தாய்மொழிநாளில் பேரா.மறைமலை காணுரை – ‘சன்’ தொலைக்காட்சி
சன் தொலைக்காட்சிக்குப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் அளித்த நேர்காணல் – உரை வடிவில்
இந்த ஆண்டு ‘உலகத் தாய்மொழி நாள்’ (மாசி 09, 2047-பிப்பிரவரி 21, 2016) அன்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் சன் தொலைக்காட்சியின் ‘விருந்தினர் பக்கம்’ நிகழ்ச்சியில் ‘உலகத் தாய்மொழி நாள்’ குறித்து அளித்த நேர்காணலின் உரை வடிவம்.
தொகுப்பாளர்: ஒவ்வோர் ஆண்டும் பிப்பிரவரி 21ஆம் நாள் ‘உலகத் தாய்மொழி நாள்’ கொண்டாடுகிறோம். உலக நாடுகள் எல்லாமே இந்த நாளை மிகச் சிறப்பாகக் கடைப்பிடிக்கின்றன. இந்த நாளை ஒட்டித் தாய்த்திருமொழி தமிழின் பெருமை பற்றிப் பேசுவதற்காகப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் வந்திருக்கிறார். அவரைச் சந்திப்போம்!
வணக்கம்!
மறைமலை இலக்குவனார்: உங்களுக்கும் ‘சன்’ தொலைக்காட்சி அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
தொகுப்பாளர்: உலக நாடுகள் எல்லாமே ‘உலகத் தாய்மொழி நாள்’ எனக் கொண்டாடுகின்றன. இது எதற்காக ஐயா?
மறைமலை இலக்குவனார்: உலகத் தாய்மொழி நாள் கொண்டாடுவதன் காரணம் என்னவென்றால், அன்றைய கிழக்குப் பாகித்தானத்திலே – இன்றைய வங்கதேசத்திலே, அவர்கள் வங்காள மொழியையும் பாகித்தானத்தின் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்து வந்தார்கள். அந்தப் போராட்டம் உச்சநிலை அடைந்து நான்கு மாணவர்கள் 1952ஆம் ஆண்டு பிப்பிரவரி 21ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அது வங்காளர்கள் உள்ளத்திலே ஒரு வடுவாக இருந்தது. பின்னாலே அந்தக் கிளர்ச்சி பெரிதாகி, கிழக்குப் பாகித்தானம் தனி நாடாகி ‘வங்கதேசம்’ என ஒரு நாடு உருவான பிறகு 1999ஆம் ஆண்டு ‘யுனெசுகோ’ (ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டுக் கழகம்) நடத்திய ஒரு மாநாட்டிலே வங்கதேச அரசினர், தாய்மொழிக்காகக் கிளர்ந்தெழுந்து தங்கள் உயிரை நீத்த அந்த நான்கு பேர்களின் நினைவாக அந்த பிப்ரவரி 21-ஐ ‘உலகத் தாய்மொழி நா’ளாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். யுனெசுகோ அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. அதன் விளைவாக, 2000ஆம் ஆண்டிலே இருந்து பிப்பிரவரி 21 ‘உலகத் தாய்மொழி நாள்’ என்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொகு: ஐயா! உலகளவில் மொத்தம் எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன?
மறை: உலகத்தில் 2700 மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், 5000 வட்டார மொழிகள் பேசப்பட்டு வருவதாகவும், புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால், அந்த 2700 மொழிகளில் ஆசியாவில் மட்டும் 2200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
தொகு: இந்தியாவில் எவ்வளவு மொழிகள் பேசப்படுகின்றன ஐயா?
மறை: இந்தியாவில் முப்பத்து மூன்று மொழிகளும் இரண்டாயிரம் வட்டார மொழிகளும் பேசப்பட்டு வருவதாக விவரங்கள் அறிவிக்கின்றன. அந்த முப்பத்து மூன்று மொழிகளில் இருபத்து மூன்று மொழிகளை நம்முடைய இந்திய அரசியல் சட்டத்தினுடைய எட்டாவது அட்டவணையின் கீழ் அவர்கள் ஏற்பிசைவு (அங்கீகாரம்) செய்திருக்கிறார்கள்.
தொகு: வட்டார மொழி என்கிறீர்களே, அது என்ன ஐயா?
