த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது!

ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியில்  இந்திய அரசு பாதுகாப்புத்துறை  நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது.  இதில் தையல் பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்புத் தேர்வு  நடைபெற்றது.
வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்.
aavadi agitation
தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு  நிறுவனத்தில் தமிழர்களைப் புறக்கணித்து மறைமுகமாக ஆயிரக்கணக்கான வடநாட்டு இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பை உறுதிசெய்யும் இந்திய அரசின் இந் நடவடிக்கையைக் கண்டித்தும், தமிழ் நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பில்  80% இட ஒதுக்கீடு தமிழர்களுக்கு வழங்கக் கோரியும் இன்று (08.12.203 ) காலை 10.30 மணிக்கு சென்னை ஆவடியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  முதலான  பல்வேறு இயக்கங்கள் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆவடி அண்ணாசிலையருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதைக் கமுக்கமாக அறிந்த காவல்துறையினர் நூற்றுக்கணக்கான காவல்துறையினரை அங்கு குவித்தனர்.  கடைகள், சாலையோரம் என நின்றிருந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக  உசாவி,  ஆர்ப்பாட்டத்தை நடைபெறவிடாமல் தடுக்க, காவல்துறையினர் கடும் நெருக்கடியளித்தனர்.

முன்னதாக வந்திருந்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு முன்னரே வலுக்கட்டாயமாகத் தளையிட்டு வண்டியில் ஏற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்.க.அருணபாரதி, நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திரு இராச.முருகன்,  நாம் தமிழர் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் திரு நா.முகிலன், ம.தி.மு.க நகரச்செயலர் திரு இணையதுல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச்செயலர் ஆதவன், தி.க மாவட்டத் தலைவர்  முருகன், தமிழர் தன்மானப் பாசறை  அமைப்பாளர் திரு, திருநாவுக்கரசு,  முதலான முப்பதின்மருக்கும் மேற்பட்ட தோழர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகத் தளையிடப்பட்டனர்.

அப்போது காவல்துறையினருக்கும் தோழர்களுக்குமிடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. “வெளியேற்று! வெளியேற்று! இந்திக்காரர்களை வெளியேற்று! தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடு!” என்று அப்போது முழக்கங்கள் எழுப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில்  த.தே.பொ.க  சார்பில்  சென்னை செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி கிளை செயலாளர் தோழர்.வி.கோவேந்தன் முதலான  திரளானோர் பங்கேற்றுத் தளையிடப்பட்டனர்.
தளையிடப்பட்ட தோழர்கள் அனைவரும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள இராசா திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
[தொடர்பிற்கு : தோழர் க.அருணபாரதி 9841949462 ]

இந்திய அரசே!
தமிழர் தாயகத்தை கலப்பினத் தாயகமாக்காதே!
தமிழ் நாட்டு வேலைவாய்ப்பில் 80 % தமிழர்களுக்கே இடம் வழங்கு!
தமிழக அரசே !
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்!
====================================
தலைமைச் செயலகம் .
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
======================================