கவிஞர் மு.முருகேசு எழுதிய கட்டுரை நூலுக்குச்

சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு

 

  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு  ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு எழுதிய ’இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூலுக்கு, கவிதை உறவு வழங்கும் ’மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசு’ கிடைத்துள்ளது.

     கடந்த 46 ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து வெளிவரும் ‘கவிதை உறவு’ சார்பில், 15 ஆண்டுகளாகத்  தமிழில் வெளியாகும் சிறந்த படைப்பிலக்கிய நூல்களுக்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கின்றனர்.

    2017- ஆம் ஆண்டு வெளியான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையிலுள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை (மே-18) அன்று நடைபெற்றது.

   இவ்விழாவிற்கு, மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தலைமையேற்றார். சி.வி.சந்திரமோகன் அனைவரையும் வரவேற்றார்.

         2017-ஆம் ஆண்டு வெளியான நூல்களில் மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நூல்களுக்கான பிரிவில் சிறந்த நூலாகக் கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?’ எனும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முதல் பரிசாக உரூ.5000/- பரிசுத்தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வழங்கினார்.

         சிறந்த வாழ்வியல் நூலுக்கான முதல் பரிசினைப் பெற்ற கவிஞர் மு.முருகேசு, வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்டக்  கோட்டைத்  தமிழ்ச் சங்கத்தின்  அறிவுரைஞராகவும் இருந்து சமூகம், கல்வி, இலக்கியப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட கதை, கவிதை , கட்டுரை, சிறுவர் இலக்கியம்,  திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

 இவரது படைப்புகள் மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. இலக்கிய மாநாடுகளில் உரையாற்றுவதற்காக இலங்கை, சிங்கப்பூர், குவைத்து ஆகிய நாடுகளிலுள்ள அமைப்புகளின் அழைப்பின் பேரில் சென்று, உரையாற்றி வந்துள்ளார். மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாடெமி ஏற்பாட்டில், மேற்கு வங்க மாநிலம்  தார்சிலிங்கு, கருநாடகாவிலுள்ள மைசூரு, ஆந்திர மாநிலம் விசயவாடா ஆகிய இடங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளார்.

       இவரது படைப்புகளை இதுவரை 5 கல்லூரி மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்வும், 2 மாணவர்கள்  முனைவர் பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது கவிதைகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்திலும், விருதுநகர் வன்னியப் பெருமாள் மகளிர் கல்லூரிப் பாடத்திட்டத்திலும், சிவகாசி அய்யநாடார் சானகி அம்மாள் கல்லூரி பாடத்திட்டத்திலும் இடம் பெற்றுள்ளன.

 சமச்சீர் பாடத்திட்டக் குழுவில் இடம்பெற்று, 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்பு பாட  நூல்கள் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்துள்ளார். 2010- ஆம் ஆண்டு வெளியான இவரது ‘குழந்தைகள் சிறுகதைகள்’ எனும் நூல்,  தமிழக அரசின் ’புத்தகப் பூங்கொத்து’ எனும் திட்டத்தில் தேர்வாகித், தமிழகத்திலுள்ள 32 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   விழாவில், மாண்பமை நீதியரசி பிரபா சிரீதேவன், முனைவர் சிலம்பொலி செல்லப்பன், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருட்டிணன், முனைவர் எவர்வின் பி.புருசோத்தமன்  முதலானோர் கலந்து கொண்டனர்.

          நிறைவாக, வானதி இராமநாதன் நன்றி கூறினார்.