மறை: நம் நீலகிரியில் தோடர்கள் பேசுகின்ற மொழி, அதே போல் இருளர்கள் பேசுகின்ற மொழி, இவ்வாறெல்லாம் அவர்கள் பேசுகிற மொழிக்கு ஒரு செப்பமான எழுத்து வடிவம் கிடையாது. ஆனால், அவர்கள் பேசுகின்றார்கள். ஆக, அவை வட்டார மொழிகள் அல்லது வழக்கு மொழிகள் அல்லது கிளை மொழிகள் என்று அறிவிக்கப்படும். தோடர்கள், துதவர்கள் பேசுகின்ற மொழிகள் எல்லாமே நம்முடைய தமிழின் ஒரு கிளை மொழியாகத்தான் இருக்கின்றன. அது போல அமைந்தவற்றை வட்டார மொழிகள் அல்லது வட்டார வழக்கு மொழிகள் – Dialects என்று ஆங்கிலத்திலே – கூறுகின்றார்கள். அது போல மூவாயிரம் வட்டாரக் கிளை மொழிகள் இந்தியாவிலே இருக்கின்றன.
தொகு: உலகத்தில் நிறைய மொழிகள் பேசப்படுகின்றன என்று சொன்னீர்கள். மிகுதியான மக்களால் பேசப்படுகின்ற மொழி எது?
மறை: மிகுதியான மக்களால் பேசப்படுகின்ற மொழி, மிகத் தெளிவாக உங்களுக்கே தெரிந்திருக்கும் – சீன மொழி. மாண்டரின் எனச் சொல்லப்படுகின்ற சீன மொழி. சீனர்கள்தாம் உலகத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி இருக்கின்றார்கள். ஆக, மிகுதியான மக்கள் பேசுகின்ற மொழி சீன மொழிதான்.
தொகு: மனித இனத்தின் அடையாளமே மொழிதான். அந்த மொழியினுடைய பெருமையை நாம் கட்டிக் காக்கிறோமா?
மறை: தாய்மொழி, தாய்மொழியின் அருமை, தாய்மொழியை நாம் கட்டிக் காக்கின்றோமா என்ற கேள்வி ஆகியவை இந்த உலகத் தாய்மொழி நாளிலே ஏற்பட வேண்டிய முதன்மையான சிந்தனைகள்.
தாய்மொழி என்பது – நெல்சன் மண்டேலா அவர்கள் குறிப்பிடுவார்கள், உங்களுக்குத் தெரிந்த மொழியிலே ஒருவன் பேசினால் அது உங்கள் அறிவைச் சென்று சேரும்; ஆனால், உங்கள் தாய்மொழியிலே பேசினால் அது உங்கள் உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும் என்று. அந்த வகையில் தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய அழுகையோடு, சிரிப்போடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி. அந்தத் தாய்மொழிக்கு முதன்மை வழங்குகின்றீர்களா என்று கேட்கின்றீர்கள். தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமை. ஆனால், அந்தக் கடமையைச் செய்கின்றோமா என்பது நல்ல கேள்விதான். நாம் செய்யவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. ஏனென்றால், சமூகவியல் அடிப்படையில் பார்க்கும்பொழுது இன்றைக்கு உலகம் உலகமயமாகிக் கொண்டிருக்கின்றது. ‘குளோபலைசேசன்'(Globalisation) என்று சொல்கின்றார்களே, அந்த உலகமயமாதல் என்கின்ற ஒரு சமூக – பொருளாதார – அரசியல் சூழல் நடந்து வருகின்றது. மக்கள் ஒரு நாட்டிலே அடிமைப்படுத்தப்படும்பொழுதோ அல்லது அல்லல்படுத்தப்படும்பொழுதோ நாட்டிலே ஒரு பெரிய நிலநடுக்கமோ கொந்தளிப்போ ஏற்படும்பொழுதோ அந்த நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து செல்கின்றார்கள். அப்படிப் புலம் பெயர்ந்து செல்கின்ற அந்த நிலை இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மிகுதியாக ஏற்பட்டது. அவ்வாறு செல்வதும் உலகமயமாதல்தான். குறிப்பிடத்தக்க ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டிலே போய்த் தஞ்சம் புகும்பொழுது அவர்கள் ஓர் அடையாளத்தைத் தேடி அலைகின்றார்கள். அவர்கள் தாய்மொழியையும் விட முடியாது. அந்த நாட்டு மொழியையும் கற்க வேண்டும். இவ்வாறு உலகமயமாதல் என்கின்ற அந்த ஒரு சிக்கல், அந்தச் சூழல் ஏற்படும்பொழுது தாய்மொழி சற்றுப் பின்னுக்குத் தள்ளப்படுகின்றது.
தொகு: ஐயா! நம் தாய்மொழி தமிழ் மிகவும் பழமையான மொழி என்பது எல்லாருக்கும் தெரிந்ததே! ஆனால், எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது நம்முடைய தாய்மொழி?
மறை: பழமை என்று வரும்பொழுது, இரண்டு கருத்துகள் இருக்கின்றன. மிகத் தொன்மை வாய்ந்த மொழிகளை உயர்தனிச் செம்மொழிகள் என்று அழைப்பார்கள். கிரேக்க மொழி, இலத்தீன் மொழி, ஈப்ரு (Hebrew) மொழி, சீன மொழி, நம்முடைய இந்தியாவிலே தமிழ் மொழி, சமற்கிருத மொழி. இவையெல்லாம் மிகப் பழமை வாய்ந்த மொழிகள். அதிலே சமற்கிருத மொழி பேச்சு மொழி அன்று. ஏனைய மொழிகளெல்லாம் ஒரு காலத்திலே மக்கள் திரள் திரளாகப் பேசிக் கொண்டோ, இலக்கியங்களை, அறிவியலைப் படைத்துக் கொண்டோ இருந்த மொழிகள். ஆனால், இன்றைக்கு கிரேக்கமும் இலத்தியமும் செல்வாக்கு இழந்து விட்டன. ஈப்ரு மொழி செல்வாக்கிழந்தாலும் அந்த இசுரேலிலே அவருடைய – அந்த யூதருடைய – எழுச்சியினாலே இன்றைக்கு ஈப்ரு மொழியிலே மருத்துவத்தைக் கூடக் கற்பிக்கின்றார்கள். சீன மொழி என்றைக்குமே தளர்ச்சி அடையவில்லை. சீனர்கள் இடைவிடாத வணிகத்தாலே உலகத்தோடு தொடர்பு கொண்டு அவர்கள் வலிமை வாய்ந்த ஓர் இனமாக என்றைக்குமே இருந்த காரணத்தினாலே சீன மொழி நிலைத்து நிற்கின்றது. அது போலத் தமிழ் மொழியும் – உலகெங்கும் தமிழர்கள் புலம் பெயரும் மக்களாகச் சென்றாலும் தமிழ் மொழியும் – ஒரு நிலைபெற்று நிற்கின்றது.
மொகஞ்சதாரா, அரப்பா என்கிற இடங்களிலே – சிந்து சமவெளி நாகரிகம் என்று குறிப்பிடுகின்றோமே – அந்த அகழ்வாய்வு ஆராய்ச்சியிலே கிடைத்த அந்தக் கல்வெட்டுகள், மண்பானை ஓடுகளிலே அவர்கள் எழுதிய எழுத்துகள் எல்லாம் ஆகப் பழமை வாய்ந்தன. கி.மு 2500 அல்லது மூவாயிரம் என்று கூடச் சொல்லலாம். ஆகப் பழமை வாய்ந்தவை. அவற்றிலே இருக்கிற குறியீடுகளெல்லாம் கூடப் பழமை வாய்ந்தவை. அவற்றுள் ‘பொறை’ என்கின்ற ஒரு சொல்லை அண்மையிலே ஆய்வு செய்தார்கள். புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், ‘பொறை’, ‘காவடி’ என்கிற இரண்டு சொற்களையும் சொல்லி – காவடி என்பது ஆகத் தொன்மை வாய்ந்த ஒரு வழிபாட்டு முறை. அது கி.மு 2500 என்றால் இன்றைக்கு நாலாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையது – ‘காவடி’க் குறியீட்டையும் அவர் காண்பித்தார். வரிவடிவத்திலேயும் அது இருக்கின்றது. அந்தக் காவடிக் குறியீட்டுக்குப் பக்கத்தில் அந்தப் ‘பொறை’ என்கின்ற சொல்லும் இருக்கின்றது என்று காண்பித்து, மிகத் தொன்மை வாய்ந்தது என்று காண்பித்து இருக்கின்றார். அது போல ஆய்வாளர்கள் இந்த அகழ்வாராய்ச்சியின் மூலமாக இதை நிறுவியதனாலே நாம் ஒரு நாலாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் முன் தள்ளிச் சொல்லலாம். சில பேர் அது கூட ஐயத்திற்கிடமாகச் சொல்வார்கள். சிந்து சமவெளி நாகரிகம் நமக்குத்தான் உரியதா என்று கேட்பார்கள். அதை வலியுறுத்துகின்ற வகையிலே தெற்கே நம்முடைய அரிக்கமேடு போன்ற இடங்களிலெல்லாம் மண்பானைச் சில்லுகள் கிடைத்திருக்கின்றன. அந்தச் சில்லுகளிலே இருக்கின்ற வரி வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலே இருக்கின்ற அதே வரி வடிவத்தை ஒத்த வகையிலே இருக்கின்ற காரணத்தினால் அது நமக்குச் சொந்தமானதுதான் என்று நாம் சொந்தம் கொண்டாட முடியும். அந்த வகையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு, தமிழ் நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் முந்தையது என்று சொல்லலாம்.
தொகு: ஐயா! நம்முடைய தாய்மொழி தமிழுடைய சிறப்புகள் என்றால் என்னென்ன சொல்லலாம்?
மறை: தமிழுடைய முதற் சிறப்பு எளிமை! மிக எளிமையாக உரையாட முடியும் தமிழிலே. ஆக, எளிமையாக ஒலிப்பதற்கு, எளிமையாகப் பேசுவதற்கு, எளிமையாக எழுதுவதற்கு வாய்த்த ஓர் உயர்தனிச் செம்மொழி தமிழ் மொழிதான்! சீன மொழியிலே ஐம்பதாயிரம் எழுத்துகள் இருக்கின்றன. ஒரு சீன நாளிதழை நீங்கள் படிக்க வேண்டுமென்றால், குறைந்தது இரண்டாயிரம் எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும்! சீன எழுத்துகள் என்பவை – உங்களுக்குத் தெரியும் – சித்திர எழுத்துகள். ஆக, ஐம்பதாயிரம் சித்திர எழுத்துகள் எங்கே! வெறும் முப்பது எழுத்துகளைக் கொண்ட தமிழ் எங்கே! ஆக, தமிழின் முதற் சிறப்பு எளிமை.
அடுத்தது, அதன் இனிமை. தமிழைச் சொல்லும்பொழுது அடிவயிற்றிலே இருந்து நாம் பேச வேண்டிய தேவை இல்லை. மற்ற மொழிகளைச் சொல்லும்பொழுது அடிவயிற்றிலே, அந்த ஒலிப்பு தொடங்கும். அப்படிச் சொல்லாமல் மிக எளிமையாக நாம் தமிழ் மொழியைக் கையாளலாம். ஆக, எல்லா நிலைகளிலும் எளிமையும் இனிமையும் என்றும் மாறாத தன்மையும் கொண்டது தமிழ் மொழி. திருவள்ளுவர் எப்படிப் பேசினாரோ அதே போலத்தான் நாம் பேசுகின்றோம். அதனால்தான் திருக்குறள் நமக்குப் புரிகின்றது. ஆங்கிலம் பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னாலே வந்த மொழிதான். ஆனால், ஆங்கில மொழியிலேயே கி.பி 13ஆம் நூற்றாண்டு ஆங்கிலம் இன்றைக்கு இருக்கிற ஆங்கிலேயர்களுக்குப் புரியாது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய திருக்குறள் இன்று நமக்குப் புரியும் என்றால், காலம் மாறினாலும் என்றும் மாறாது இருக்கின்ற அந்த நிலைத்த தன்மை காரணமாகத்தான். தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால் இவற்றைச் சொல்லலாம்.
தொகு: நம் தமிழ் மொழிக்குக் கிடைத்த உலகளாவிய ஏற்பிசைவு (அங்கீகாரம்) என்று எதைச் சொல்லலாம் ஐயா?
மறை: உலகளாவிய ஏற்பிசைவு (அங்கீகாரம்) என்று சொல்லும்பொழுது, நம்முடைய இந்திய அரசு 2004-இலே ‘தமிழ்- செம்மொழி’ என்று ஓர் ஆணை பிறப்பித்து, அந்தச் செம்மொழிப் பேற்றை வழங்கியதைச் சொல்லலாம். அந்த அங்கீகாரம் அல்லது அறிந்தேற்பு என்பது எப்படி ஏற்பட வேண்டுமென்றால், தமிழனுடைய எழுச்சியால் ஏற்பட வேண்டும். தமிழன் – அவன் அருஞ்செயல் ஆற்றி (சாதித்து) அந்த அறிதலின் விளைவாக ஏற்பட வேண்டும். ஆனால், தமிழர்கள் இன்னும் அந்த அளவுக்குக் கிளர்ச்சி கொள்ளவில்லை. ஒரு காலத்தில் செருமானியர்கள் நிறையக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தார்கள். ஐம்பதுகளிலேயெல்லாம் ஆராய்ச்சி என்று சொல்லப் போனால், செருமானிய மொழி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்! ஏனென்றால் அது அன்றைய அறிவியல் மொழியாக இருந்தது. ஆனால், இன்றைக்குத் தமிழிலே அவ்வாறெல்லாம் இருக்கின்றதா என்றால், அது… நாம் சரியாக விடையளிக்க முடியவில்லை. அந்த ஏற்பிசைவு நம்மாலே ஏற்பட வேண்டும்! நாம் அதற்கு உழைக்க வேண்டும்!
தொகு: அழிந்து வரும் மொழிகள் என்று ஒரு பட்டியல் போட்டிருக்கிறார்கள். அதில் தமிழ் மொழியும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மை ஐயா?
மறை: அது ஒரு தவறான கருத்து. இந்த Endangered Languages என்று ஆங்கிலத்திலே குறிப்பிடுகின்றார்களே, அந்த அழிந்து வரும் மொழிகள் என்கின்ற பட்டியலில் தமிழ் என்றைக்குமே இடம் பெற்றது கிடையாது. அழிந்து வரும் மொழிகள் என்ற அந்தப் பட்டியலில் 2400 மொழிகள் இருப்பதாக யுனெசுகோ மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த மொழிகளெல்லாம் இருப்பது எங்கே என்றால் கிழக்கு சைபீரியா, வட அமெரிக்காவின் வடமேற்குப் பசுபிக் பகுதி, வடக்கு ஆத்திரேலியப் (Australia) பகுதி போன்றவற்றில். அந்தப் பகுதியிலே இருக்கின்ற, பெரும்பாலும் பழங்குடியினர் பேசுகின்ற மொழிகள் அல்லது பேச்சு மொழியாக மட்டும் இருக்கின்ற மொழிகள்தாம் அழிகின்ற நிலையில் இருக்கின்றன.
ஓர் எடுத்துக்காட்டு சொல்கின்றேன். அந்தமான் – நிக்கோபார் நமக்கெல்லாம் தெரிந்தது. நம்முடைய நாட்டிலே ஒரு பகுதி. அதிலே பதினேழு மொழிகள் இவ்வாறு இருக்கின்றன. அந்தப் பதினேழு மொழிகளில் ஏறத்தாழப் பதினான்கு மொழிகள் அழிந்து விட்டன. மூன்று மொழிகள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு மொழியைப் பேசுவதற்கு 77 வயது முதியவர் ஒருவர் மட்டுந்தான் இருக்கின்றார். அந்த 77 வயது முதியவர் இறந்து விட்டால் அந்த மொழி அழிந்து விடும். ஆக, மொழியைப் புழங்காவிட்டால், மொழியைப் பேசாவிட்டால், மொழியைக் கருத்துத் தொடர்புக்குப் பயன்படுத்தாவிட்டால் மொழி அழிந்து போய்விடும். அந்த வகையிலே அந்த மொழிகள் அந்த நிலையிலே இருக்கின்றனவே தவிர, தமிழ் அழிந்து போகின்ற பட்டியலில் இல்லை. ஆனால், இதை எதற்காகச் சொல்கின்றார்கள் என்றால், நாம் தமிழை நம்முடைய தமிழ்நாட்டிலேயே பேசுவதில்லை. இரண்டு பேரைப் பார்த்தால் ஆங்கிலத்திலே பேசுகின்றோம். அவ்வாறானால் நமக்கும் அந்தக் கண்டம் (ஆபத்து) ஏற்படலாம் என்பதற்காகச் சொல்வதே தவிர, அழிந்து போகும் பட்டியலிலே தமிழ் இல்லை.
தொகு: ஐயா! இன்றைய குழந்தைகள் எந்த அளவுக்குத் தூய தமிழில் பேசுகிறார்கள்?
மறை: குழந்தைகளுக்கு, சொற்களைச் சொல்கின்ற வைப்பு – இருப்பு, உள்ளத்திலே இருக்கின்ற சொற்கோவையினுடைய இருப்பு பெற்றோரிடமிருந்து வருகின்றது. பெற்றோர் அந்த வீட்டிலே எவ்வளவுக்கு எவ்வளவு தமிழைப் பயன்படுத்துகின்றார்களோ, எந்த அளவுக்குத் தமிழுக்கு முதன்மை வழங்குகின்றார்களோ அல்லது தமிழில் சொல்ல வேண்டும் என்ற அந்த மனப்பான்மை, அந்த உந்துதல், அந்த உணர்வு பெற்றோர்களுக்கு மிகுதியாய் இருக்குமேயானால் அந்தக் குழந்தைகளுக்கும் அது கட்டாயம் இருக்கும். பெற்றோர்களுக்கே அந்த உணர்வு இல்லை, அவர்கள் பிறமொழிச் சொற்களையே நாடுகின்றார்கள், அவற்றையே இல்லத்திலே பயன்படுத்துகின்றார்கள் என்றால் அந்தக் குழந்தைக்கு அது வருவதற்கு வாய்ப்பு இல்லை. அது பெற்றோருக்கு எப்பொழுது வரும்?… பெற்றோருக்கு அது ஒரு குமுகக் (சமூகக்) கடப்பாடு என்ற அந்த எண்ணம் ஏற்பட்டால் வரும்.
புலம்பெயர் தமிழர்களைப் பார்த்தால், அவர்கள் நல்ல தமிழிலே உரையாடுகின்றார்கள். அமெரிக்காவுக்கோ, சிங்கப்பூருக்கோ போனால் நல்ல தமிழிலே வீட்டிலேயே பேசுகின்றார்கள். அந்தக் குழந்தைகளெல்லாம் அருமையாக நல்ல தமிழிலே பேசுகின்றன. நமக்கெல்லாம் வியப்பாகவே இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால், தமிழை நம்முடைய மாநிலத்திலே இரண்டாவது மொழியாக அறிமுகப்படுத்துவதற்குக் கூடப் போராடிக் கொண்டிருக்கின்றோம்; இத்தனை ஆண்டுக் காலம் நம்முடைய ஆட்சி இருந்தாலும். ஆனால், அமெரிக்காவிலே பதினான்கு மாநிலங்களில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கல்வி நிலையங்களிலே பயிற்றுவிக்கப்படுகின்றது. காரணம் யார்?… பெற்றோர்கள்! அவர்கள் ‘அமெரிக்கத் தமிழ்க் கழகம்’ என்று ஓர் அமைப்பையும், இந்தப் பக்கம் ‘கலிபோர்னியாத் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பையும் உருவாக்கி எல்லாக் குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுப்பதை மிக எளிமையாகக் காணொலிகள் மூலமாக, ஒலிப்பேழைகள் மூலமாக, பாட்டுக்கள் மூலமாக, இசை மூலமாக, நாடகத்தின் மூலமாகப் பரப்பி, தமிழ் ஆர்வம் மேலிட்டு இன்றைக்கு அங்கே அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளெல்லாம் மிக அருமையான தமிழிலே எந்த வழுவும் இல்லாமல், எந்தக் கலப்பும் இல்லாமல் அவர்கள் இல்லத்திலே பேசுவதை நீங்கள் அங்கே சென்றால் கேட்கலாம்.
தொகு: குழந்தைகளைப் பார்த்தீர்களானால், அப்பா-அம்மாவை ‘அப்பா – அம்மா’ என்று கூப்பிடுவதை விட’ டாடி – மம்மி’ என்று கூப்பிடுவதையே மிகவும் பெருமையாக நினைக்கின்றன. அது பற்றிச் சொல்லுங்கள்!
