ஒரே நாளில்

இரண்டு இலக்கிய விருதுகள் பெற்ற 

 கவிஞர் மு.முருகேசு

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு, தமிழ்க்குறும்பா (ஐக்கூ கவிதைகள்) குறித்த தொடர் இலக்கிய பங்களிப்புக்காகவும், தனது சிறுவர் இலக்கிய நூலுக்காகவும் ஒரே நாளில் இரண்டு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

   சிவகாசியிலிருந்து வெளிவரும் கந்தகப்பூக்கள், நீலநிலா இலக்கிய இதழ்கள் சார்பில் தமிழ்க் குறும்பா(ஐக்கூ கவிதை) நூற்றாண்டு விழா (புரட்டாசி 22, தி.பி.2048 / அட்டோபர்-8, ஞாயிறன்று) சிவகாசியில் நடைபெற்றது.

 இவ்விழாவில் தமிழகம் முழுவதுமிருந்தும் ஏராளமான குறும்பா(ஐக்கூ) கவிஞர்கள் பங்கேற்றனர். குறும்பா(ஐக்கூ கவிதை) கண்காட்சி, குறும்பா(ஐக்கூ) கவிதை கல்வெட்டு திறப்பு, குறும்பா(ஐக்கூ) அஞ்சல் தலை வெளியீடு, குறும்பா(ஐக்கூ) நூல்கள் வெளியீடு, குறும்பா(ஐக்கூ)  கருத்தரங்கம் என நடைபெற்ற இவ்விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதையை பரவலாக அறிமுகம் செய்தமைக்காகவும், அதன் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயலாற்றி யமைக்காகவும் கவிஞர் மு.முருகேசுக்கு ‘ஐக்கூ செம்மல் விருது’ வழங்கப்பட்டது.

   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மேனாள் தமிழ்த்துறை பேராசிரியர் கவிஞர் மித்திரா விருதினை வழங்கினார். விழாவில், முனைவர் பொ.நா.கமலா, நீலநிலா ஆசிரியர் செண்பகராசன், கந்தகப்பூக்கள் சீபதி, கவிஞர்கள் பாண்டூ, நந்தவனம் சந்திரசேகரன், (உ)யுவபாரதி, முத்துபாரதி  முதலானோர் கலந்து கொண்டனர்.

   அன்று, மாலை இராசபாளையத்தில் மணிமேகலை மன்றத்தின் 59-ஆவது ஆண்டு விழாவில் தமிழில் வெளியான சிறந்த நூல்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘ஒல்லி மல்லி குண்டு கில்லி’ சிறுவர் நூல் 2016-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த சிறுவர் நூலாகத் தேர்வு செய்யப்பட்டு, விருதும் உரூ.5000/- பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன.

 விழாவில், இராமராசு பண்டுவப்பருத்தி ஆலை(surgical cotton mill) இயக்குநர் என்.கே.சீகண்டன்ராசா, எழுத்தாளர்கள் இலேனா தமிழ்வாணன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், கோ.மா.கோதண்டம், ‘திசை எட்டும்’ ஆசிரியர் குறிஞ்சிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

   கவிஞர் மு.முருகேசு வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரைஞராகவும் இருந்து குமுகம்(சமூகம்), கல்வி, இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறார். இதுவரை 35-க்கும் மேற்பட்ட கதை, கவிதை ,கட்டுரை,  சிறுவர் இலக்கிய,  திறனாய்வு நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத்து ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

  இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஒரே நாளில் இரு விருதுகள் பெற்றுள்ள பாவலர், இதழாளர் மு.முருகேசிற்கு அகரமுதல மின்னிதழின் பாராட்டுகள்!