் – pollachinasan@gmail.com