மறை: ‘டாடி – மம்மி’ என்று கூப்பிட்டால் பெற்றோர்களுக்குப் பெருமையாக இருக்கின்றது. அதனால் குழந்தைகளுக்கு வேறு வழியில்லை. ஆனால், அவ்வாறு அழைப்பது தவறு என்று பெற்றோர்கள் கருதத் தொடங்கினால் குழந்தைகள் அவ்வாறு அழைக்க மாட்டார்கள்.
இந்தத் தாய்மொழி என்றால் என்ன என்பது பற்றி மலேசியப் பாவலர், அண்மையிலே மறைந்த சீனி.நயினா முகமது அவர்களுடைய பாக்களிலே இருந்து இரண்டு மூன்று விருத்தங்களை – நீங்கள் இசைவு கொடுத்தால் – சொல்ல விரும்புகின்றேன். அவர் சொல்லுகின்றார்,
“தாய்மொழி என்பது தாயின் மொழி – அது
தாயும் நீயும் பேசும் மொழி
ஆயிரம் மொழிகள் நீ அறிந்தாலும்
ஆன்மா உணர்மொழி அந்த மொழி – அது
அன்னையின் கருவில் வந்த மொழி
அன்னையின் மடியில் கிடக்கையிலே – அவள்
அன்பினைப் பாலாய்க் குடிக்கையிலே
சின்ன உன் செவியில் சில்லெனப் பாய்ந்து
தேனாய் இனித்திடக் கேட்ட மொழி – உன்
சிந்தையில் விதைகள் போட்ட மொழி”
“தாய்மொழி என்பது தாயின் மொழி! அது தாயும் நீயும் பேசும் மொழி” என்று அந்தப் பாவலர், அந்தத் தாய்மொழி என்பது நம்முடைய உணர்வோடு, நம்முடைய கனவோடு… நீங்கள் என்னதான் பிறமொழி படித்தாலும் இன்னொரு மொழியிலே கனவு காண முடியுமா? உங்கள் கனவிலே வருவது எந்த மொழி?
தொகு: தாய்மொழி!
மறை: நீங்கள் அழும்பொழுதும் சிரிக்கும்பொழுதும் வரும் மொழி என்ன மொழி? அந்த மொழியை நாம் உயர்வாகக் கருத வேண்டும் என்று பெற்றோர் நினைத்தால் இந்த நிலை மாறலாம்.
தொகு: ஐயா! தமிழ் மொழிக்குப் பெரும் பங்காற்றிய தமிழ் அறிஞர்களைப் பற்றிச் சொல்லுங்கள்!
மறை: தமிழ் மொழிக்குப் பெரும் பங்காற்றிய தமிழ் அறிஞர்கள் என்றால் தொல்காப்பியர் காலத்திலே தொடங்கி இன்றைக்கு இருக்கின்ற சிலம்பொலி செல்லப்பன், ஔவை நடராசன், புலவர்மணி இளங்குமரன் வரை அவ்வளவு பேரையும் சொல்லலாம். அது மிகப் பெரும் பட்டியல்! எண்ணில் அடங்காது. ஆனால், தமிழ்மொழியின் பெருமையை நம்முடைய உள்ளத்திலே ஊன்றுகின்ற வகையிலே பாரதியாரும், பாரதிதாசனும் உணர்வை விதைத்திருக்கின்றார்கள்.
