அறிஞர்கள், அமைப்பினருக்கான தமிழக அரசின் விருதுகள் – முதல்வர் வழங்கினார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் புரட்டாசி 25, 2046 / 12.10.2015 அன்று தலைமைச் செயலகத்தில், 2014, 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, அறிஞர் போப்(பு) விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளையும், 2013, 2014-ஆம் ஆண்டுகளுக்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதுகளையும், 2015-ஆம் ஆண்டிற்கான இளங்கோவடிகள் விருதினையும், விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.
தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெலாம் கணிணிவழித் தமிழ் மொழி பரவிடும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கம் செய்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்றும், “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று போற்றப்படும் காலத்தை வென்ற காப்பியத்தைத் தந்த இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அறிவித்திருந்தார்கள்.
2014-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு மும்பையில் உள்ள நவிமும்பை தமிழ்ச் சங்கம் தெரிவு செய்யப்பட்டது. விருதுத் தொகையாக 5 இலட்சம் உரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை ஆகியவற்றை அச்சங்கத்தின் தலைவர் திரு. நா. மகாதேவன், சிறப்பு அறிவுரைஞர் திரு. வ.ரெ.பொ. கிருட்டிணமூர்த்தி ஆகியோரிடமும், 2015-ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்குத் தெரிவு செய்யப்பட்ட திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்திற்கு விருதுத் தொகையாக 5 இலட்சம் உரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை ஆகியவற்றை அச்சங்கத்தின் செயலாளர் திருமதி எல். கிருட்டிணவேணி, துணைத் தலைவர் திரு. எசு.சங்கரன் ஆகியோரிடமும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
மேலும், 2014-ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதினை முனைவர் ஆ. இலலிதா சுந்தரம் அவர்களுக்கும், உ.வே.சா. விருதினை திரு. ம. அழகுராசு என்கிற மருது அழகுராசு அவர்களுக்கும், கம்பர் விருதினை முனைவர் செ.வை. சண்முகம் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருதினை மருத்துவர் சுதா சேசய்யன் அவர்களுக்கும், அறிஞர் போப் விருதினை திரு. செ. நாராயணசாமி அவர்களுக்கும், உமறுப்புலவர் விருதினை முனைவர் சே.மு.மு. முகமதலி அவர்களுக்கும்;
2015-ஆம் ஆண்டிற்கான கபிலர் விருதினை கவிஞர் பிறைசூடன் அவர்களுக்கும், உ.வே.சா. விருதினை முனைவர் குடவாயில் மு. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், கம்பர் விருதினை திரு. கோ. செல்வம் அவர்களுக்கும், சொல்லின் செல்வர் விருதினை முனைவர் சோ. சத்தியசீலன் அவர்களுக்கும், அறிஞர் போப் விருதினை மதுரை இளங்கவின் என்கிற திரு. மை. ஆரோக்கியசாமி அவர்களுக்கும், உமறுப்புலவர் விருதினை பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் அவர்களுக்கும், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட இளங்கோவடிகள் விருதினை முனைவர் திருமதி நிர்மலா மோகன் அவர்களுக்கும்;
2013-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதினை முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களுக்கும், 2014-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணிணித் தமிழ் விருதினை திரு. து. குமரேசன் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள் வழங்கியதோடு, மேற்கண்ட விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் இலட்சம் உரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்கள்.
அப்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி செ.செயலலிதா அவர்கள், “இத்தனை மூத்த தமிழறிஞர்களுக்கு ஒருசேர விருது வழங்கும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததையொட்டி நான் பெருமை அடைகிறேன், மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சமூக நலம்-சத்துணவுத்திட்டத் துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் திரு கு. ஞானதேசிகன், இ.ஆ.ப., தமிழ் நாடு அரசு அறிவுரைஞர் திருமதி சீலா பாலகிருட்டிணன், இ.ஆ.ப., (ஓய்வு), சமூக நலம்-சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர் திரு பொ. சிவசங்கரன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம், இ.ஆ.ப., அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply