செய்திக்குறிப்புகள் சில பங்குனி 2,2045, மார்.16, 2014
புதுதில்லி : வீரப்பன் கூட்டாளிகள் முதலான 15 பேரின் தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு அளித்த மறு சீராய்வுமுறையீட்டை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இராசீவு வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுப் பழிவாங்கப்படுவோரின் விடுதலையை நிறுத்துவதற்காக மத்திய அரசு போட்ட நாடகம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது.
இனப்படுகோலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை மோசமாக உள்ளது என்றும் தமிழர்களின் உரிமைப் போரைச் சிங்களவர்களுடன் போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னாண்டோ, ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.
2005 இல், தன்னைப்போல் இரு மடங்கு அகவை கொண்டவனின் காதலை ஏற்க மறுத்ததால் எரி அமிலத்தின் வீச்சிற்கு ஆளாகிப் பெரும் பாதிப்பிற்குள்ளானவள் சிறுமி இலட்சுமி.கோரமுகம் என்று வீட்டில் முடங்கி இல்லாமல் அவள் மேற்கொண்ட தொடர் முயற்சியால்தான் உச்ச நீதிம்னறம் எரி அமில விற்பனைக்கு மைய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. இவளின் அருந்திறல் செயலைப் பாராட்டி, உலக வீரப் பெண்மணி விருதை, அமெரிக்க அதிபர் மனைவி மிசெல் ஒபாமா மகளிர் நாளன்று வழங்கினார். வாழ்க அவர் துணிவு! தொடர்க அவர் தொண்டு!
தன் தமையனைத் தேடித் துயரக் குரல் கொடுத்த பருவமடைந்து பத்து நாளான சிறுமி விபூசிகா பாலேந்திரனும் தன் மகனுக்காக அவலக் குரல் கொடுத்த அவள் தாய் செயகுமாரி பாலேந்திரனும் கிளிநொச்சியில் சிங்களக் கொடுங்கோலரால் தளையிடப்பட்டு யாருமறியா இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வில் இது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி ஊர்களில் சிங்களப் படைத்துறையினர் தேடுதல் வேட்டை மூலம் மக்களுக்கு வன்கொடுமை.
இலங்கையின் முன்னோடி மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் (உ)ருக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவீன் ஆகியோர் தளையிடப்பட்டனர்.
உலகின் முதல் சூரிய ஆற்றல் கழிப்பறை: நீரின் தேவையின்றி சூரிய ஆற்றலின் உதவியுடன் மனிதக் கழிவுகளை அதிக வெப்பத்தில் நுண்ணிய கரியாக மாற்றும் தன்மை கொண்டுள்ள சூரிய ஆற்றல் கழிப்பறை இந்தியாவில் அறிமுகம். அவ்வாறு பெறப்படும் நுண்ணிய கரி பயிர் விளைச்சலைப் பெருக்கவும் பசுமை வளி எனப்படும் தனிமைப்படுத்தப்பட்ட கரியமிலவளியை உண்டாக்கவும் பயன்படும் என்று இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், கொலொராடோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கார்ல் இலிண்டன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் ஊரில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன என தொல்லியல் அறிஞர் வேதாசலம் தெரிவித்தார். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழைய கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கல் கோடாரிகள் முதலான சான்றுகள் இவ்வூரில் கிடைத்துள்ளன. நூறாண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன எண்ணெய்ச் செக்குகள் கல்வெட்டுடன் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் அருகே காணப்படுவது இவ்வூரின் தனிச்சிறப்பாகும் என்றார் அவர்.
இராய்ப்பூர்: கைம்பெண்களைத் திருமணம் செய்து கொண்டால், மணமக்கள் 5 நாள் ஆசியநாடுகளில் தேனிலவுப் பயணம்மேற்கொள்ள அனைத்துச் செலவுகளையும் சத்தீசுகரில் உள்ள இயற்கைக் காப்பு(nature care) என்னும் அமைப்பு ஏற்று ஊக்குவிக்கிறது என இதன் இயக்குநர் வினிதா பாண்டே தெரிவித்தார்.
அமெரிக்காவில் பணியாற்றிய மேனாள் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது இருந்து வழக்கில் நீதி மன்றம் விடுதலை செ்ய்த பின்பு 21 பக்கங்கள் அடங்கிய புதிய குற்றச்சாட்டுகள்அடங்கிய புதிய வழக்கை அமெரிக்க அரசு வழக்குரைஞர் தொடர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் தேவயானிக்கு மீண்டும் தளையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply