வேதங்கள் எழுதப்பட்ட மொழி “தமிழி” : ஆராய்ச்சியாளர் மூர்த்தி
பழமையான 4 வேதங்களும் “தமிழி” என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்சுகிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதரசிரீ நிறுவனரும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.
மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (திச.27) நடத்தியது. இதில் வேதசிரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பின்வருமாறு பேசினார்:
பழமையான 4 வேதங்களும் சமசுகிருதத்தில் எழுதப்படவில்லை. அவை “தமிழி’ என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமசுகிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்கக் கூறிய போது அவர்கள், இதில் உள்ள பல சொற்கள் சமசுகிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சமசுகிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.
வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
சங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர அறிவியல், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.
மேற்கத்திய அறிஞர்களான பித்தாகரசு, தார்வின், ஐசக் நியூட்டன், ஐன்சுடின், பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கெனவே நம் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. மேலும், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும் அறிவியல், கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.
இவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி அறிவியல் புத்தகங்களாக உருவாக்கியுள்ளது. இதனைக் கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாக ஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.
இந்தக் கருத்தரங்கினை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் முனைவர் இரா.கண்ணன் தொடங்கி வைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமை வகித்தார். இதில் குமரி அனந்தன் முதலான பலரும் கலந்து கொண்டனர்.
[சமசுகிருதம் தன் நெடுங்கணக்கை (வரிவடிவத்தை)த் தமிழைப்பார்த்துத்தான் உருவாக்கிக் கொண்டது எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் தெரிவித்துள்ளதைப் பார்க்கும் பொழுது, ‘தமிழி’ என்பது தமிழ் என்பதன்றி வேறல்ல எனப் புரிந்து கொள்ளலாம். தமிழுக்கு முன்பு மூத்த முதன்மொழி இருந்தது என்ற தவறான வாதம் ஓய்ந்து வரும் வேளையில் ‘தமிழி’ எனத் தனி மொழி இருந்தது என்பது போல் ஆராயாமல், ஆராய்ச்சியாளர் மூர்த்தி வேதக்காலத்தில் தமிழே பயன்பாட்டு மொழியாக இருந்தது என்பதை வலு சேர்க்கும் வகையில் தம் ஆராய்ச்சியைத் தொடர வாழ்த்துகள்!]
வேதத்தில் உள்ள இரண்டு பாடல்களையாவது விளக்கங்களுடன் கொடுத்திருந்தால் மேலும் உதவியாகவும் நம்பத்தக்கதாகவும் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். பழந்தமிழ்ப்பாடல்களான [சங்கப்பாடல்கள்] மின் தகடுகளில் குறுந்தகடுகள் எழுத்துருவில் பதிவுசெய்து வெளியிட்டால் ஆய்வாளர்களுக்கு மேலும் உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். வேறு எவரேனும் வெளியிட்டிருந்தாலும் தெரியப்படுத்தும்படி கோருகிறேன்.