செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்

ஆட்சிக்குழுக் கூட்டம்

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

  இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

  அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன. தமிழ் மொழியின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்குப் பகரும் இந்நிறுவனம் சென்னையில் இயங்குவதில் மாற்றம் செய்யக் கூடாது என்றும், எக்காரணம் கொண்டும் அதன் தன்னாட்சி அமைப்பை இழக்கச் செய்யக் கூடாது என்றும் ஆட்சிக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கெனப் புதுப் புதுத் திட்டங்கள் செயற்கடுத்திச் செவ்வியல் இலக்கிய உயராய்வினை மேலும் செம்மைபடுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஆட்சிக்குழுவில் ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர்கல்வித்துறையின் இணைச் செயலாளர் திரு.சுக்குபீர் சிங்கு சாந்து, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி-செய்தித் துறைச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன், இ.ஆ.ப., குப்பம் – திராவிடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இ.சத்திய நாராயணா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ.விசயராகவன், மைசூர் – இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் தி.சி.இராவு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு.அ.பழனிவேல், பதிவாளர் பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன்,  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  முதல்வர், செம்மொழிநிறுவனத்தலைவர் பதவியில் செயல்படவேண்டும், ஆட்சிக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற நம் வேண்டுகோள்களுக்கேற்ப முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறக்காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.

  சமற்கிருத வளர்ச்சிக்கும் இந்தி வளர்ச்சிக்கும் மிக மிகுதியான அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழுக்கும் அதே அளவு ஒதுக்கீடு பெற்றுச் செந்தமிழை பலகெங்கும் பரப்பவும் வளர்க்கவும் ஆய்வாளர்களைப் பெருக்கவும் செம்மொழி நிறுவனம் செயல்பட வாழ்த்துகிறோம்.