???????????????????????????????

சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் செயங்கொண்ட விநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் படிக்கும் 104 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் ஆனி 32, 2045 / 16.07.2014 அன்று முன்னேற்ற வழி ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களால் நடத்தப் பெற்றது.

கல்வி மேம்பாட்டுக் குழுச் செயலர் திரு வயி.ச.இராமநாதன் அவர்கள் இப்பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

[ 1. செயலர் திரு வயி.ச. இராமநாதன், ஊக்குநர் சொ.வினைதீர்த்தானுக்குப் பொன்னாடை அணிவித்தல்

2. பொருளாளர் திரு திருஞானம் ,  செயலர் திரு வயி.ச. இராமநாதன் ஆகியோருடன் வினைதீர்த்தான்

3. ஆசிரியப் பெருமக்கள் திருவாளர்கள் கோமதி, கண்ணன், பொருளாளர் திருஞானம்,  செயலர் திரு வயி.ச. இராமநாதன், உடற்கல்வி ஆசிரியர் திரு முத்துப்பழநியப்பன், திரு சார்லசு  ஆகியோருடன் வினைதீர்த்தான்]

நாச்சியாபுரம் வினைதீர்த்தானின் அருமைத் தாயாரும் அவரின் அரும் துணைவியார் திருமிகு அன்னபூரணி பிறந்த ஊராகவும். அவர் அன்புத் தமக்கையார் புகுந்த ஊராகவும். திகழ்வதால் இவ்வூர் பள்ளியின் கல்விப் பணியில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதைாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

வழக்கமான கற்றல், நினைவாற்றல் பெருக்கல், மனித உறவு மேம்பாட்டுச் சிந்தனைகளை மாணவரிடையே விதைத்தார்; ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரிடமும் மற்ற ஆசிரியர்களிடமும் ஆங்கிலமும் தமிழும் பயிற்றுவித்தலில் தன் பட்டறிவு முறை பற்றிப் பகிர்ந்துகொண்டார். இவற்றால் மாணாக்கர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி கொண்டனர்.

மனித நேயம் வளர்த்தல், கற்றல், நினைவாற்றல் பெருக்கல், தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இப் பயிலரங்கத்தைச் சிறப்பாக நடத்தினார்.

மாணாக்கர்களிடம் பெயர்களைக்கேட்டு அப்பெயர்களைக் கொண்டே தன் மனிதநேய விளக்கவுரையைத் தொடர்ந்தார். முதல் மாணாக்கி, ‘தேனம்மாள்’ என்று தன் பெயரைக் கூறினார். நம் குரல் எப்போது தோனக இருக்கும் என்று கேட்டவர் விடையின்மையால், தானே விளக்கினார். “நாம் பேசும் சொற்கள் மற்றவருக்குப் பயன்பட்டால், அவர்களைப் போற்றினால், அடுத்தவரைப் பாராட்டினால் நம் குரல் அவர்கள் காதுகளில் தேனாகப் பாயும். தேனம்மாள் ஆகலாம்” என்றார். அடுத்தவர், ‘ரூபா’ என்று பெயர் சொன்னார். ” வடிவம், உருவம் எப்போது அழகாக இருக்கும்” என்று அவரிடம் கேட்டார். அமைதியே விடையானாதால் இவரே விளக்கினார்.

“அன்பெனும் மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே” என்ற பாடலைக் கூறி யாரும் பார்த்தறியாத ஆண்டவன் எப்படி அதிரூபன் ஆனான்? அடுத்தவர் மீது காட்டிய அன்பினால்!

அடுத்தவருக்காக இரத்தம் சிந்தியதால்!

ஆண்டவன் ‘நிகரற்ற பெரியோனும் அளவற்ற அருளாளனும்’ ஆவதும் அன்பால் விளைந்த அருளாலே!

“அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே” என்றும் அன்பும் சிவனும் ஒன்றே என்றும் அருளாளர்கள் கூறினார்கள் எனவும் விவரித்தார்.

எனவே புறம் தோல் போர்த்திப் புழுஅழுக்கு மூடிய இந்த உடல் நெட்டையாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும், நிறம் சிவப்பென்றாலும் கறுப்பென்றாலும், சித்தம் அழகியதாய், பிறர் நலம் பேணினால் பிறர் கண்ணுக்கு அழகிய ரூபாவாக, வடிவழகாகத் தென்படுவீர்கள் என்றார்.

அடுத்து பண்பாட்டு அடிப்படையில் முன்னேற்றம் காண்பது குறித்து விளக்கினார்.

1.புன்னகையுங்கள் 2.வணங்குங்கள் 3.வாழ்த்துங்கள்

4.பாராட்டுங்கள் 5.வழங்குங்கள்

6.தவற்றுக்கு மன்னிப்புக் கேளுங்கள். தவறு திரும்ப வராது பார்த்துக் கொள்ளுங்கள்.

7.நன்றி கூறுங்கள்.

முதலியவற்றை எடுத்துக்காட்டுக்களோடு கூறி மாணவர்களை வீட்டிற்குப் போனவுடன் அம்மாவை, அப்பாவை, தம்பி, தங்கையரை எப்படிப் பாராட்டுவீர்கள் என்று குறிப்புப் புத்தகத்தில் எழுதச் சொன்னார். அவற்றைப் பயன்படுத்தி “இன்சொல் இனிதீன்றலை” காணச் சொன்னார். இன்சொலால் “அல்லவை தேய அறம் பெருகும்” என்பதையும் கூறினார்.

மனித உறவு சம எதிரிடையான (Reciprocal) “கண்ணாடி ” போன்றது அதன் முன்னாடி நீ சிரித்தால் அது சிரிக்கும். நீ உன் தம்பியைச் ”செல்லமே” என்றால் அவன் ”அக்கா” என்று கட்டியணைப்பான். இல்லாவிடில் “போடி” என்று ஓடிவிடுவான்.

ஆக்கமும் கேடும் சொல்லால் வருகிறது. மனக்கதவைத் திறந்திடும் இரு திறவுகள் நன்றியும் அருள்கூர்ந்து / தயைகூர்ந்து ஆகியனவாகும். இவற்றைச் சோர்வின்றி வழக்கமாமகக் கைக் கொண்டால் வாழ்வில் வெல்லலாம் என்றார்.

 

கற்றல் பற்றி படி, பதி (மனத்தில்), படித்ததைப் பெருக்கு, படித்தவற்றைக் குறிப்பிடு, படித்ததைச் செவ்வயைாக்கு, படித்ததை மீளபவும் படி என விளக்கினார். ஆங்கிலத்தில் ஆறு ஆர் /R (6 “R”s-Read, Record, Reproduce, Refer, Rectify, Revise) எனக் குறிப்பிடப்படுவனவற்றை க் குறிப்பிட்டு விளக்கினார். இதன்மூலம் ஒவ்வொரு கேள்வியிலும் உள்ள முதன்மையான 5,6 சொற்களைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதிவைத்துக்கொண்டு நினைவு கூர்தல் ஆராய்வது குறித்து விளக்கினார். . “சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு சொல் மனப் பழக்கம் – மீள்பயிற்சியின் வலிமை(Power of Repetition) என மாணாக்கர்களிடம் மீள்பயிற்சியின் இன்றியமையாமையை இனிதே விளக்கிப் பதிய வைத்தார்.