மனிதன் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்களே! 

     வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற உலகப்புத்தக நாள் விழாவில், “ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்குப் படிக்கட்டுகளாக இருப்பவை புத்தகங்கள” என்று முன்னாள் மாவட்ட மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் பேசினார்.

       இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நிகழ்வில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி வரவேற்றார்.

        வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் 100 பள்ளி மாணவ- மாணவிகள் நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். புதிய நூலக உறுப்பினரகளுக்கான அடையாள அட்டையை வந்தவாசி இராமலிங்கம் குழுமம் உரிமையாளர் இரா.சிவக்குமார் வழங்கினார்.

      காஞ்சிபுரம்  மாவட்ட முன்னாள் மருத்துவ அலுவலர் மருத்துவர் எசு.குமார் உலகப் புத்தக நாள் விழாவையொட்டி நடைபெற்ற சிறப்புப் புத்தகக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.  அப்பொழுது அவர், :  ” இந்தப் பூமியில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் உயிர் வாழ உடை, இடை, இருப்பிடம்  தேவை. அதேபோல், மனிதர்கள் அறிவில் சிறந்தவர்களாக மாறுவதற்கு உறுதுணையாக இருப்பவை புத்தகங்களே. வந்தவாசிபோன்ற பின்தங்கிய பகுதியில் வாழும் ஏழை மாணவ-மாணவிகள் அரசு நூலகங்களில் உள்ள பல்லாயிரம் நூல்களை எடுத்துப் படித்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வெண்டும். இன்றைக்கு அரசின் உயர் பதவிகளில் இருக்கும் பலரும் அரசு நூலகங்களிலுள்ள நூல்களைப் படித்து, அதன் வழி உயர்ந்தவர்கள் என்பதை அறியும்போதுதான் நூலகத்தின் பயன் நமக்குத் தெரிகிறது.

        நாளும் நேரமொதுக்கி, இரண்டு பக்கங்களாவது படிக்கிற நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். மதிப்பெண் பெறுவதற்கான பாடப்புத்தகங்களைப் படிக்கிறீர்கள். இந்த  மன்பதையில்  நீங்கள் உயர்ந்த மனிதர்களாக மாற வேண்டுமானால், பாடப் புத்தகம் தாண்டிய ஏனைய  குமுகம்(சமூகம்), இலக்கியம், வரலாறு  முதலான அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற ஒரு மனிதனால் இந்தக் குமுகாயத்தை(சமுதாயத்தை)ச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.குமுகாயத்தை(சமுதாயத்தை)ச் சரியாகப் புரிந்துகொண்டால்தான், அதில் நாம் முன்னேறிச் செல்வதற்கான பாதையை வகுக்க முடியும்.ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் உயர்வதற்கு படிக்கட்டுகளாக இன்றைக்கும் என்றைக்கும் இருப்பவை புத்தகங்கள் தான்.”  என்று பேசினார்.

   நிகழ்வில், ஓய்வுபெற்ற மின்துறை அலுவலர் கே.சண்முகம்,  சிரீ கிருட்டிணா  பயிற்சி மையம் முதல்வர் பா.சீனிவாசன், ஆசிரியர் சக்கரவர்த்தி  முதலானோர் கலந்து கொண்டனர்.

   உலகப் புத்தக நாள் விழா சிறப்புக் கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்களைச் சேர்ந்த அறிவியல், குமுகம்(சமூகம்), விளையாட்டு, மருத்துவம், இலக்கியம், சிறுவர் கதைகள், கல்வி தொடர்பான நூல்கள் இடம்பெற்றிருந்தன.

    நிறைவாக, மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

  உலகப் புத்தக நாள் விழா நிகழ்வை மூன்றாம் நிலை நூலகர் சோதி, அலுவலக உதவியாளர் மு.இராசேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

-வந்தை அன்பன்

[படங்களைச்சொடுக்கினால் பெரிதாகக் காணலாம்.]