பாரதியார் “வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ் மொழி! வாழிய! வாழியவே! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே!” என்று பாடிய பாடல் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு” என்று இறைவனுக்குப் பாடியதைப் போல அந்த உணர்வின் அடித்தளத்திலே சொல்லினார். “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! அதைத் தொழுது படித்திடடி பாப்பா!”, “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்!” என்றெல்லாம் தமிழை ஒரு தெய்வ நிலைக்கு வைத்துப் பாடிய பாரதியார்;
அவருடைய வழியிலே வந்த பாரதிதாசன், “உரம்பெய்த செந்தமிழ்க்குத் தீங்கொன்று நேர்ந்ததென்று உரைக்கக் கேட்டால் நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கி நண்ணிடாரோ!”, “பங்கம் நேர்ந்திடில் தாய்மொழிக்கு உயர் பச்சை ரத்தம் பரிமாறிடுவோம்!” என்றெல்லாம் கிளர்ச்சியும் எழுச்சியும் ஊட்டுகின்ற வகையிலே, தமிழனையே தமிழுக்குப் போராடத் தூண்டுகின்ற வகையிலே ஒரு கிளர்ச்சியோடு பாடிய பாரதிதாசன் – எண்ணமெல்லாம் தமிழ்! அவர் பாவெல்லாம் தமிழ்! “தாயெழில் தமிழை, என்றன் தமிழரின் கவிதைதன்னை ஆயிரம் மொழியில் காண இப்புவி அவாவிற்று என்ற தோயுறும் மதிவினாறு தொடர்ந்து என்றன் செவியில் வந்து பாயும் நாள் எந்த நாளோ! ஆரிதைப் பகர்வார் இங்கே!” என்றெல்லாம் கனவு கண்டார்கள். அவர்களெல்லாம் தமிழ் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், தமிழ் அரியணை ஏற வேண்டும் என்று கனவு கண்டார்கள். அதே நேரத்திலே, “மணக்க வரும் தென்றலிலே குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை? தளப்பரிதாம் துன்பம் இது! தமிழ்த் தெருவில், தமிழ்நாட்டில் தமிழ்தான் இல்லை!” என்று நடப்பு நிலையைப் பற்றியும் வருத்தப்பட்டார்கள்.
தொகு: நம்முடைய தாய்மொழி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்குவதற்கு என்னவெல்லாம் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
மறை: அதற்கு இரண்டு செயல்கள் தேவை! ஒன்று, இன்றைக்கு இருக்கின்ற பல்வேறு புதிய துறைகள், இந்தப் புத்தம் புதிய துறைகள், இந்தத் துறைகளுக்கேற்பத் தமிழிலே அந்தத் துறை நூல்கள் வளர்ச்சிக்கு நாம் வழி வகுக்க வேண்டும்!
எடுத்துக்காட்டாக, Nano-Technology என்று சொல்கின்றீர்கள். ஒரு… நுண்ணுவியல் துறை என்று அதைச் சொல்லலாமா? அந்த Nano-Technology-ஐ எப்படிச் சொல்வது, Nano-Technology பற்றிய அந்த நுட்பங்களை எவ்வாறு கூறுவது என்ற சிந்தனை அந்த வல்லுநர்களுக்கு ஏற்பட வேண்டும். அவை தமிழிலே வர வேண்டும். அது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம், அவை தமிழிலே வருவது மட்டும் போதாது. கண்டுபிடிப்புகள் தமிழனாலே உருவாக்கப்பட வேண்டும்! தமிழன் அந்தக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தால் அந்தக் கண்டுபிடிப்புகளைத் தெரிந்து கொள்வதற்கு, அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தமிழைப் படிக்க வேண்டும் என்று உலகத்திலே இருக்கின்றவர்கள் கருதுவார்கள். ஆக, தமிழர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை, புத்தாக்கங்களை, புதுப்புனைவுகளை உருவாக்க வேண்டும். அறிவியல் துறையிலே, தொழில்துறையிலே, வணிகத் துறையிலே தமிழ், தமிழன் மேலோங்கி இருந்தால் தமிழ் தானாக மேலோங்கும்.
ஒரு பக்கம் மொழி வளர்ச்சி. இன்னொரு பக்கம் இனம் – தமிழினம் – அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து தலைமை பெற வேண்டும்! “வையத் தலைமை கொள்!” என்றாரே பாரதி! அனைத்திலும் தமிழன் தலைமை தாங்குவான் என்ற நிலை ஏற்படுமானால் அந்தத் தலைமை தாங்கிய தமிழன் மொழியைப் படிப்போமே என்ற எண்ணம் மற்றவர்களுக்கு ஏற்படும்.
தொகுப்பாளர்: ஐயா! உலகத் தாய்மொழி நாளை ஒட்டித் தாய்மொழிகளைப் பற்றியும் தமிழ்மொழியைப் பற்றியும் நிறைய சுவையான தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டீர்கள். மிக்க நன்றி! வணக்கம்!
மறைமலை இலக்குவனார்: வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ் மொழி! வாழிய! வாழியவே! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே! வணக்கம்!
https://www.youtube.com/watch?v=LfZWNYXdg8Q
எழுத்துவடிவம்:
Leave a Reply