50-ஆவது சிறப்பு பொன்விழா சந்திப்புநிகழ்வில்
அரசுக் கிளை நூலகத்திற்கு நூல்கள் வழங்கும் விழா:

 சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் வழங்கினார்

     வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின்  நூலக வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 50-ஆவது சிறப்புப் பொன்விழா ‘சந்திப்பு’ நிகழ்வில், கிளை நூலகத்திற்கு  வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்துகுமார் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார்.

     இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். விழாவில் பங்கேற்ற அனவரையும் கிளை நூலகர் கு.இரா.பழனி வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தெள்ளாறு ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கே.ஆர்.சீதாபதி, நூலகத்தில் புதிதாகச் சேர்ந்த நூலக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உரூ.1000/- செலுத்தி நூலகப் புரவலராகச் சேர்ந்த பொறியாளர் நித்தியாமுருகேசனுக்கு வந்தவாசி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் தரணிவேந்தன் பாராட்டு வழங்கினார்

      தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.தாலின் பிறந்த நாளை  முன்னிட்டு, சென்னையில் பல்வேறு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவருக்கு வழங்கிய தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மற்றும் சமூக – வரலாற்று நூல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்திற்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வழங்கிச் சிறப்பித்தார்.

     வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன், செயலாளர் பா.சீனிவாசன், தி.மு.க. தெள்ளாறு ஒன்றியச் செயலாளர்கள் இராதா, இளங்கோவன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.

       நிறைவாக,  நூலக அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் நன்றி கூறினார்.

வந்தை அன்பன்