செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு
செய்திகளில் மலேசியா இணையத் தமிழ் மாநாடு
-
மாலைமுரசு
-
விகடன்
மலேசியாவில் தமிழ் இணைய மாநாடு!
மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், வரும் ஆகத்து 26 முதல் 28-ஆம் நாள் வரை, ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ நடத்தப்படுகிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, மாநாட்டின் இணைத்தலைவர் முனைவர் இலட்சுமி கார்மேகம், நெறியாளர் திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் இதைத் தெரிவித்தனர்.
மலேசியாவில், பேராக்கில் உள்ள சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு, மலேசியக் கல்வியமைச்சகத்தின் கல்வியியல் தொழில்நுட்ப அதிகாரி தனேசு பாலகிருட்டிணன் தலைமைதாங்குகிறார்.
“மாநாட்டில், இயல்மொழிப் பகுப்பாய்பு- தமிழ்ச் சொல்லாளர், இயந்திர மொழிபெயர்ப்பு, மொழித்தொகுப்பு ஆய்வு, ஒளியெழுத்துணரி-கையெழுத்துணரி, கையடக்கக் கருவிகளுக்கான செயலிகளைத் தரப்படுத்துதல், திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம், தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிப்பீடியா, சமூக இணையத்தளங்கள், மின்நூலகங்கள், மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற பயன்பாட்டுக்கான மென்பொருள்கள், எண்ணிம ஆவணப் பாதுகாப்பு-எண்ணிமத் திரட்டுகள், இணைப்புத் தரவு, தமிழில் பொருளுணர் வலை, தரவுக் காட்சிப்படுத்தல், கற்றல் மேலாண்மை அமைப்புகள், எண்ணிமப் பாதுகாப்பு, எண்ணிம நூலகம், எண்ணிம ஆவணகம் என 11 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பக் கடைசிநாள்: ஆகத்து 7. cpc2017.wtic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குக் கட்டுரைகளை அனுப்பவேண்டும்” என்று இலட்சுமி கார்மேகம், திருவள்ளுவன் இலக்குவனார் ஆகியோர் தெரிவித்தனர்.
[பி.கு. : இன்றைய செய்தியாளர் கூட்டத்திற்குத் தினமலர், தினமணி, தினச்செய்தி, தின இதழ் முதலான பிற நாளிதழ்களிலிருந்தும் செய்தியாளர்கள் வந்திருந்தனர். இன்றைய நிலையில் செய்தி வந்துள்ளவைமட்டும் தரப்பட்டுள்ளன.]
Leave a Reply