வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல்,

மாணவர்கள் மனம் வைத்தால், எதையும்  ஆற்ற முடியும்

                        – கவிஞர் மு.முருகேசு-

     வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறப்பு உரையரங்கில், வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல் மாணவர்கள் மனம் வைத்தால், எதையும் அவர்களால்  ஆற்ற – சாதிக்க- முடியும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார்.

     வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கான

சிறப்பு உரையரங்க நிகழ்விற்கு, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் மொழிப்போர் ஈகையர் அ.மு.உசேன் தலைமையேற்றார்.

பள்ளியின் தலைமையாசிரியர் பெ. வேதபிரகாசு முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்  செ.திவாகர் அனைவரையும் வரவேற்றார்.

     ‘மாணவர்கள் எனும் மகா சக்தி’ எனும் தலைப்பில்  பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு

தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வந்தவாசி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு  பேசினார். அப்போது, அவர்,

       “நாம் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருக்கின்றோம்; நமது பெற்றோர்கள் படிக்காதவர்கள்;  எளிமையான அரசுப்பள்ளியில் படிக்கின்றோம் என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிறோம்.

மாணவர்களாகிய உங்களுக்குள் மகத்தான ஆற்றல் பொதிந்து கிடக்கிறது.  உங்களுக்குள்

இருக்கும்  ஆற்றலை நீங்கள் உணர்ந்துகொண்டால், உங்களால் எதையும் ஆற்ற முடியும்.

     இந்தியத் திருநாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலவர் பதவியை அலங்கரித்த பெருமகனார் ஆ.ப. செ.அப்துல் கலாம், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தன்னாலும் அருவினை ஆற்ற முடியும் என்று பள்ளி மாணவனாக இருந்த போதே, மனத்தில் உறுதிபூண்டார். அறிவியலாளராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். பொது வாழ்வில் ஒரு மனிதன் எவ்வளவு நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும் என்பதற்கான  எடுத்துக்காட்டாக உத்தமத் தலைவராக வாழ்ந்தார்.

   இதுவரை இருந்த இந்திய குடியரசுத் தலைவர்களிலேயே அப்துல் கலாம் அவர்கள் தான், அதிகமான பள்ளி மாணவ – மாணவிகளைச் சந்தித்துப் பேசியவர். குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் அனைவரையும் அன்புடன் அழைத்து  விருந்தோம்பியவர். இந்தியாவெங்குமுள்ள பல  நூறாயிரம் மாண-மாணவிகளுக்கு நம்பிக்கையூட்டிய கலாம் வழியில் நாமும் சிந்தித்தால், நம்மாலும் சாதிக்க முடியும்.   

  தேர்வுக்காக மட்டுமே படிக்காமல், எதையும் புரிந்து படியுங்கள். பாடப் புத்தகங்களோடு மட்டும் உங்களின் புத்தக வாசிப்பு சுருங்கி விடக்கூடாது. சமூகம், கலை – இலக்கியம், அறிவியல், விளையாட்டு சார்ந்த பலவகைப்பட்ட  நூல்களையும் படியுங்கள். படிப்படியாக வாழ்வில் முன்னேறியவர்கள், புத்தகங்களைப் படித்துத் தான் உயரங்களைத் தொட்டார்கள் என்பதை உங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொள்ளுங்கள்.

    “‘வறுமை நிலைக்குப் பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” எனும் பாடல் வரிகளை

மறந்துவிடாதீர்கள்.  வறுமை நிலையை எண்ணிக் கலங்காமல், உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளாமல் முயன்று படியுங்கள். மாணவர்களாகிய நீங்கள் மனம் வைத்தால், எந்த அருவினையையும் ஆற்றமுடியும்”

என்று குறிப்பிட்டார்.

    அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன் மாணவர்களின்  நினைவாற்றலுக்கான  பயிற்சிகளை வழங்கினார்.

பள்ளித் தமிழாசிரியர் சுமதி, தமிழ்ச் சங்கச் செயலாளர் பா.சீனிவாசன், பொருளாளர் எ.தேவா, கவிஞர் பு.குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஆசிரியர்கள் அந்தோணிசாமி, தனசேகரன், சுதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக, எசு.ஆர்.எம். இன்போடெக் கணினி பயிற்சி மையத்தின் சார்பில், பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

– வந்தையன்பன்