மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன
தமிழ் ஐக்கூ நூற்றாண்டு விழாவில்
மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன!
சென்னை. மார்கழி 09, திசம்.24, பனுவல் புத்தக நிலையமும், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஐக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார்.
சப்பானிய ஐக்கூ கவிதைகள் மாக்கவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. தமிழில் ஐக்கூ அறிமுகமாகி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி, ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்…’ எனும் நிகழ்ச்சி பனுவல் புத்தக அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மு.முருகேசு எழுதிய இரு ஐக்கூ நூல்கள் வெளியிடப்பட்டன. ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ எனும் ஐக்கூ கவிதை நூலை இயக்குநர் என்.இலிங்குசாமி வெளியிட, இயக்குநர் வசந்தபாலன் பெற்றுக்கொண்டார்.
தமிழில் ஐக்கூ கவிதைகளின் நூற்றாண்டு வரலாற்றைப் பதிவுசெய்துள்ள ‘தமிழ் ஐக்கூ நூற்றாண்டுத் தடத்தில்’ எனும் கட்டுரை நூலை வரலாற்று ஆய்வாளர் முனைவர் மு. இராசேந்திரன், இ.ஆ.ப. வெளியிட, இயக்குநர் சீனு. இராமசாமி பெற்றுக்கொண்டார்.
விழாவிற்குத் தலைமையேற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேசும்போது : “தமிழில் இன்றைக்கு ஒரு கவிதை இயக்கமாய் மாறியிருக்கும் ஐக்கூ கவிதைகளை ஏராளமான இளைய கவிஞர்கள் ஆர்வமாய் எழுதி வருகிறார்கள். மொழியின் அடர்த்தியோடு வெளிப்படும் ஐக்கூ கவிதைகள் ஒரு செய்தியைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன. உலக அளவில் இன்றைக்குப் பல கோடி கவிஞர்கள் ஐக்கூ கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே அமெரிக்காவில்தான் ஐக்கூ எழுதும் கவிஞர்கள் அதிகமாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மு.முருகேசு தொகுத்துள்ள ’தமிழ் ஐக்கூ நூற்றாண்டு தடத்தில்’ எனும் இந்த நூலில், தமிழில் கடந்த ஒரு நூற்றாண்டின் ஐக்கூ குறித்த அனைத்துத் தரவுகளும் ஓர் ஆவணம் போல் தொகுக்கப்பட்டுள்ளன. கவிஞர்களுக்கு மட்டுமல்ல, ஆய்வாளர்களுக்கும் பயன்படும் முறையில், எந்த விருப்பு வெறுப்புமற்று தொகுக்கப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பாகும்” என்றார்.
நூலை வெளியிட்ட இயக்குநர் என்.லிங்குசாமி கூறியதாவது : “கவிதை வடிவங்களில் எனக்குப் பிடித்தது ஐக்கூ கவிதையாகும். இப்படிச் சொல்வதால் மற்ற கவிதைகள் பிடிக்கா என்பது பொருளல்ல. எனக்கு ஐக்கூ எழுத வருவதால் அதை நான் எழுதுகின்றேன். முருகேசும் நானும் ஒரே சாதி. இருவருமே ஐக்கூ கவிஞர் சாதி. ’ஆகா… நான் எழுதியிருக்க வேண்டிய கவிதையை இவர் எழுதிவிட்டாரே’ என்பதைப்போல் பல ஐக்கூ கவிதைகளை முருகேசு எழுதியிருக்கிறார். ஒரு ஐக்கூ கவிஞர் தன் வாழ்நாளில் ஒரு நல்ல ஐக்கூ எழுதினாலே பெரிய சாதனை என்பார்கள். முருகேசு இந்த ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ கவிதை நூலில் பல நல்ல ஐக்கூ கவிதைகளை எழுதியுள்ளார் “என்றார்.
நூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது : “ஐக்கூவை வாசிக்க சென் பெளத்தம் அறிந்திருப்பது மிகவும் பயனளிக்கும். முருகேசு எழுதியுள்ள பல கவிதைகள் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தன. தமிழில் ஐக்கூ கவிதைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சப்பானிய ஐக்கூ கவிதைகள் வடிவத்தில் சிறியனவாக இருந்தாலும், வாசிக்க வாசிக்கப் பல பொருளார்ந்த கதவுகளைத் திறப்பனவையாக உள்ளன” என்று கூறினார்.
நூலை வெளியிட்ட முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப. கூறியதாவது : “தமிழில் புதுக்கவிதையின் வரலாற்றை அறிந்துகொள்ள வல்லிக்கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் பயன்படுவதைப்போல, மு.முருகேசு எழுதியிருக்கும் இந்த ஐக்கூ வரலாற்று நூல் காலங்கடந்தும் ஒரு வரலாற்றுப் பதிவாக பேசப்படும்” என்றார்.
நூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் சீனு. இராமசாமி பேசும்போது : “ஐக்கூ கவிதைகளில் ஒரு காட்சியை அப்படியே படம் பிடிப்பதுபோல் மனத்தில் பதியவைக்க வேண்டும். தமிழில் ஐக்கூ எழுதும் கவிஞர்களை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து ஆர்வத்தோடு செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசு எழுதியுள்ள இந்த ஐக்கூ கவிதை நூலும், ஐக்கூ குறித்த வரலாற்று நூலும் இன்னும் பலரை ஐக்கூ எழுதத் தூண்டும் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.
விழாவில், ஈழக் கவிஞர் வ.ஐ.ச.செயபாலன், கவிஞர் செயபாசுகரன், இயக்குநர் பிருந்தா சாரதி, பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரம், கவிஞர் மணிசண்முகம், எழுத்தாளர் பாசுகரன் கிருட்டிணமூர்த்தி முதலான ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை கவிஞர் அ.வெண்ணிலா தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு நன்றி கூறினார்.
(பெரிதாகக் காணப் படத்தை அழுத்துக.)
Leave a Reply