சிந்தனையை விதைப்பது எழுத்தாளர்களின் கடமை
சமூக மாற்றத்திற்கான சிந்தனையை விதைப்பது
எழுத்தாளர்களின் கடமையாகும்
வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் உரை
வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கட்டுரை நூல்கள் அறிமுக விழாவில் (புரட்டாசி 17 / அக்.04) சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.
கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், கலை ஆசிரியர் பெ.பார்த்திபன், ஊடகவியலாளர் வெ.அரிகிருட்டிணன், மூன்றாம் நிலை நூலகர் ச.சோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், காஞ்சிபுரம் எழுத்தாளர் செ.செ.பாரதராசா எழுதிய ‘சிந்தனைப் பூக்கள்’, ‘புதிய வேதங்கள்’ ஆகிய கட்டுரை நூல்களை வந்தவாசி சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ச.பாலமுருகன் வெளியிட, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மரு. அர.நருமதாலட்சுமி பெற்றுக் கொண்டார்.
விழாவிற்குத் தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு ’எழுத்தாளனும் சமூக மாற்றமும்’ எனும் தலைப்பில் பேசியதாவது:
“ஒரு நாட்டின் அறிவு வளர்ச்சியை அந்த நாட்டில் உருவாகும் அறிவியல் கண்டுபிடிப்புகளை மட்டும் வைத்து அளவிட முடியாது. அந்நாட்டில் எழுதப்படும் இலக்கிய – சமூக நூல்களை வைத்தும் நம்மால் அறிய முடியும். உலக அறிஞர் பெருமக்களால் படைக்கப்பட்ட சிறந்த இலக்கியங்கள் இன்றைக்கு உலகெங்கிலும் படிக்கப்படுகின்ற் பாராட்டப்படுகின்றன. காந்தி எழுதிய நூல்கள் இன்றைய தலைமுறை கற்றறிய வேண்டிய பல செய்திகளைக் கொண்டுள்ளன.
புத்தகங்களே மனித சமூக வளர்ச்சியை அளவிட சிறந்த அளவுகோலாகும். அப்படிப்பட்ட புத்தகங்களைப் படைக்கும் எழுத்தாளர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள். மன்பதை முன்னேற வேண்டுமானால் நல்ல சிந்தனைகள் அந்தச் சமுதாயத்தில் நிலவ வேண்டும். சமூக மாற்றத்திற்கான சிந்தனையைத் தனது படைப்புகளின் வழியே விதைப்பது எழுத்தாளர்களின் கடமையாகும” என்று குறிப்பிட்டார்.
விழாவில், உரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த வந்தவாசி சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ச.பாலமுருகன், எழுத்தாளர் செ.செ.பாரதராசா ஆகியோரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
நிறைவாக, நூலக உதவியாளர் இராசேந்திரன் நன்றி கூறினார்.
– முதுவை இதாயத்து
Leave a Reply