ஊசுடனில் தமிழர் திருவிழா
அமெரிக்காவின் டெக்சசு மாகாணத்தில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப் பள்ளியின் சார்பில் பியர்லேண்டு, கேட்டி, உட்லண்ட்சு மன்றக் கிளைப் பள்ளிகளது மாணாக்கர்கள் பங்குபெற்ற திருக்குறள் திருவிழா,பொங்கல் திருவிழா, பட்டிமன்ற நிகழ்வுகள் அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. பியர்லேண்ட் கிளையில் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம்புரிந்த “இயந்திரத்தினால் நமக்கு ஏற்படுவது நன்மையா? தீமையா?” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் மாணாக்கர்களின் அறிவுத்திறனை அதுவும் தமிழில் வெகு சிறப்பாக வெளிக் கொணர்ந்தது. அனைத்துக் கிளைகளின் மாணாக்கர்களும் பங்குபெற்ற திருக்குறள் திருவிழாவில் ஒரு திருக்குறளுக்கு ஒரு தாலர் என்ற அடிப்படையில் திருக்குறளையும் அதற்கான பொருளுரையும் கூறி மாணாக்கர்கள் ஏராளமான பரிசுத் தொகைகளை அள்ளிச் சென்றனர். கேட்டி கிளையில் சனவரி 11 ஆம் நாள் மேல்நிலை மாணாக்கர்கள் வாதம் புரிந்த “திரைப்படங்கள் நமது சமூகத்திற்கு செய்யும் பங்கு பெரும்பாலும் நன்மையே அல்லது தீமையே” எனும் தலைப்பிலான பட்டிமன்றம் ஆழமான கருத்துக்களுடன் நகைச்சுவை ததும்ப மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. சனவரி 18 அன்று உட்லண்ட்சு கிளை மாணாக்கர்கள் பொங்கல் திருவிழாவை ‘ஊரக நயத்துடன் நாட்டுப்புறக் கலைகள்‘ என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு மூலமாக அழகான தமிழில் பாடி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடிப் பார்வையாளர்கள் அனைவரையும் களிப்பில் ஆழ்த்தினர். சனவரி18 அன்று பியர்லேண்டு கிளையில் நடைபெற்ற “பொங்கல் சித்திரப் போட்டி”யில் மாணாக்கர்கள் பங்குபெற்று சூரியன், பொங்கல், கரும்பு, உழவர் என ஊரகப் பொங்கலை நினைவு கூறத்தக்க வகையில் தத்தம் வரைதிறன் மூலம் அழகாக படம்பிடித்துக் காட்டியிருந்தனர். தைத் திங்கள் தமிழர் திருவிழா ஊசுடன் பெருநகரத் தமிழ்ப்பள்ளியில் தமிழர்கள் அனைவரும் மகிழும் வண்ணம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் புதிய வரவாக “மேற்கு ஐமர்” கிளை தொடங்கப்பட்டு நான்கு கிளைகளுடன் அயலகத்தில் வாழும் அடுத்த தமிழ்த் தலைமுறைக்குத் தமிழை எடுத்துச் செல்வதில் ஊசுடன் பெருநகரத் தமிழ்ப்பள்ளி முனைப்புடன் செயலாற்றி வருகிறது. மொத்தம் 220 மாணாக்கர்கள் மழலை முதல் ஆறாம் நிலை வரை தமிழ் கற்று நல்ல ஒலிப்புடன் அருமையாகப் பேசவும் எழுதவும் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
– கரு.மாணிக்க வாசகம்
Leave a Reply