உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
உலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
இந்திய நாட்டின் விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்று, வெள்ளையனுக்கு எதிராகக் கப்பல் ஓட்டி, வெள்ளையனின் பொருளாதார அடி மடியை அசைத்த தமிழன் செக்கிழுத்த செம்மல் நமது பெரும் பாட்டன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை). அவரின் நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை தமிழகத்தின் நான்குமுதன்மை நகரங்களிலும், ஈழத்தின் முல்லைத் தீவிலும் கடந்த கார்த்திகை 03, 2047 / 18-11-2016 வெள்ளி அன்று வெகு சிறப்பாகநடத்தியது.
கோவை :
கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தின் முன்புறம் விடுதலை வேட்கை கொண்டுள்ளோரின் நெஞ்சில் என்றேன்றும் வீற்றிருக்கும் மாவீரன் தமிழன் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)சிறையில் கொடுமைக்கு ஆட்பட்டு இழுத்த செக்கு உள்ளது. அவரின் நினைவைப் போற்றும் வகையில் அந்தச் செக்கு, சிறு மண்டபம் அமைத்து, வைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வெளியே வ.உ.சி. திருஉருவச் சிலை உள்ளது. இரண்டிடத்திலும் வ.உ.சி.க்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்கினி தலைமை தாங்கிச் செக்கில் வைத்துள்ள வ.உ.சி அவர்களின் ஒளிப்படத்திற்கு மாலை அணிவித்துச் சிறப்புரை யாற்றினார்.
வ.உ.சி.யின் பேரன் திரு.மு.பா.தமிழ்வாணன் கலந்து கொண்டு வ.உ.சி.யின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். திரு.இராமசாமி (தமிழ்நாடு தமிழ்ச் சங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர்), தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (கோவை முத்தமிழ் அரங்கப் புரவலர்), தமிழ் அமுதம் ஐயாசாமி, திரு.தமிழ் மாணிக்கம், புலவர்.வேலவன், திரு.பூவரசி தமிழ்மறையன், திரு.நித்தியானந்த பாரதி (கணபதித் தமிழ்ச் சங்கம் மற்றும் பசுமைக் காப்பகம் நிறுவனர்), கோவை நம்பி புலவர் மாரப்பன், திரு.இராசசுந்தர் (வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்), தமிழ்த் திருவாட்டி மைவிழி (முதும் பெரும் புலவர் பட்டணம் பழநிசாமி புதல்வியார்), திரு.வடிவேல் முருகன், திரு.ம.மாசிலாமணி, மோகன்குமார், பெரியவர் சு.மயில்சாமி, திருவாட்டி சுமதி, திரு.க.நாகராசன், மனோசுகுமார் மற்றும் புலவர் பெருமக்களும், மூத்த தமிழ்ச் சான்றோர்களும், கல்லூரி மாணாக்கர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்திச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ்த்திரு சந்திரசேகர் தஞ்சாவூரில் இருந்துவந்து கலந்து கொண்டார்..
இந்நிகழ்வின்போது தமிழரின் தன்னிகரில்லாத் தலைவன் வ.உ.சிஅவர்களின் கனவைச் சுமந்து அவரின் கொள்கை வழி தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. விழாவின் இறுதியில் புலவர் ஆ காளியப்பன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
சென்னை :
சென்னை கடற்கரைச் சாலையில் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் (பிள்ளையின்) முழு உருவ சிலைக்கு, உலகத் தமிழர் பேரவையின் பொறுப்பாளர்களுள் ஒருவரான பட்டயக் கணக்கர் திரு. கோபி நாராயணாவின் தலைமையில் நினைவஞ்சலி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெருந்தமிழர் ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கப் பொறுப்பாளர் திரு. சௌந்தர பாண்டியனார், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் இந்தியத் தலைவர் திரு. தனஞ்செயன், இந்திய ஊடகவியலாளர் சங்கத்தின் தமிழகத் தலைவர் திரு. சூரிய நாராயணன், சென்னை வழக்குரைஞர் திரு. செந்தில் குமார், தமிழார்வலர் திரு. சந்திர மோகன் ஆகியோருடன் தமிழர் ஆர்வலர்கள் பரும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்..
மதுரை :
மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவச் சிலைக்கு மதுரை உலகத் தமிழர் பேரவையின் மதுரை பொறுப்பாளர் திரு. நமச்சிவாயம் தலையேற்று, அன்னாருக்கு மாலையிட்டு வணங்கினார். அவருடன் தமிழார்வலர்கள் பலர் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது.
திருநெல்வேலி :
திருநெல்வேலியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் மணிமண்டபத்தில் உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராச கோபாலன் தலைமையில் குழுவாகச் சென்று மாலையிட்டு வணங்கினர். உலகத் தமிழர் பேரவையின் திருநெல்வேலி பொறுப்பாளர் திரு. இராசகோபாலனின் செவ்வியை(பேட்டியை)ப் பல தமிழ் ஊடகங்கள் பதிவிட்டிருந்தனர். திரு. இராச கோபாலனுடன் முனைவர் பேரா. ஐயப்பன், கணபதி, ஆனந்தன், பவுல், சொக்கலிங்கம், மனோகர், ஆதி, விக்கி எனத் தமிழார்வலர்கள் பலர் பங்கு கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்
.
ஈழம் : முல்லைத் தீவு:
விடுதலைப்புலிகளின் மேனாள் போராளியாக இருந்து 2008-இல் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுப் பின்னர் ஈழம் தப்பிச் சென்ற போது, இலங்கைக் காவல்துறையால் பிடிபட்டுச், சிறை சென்று, மறுவாழ்வு பெற்று இன்று முல்லைத் தீவுப்பகுதியில் தமிழ்த் தேசிய மாணவர் பேரவையை நடத்தி வரும் திரு. தமிழ்ச்செல்வன் தலைமையில் வ.உ.சிதம்பரம்(பிள்ளை)அவர்களுக்குத், தமிழ்ப் பற்றாளர்களோடு இணைந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
(படங்களைப் பெரிதாகக் காணப் படங்களை அழுத்தவும்)
Leave a Reply